தந்தை பெரியார் சிந்தனைகள் 11

(தந்தை பெரியார் சிந்தனைகள் 10 இன் தொடர்ச்சி)

 1) சருவசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சருவத்திலும் புகுந்து சருவத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராக இருந்தால் சருவத்தையும் ஒன்றுபோலவே சிருட்டிக்கலாமல்லவா?[குறிப்பு 1]. வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும் வியாபகமும் சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.

(2) கடவுள் ருவவியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும் மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம் பொருள் நேரம் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்?

(3) இன்றையநாள் எத்தனைக் கடவுளர்கள் பணக்காரக் கடவுளாகவும், ஏழைக்கடவுளாகவும் உள்ளனர்? ஒரு கடவுளுக்குச் சோற்றுக்குக்கூட வழி இன்றிச் சொத்து ஒன்றும் இன்றி உள்ளது! மற்றொன்றுக்குப் பத்து ஏக்கர் நிலம், இன்னொன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இன்னும் ஆயிரம் இலட்சக் கணக்கான மிகப்பணக்காரச் சாமியும் உள்ளது. இக்கடவுளர்க்கெல்லாம் எதற்குச் சொத்து? சருவவல்லமையும் உள்ளதாக இருக்கும்போது இதற்குச் சாப்பாட்டுக்கு நிலமா வேண்டும்?

(4) பொய், பித்தலாட்டங்களையும் அக்கிரமத்தையும் அநீதியையும் வளர்க்கவே கோயில்கள் ஏதுவாக உள்ளன. கோயிலுக்கு வருபவனே சாமியின் பொருளைத் திருடுகின்றான். கோயிலின் கலசத்தைக் கும்பிடவருபவன் கவர்ந்து செல்லுகின்றான். கடவுளின் ஆபரணத்தைக் குருக்களே களவாடுகிறான். இன்னும் கடவுளையே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுகிறார்கள். இதிலிருந்து சாமியின் சக்தியும் கோயிலின் நிலையும் சந்தி சிரிப்பதுதான் மிச்சம்!

(5) கடவுள் எல்லாம் வல்லவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறுபவன் தன் வீட்டுப் பெட்டியைப் பூட்டிவைக்காமல் இருக்கிறானா அல்லது எல்லாம் வல்ல கடவுள் பார்த்துக் கொள்வார் என்று தன் வீட்டுக்குக் கதவு, பூட்டு, தாள், போடாமல் இருக்கிறானா? அவ்வளவு ஏன்? கோயிலில் தான் இவையின்றிய நிலை உண்டா? முப்பது, நாற்பது அடிஉயரமுள்ள மதில்களையும் கடந்து கோயிலில் கொள்ளை அடிக்கின்றானே, அவனை ஏன் கடவுளால் தடுத்து நிறுத்த முடியவில்லை? தன் பொருளையும் தன்னையும் காத்துக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்?

(6) உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார் என்றால் கடவுள் உண்டு என்று கூறுகிறவர்கள்தாம். ஏன்? உண்மையிலேயே கடவுள் சக்தி வாய்ந்தவர், எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் இவர்கள் ஏன் கடவுள் இருக்கிறார் என்று நம்மிடம் கூற வேண்டும்? சருவசக்தி வாய்ந்தவர் கடவுள் என்பது உண்மையானால் எங்களுக்குக் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கையைக் கடவுளே உண்டாக்கியிருக்கலாமே? -என்கின்றார்.

(7) கோயிலில் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கின்றானே; எவனாவது அது கல் என்பதை உணருகின்றானா? உண்மையில் அங்குக் கடவுள் சக்தி இருக்குமானால் இரவில் திருடன் சாமியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சேலையையும் உருவிக்கொண்டு போகிறானே எந்தச் சாமியாவது ‘ஏண்டா’ அப்படி என் மனைவியின் தாலியை உருவிக் கொண்டும் சேலையையும் அவிழ்த்துக் கொண்டும் போகிறாய்? என்று கேட்கிறதா? அப்படித் தன் மனைவியின் தாலியையும் சேலையையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன சொல்ல முடியும். இதனை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?

(8) ருவத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள்-மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை?

(9) உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சருவசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சருவசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது.

(10) கடவுளும் மதமும் அறிவற்றவனைத் தான் ஆட்டும் என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக் காரனாகவும்கூட ஆக்கிவிடும். ஆனால் எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும் மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமுடியாது.

இப்படிச் செல்கின்றன ஐயா அவர்களின் சிந்தனைகள்.

உருவவழிபாடு: மணிவாசகப்பெருமான் கடவுளுக்கு உருவம் இல்லை, பெயர் இல்லை என்று கூறியதையும்; சித்தர்கள் உருவவழிபாட்டைக் கடிவதையும் முன்னர் குறிப்பிட்டேன். அவற்றை நினைவு கூர்ந்த நிலையில் தந்தை பெரியாரின் இதுபற்றிய கருத்துகளைக் கவனிப்போம். கல்லைக் கடவுள் என்று வழிபடும் மக்கள் பார்ப்பனரைச் ‘சுவாமி என்று குறிப்பிடுவதைக் காண்பதில் வியப்பில்லை என்கின்றார். அண்மைக்காலத்தில் கேரள சபரிமலை ஐயப்பன் பெரும்புகழ் பெற்றுள்ளான். ஆண்டு தோறும் எண்ணற்ற தமிழர்கள்-பெரும்பாலும் தொழிலாளர்கள், அலுவலர்கள் போய் வருகின்றனர். அவர்கள் ஒருவரை யொருவர் வினவும் போது ‘சுவாமி என்று விளிக்கின்றனர்.[குறிப்பு 2]

(1) கடவுள் உருவமில்லாதவர், நிறம் இல்லாதவர், குணம் இல்லாதவர், எவர் கண்ணுக்கும் படாதவர், யாராலும் உணரமுடியாதவர், ஐம்புலன்கட்கும் அப்பாற்பட்டவர் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு இன்னொருப்பக்கம் கழுதை, குதிரை, மாடு, களிமண், சாணி உருண்டை, குரங்கு, பல்லி, செம்பு, பித்தளை, கல், மரம், பாம்புப் புற்று, காக்காய், கழுகு ஆகியவற்றை மக்கள் வழிபடுகின்றனர். இஃது அறியாமை, வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா? என்று கேட்கின்றார் பெரியார்.

(2) கடவுளைப் பற்றிச் சொல்லுகின்றவர்கள் “கடவுள் பற்றற்றவர்; கருணையுள்ளவர், அன்பானவர், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர், உருவமற்றவர், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர், ‘அவனன்றி ஒரணுவும் அசையாது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, அதற்கு முற்றிலும் மாறான தன்மையில் மனிதனைப்போல் உருவம் அமைத்ததோடு நில்லாமல் அதற்குப் பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி என்றெல்லாம் கற்பித்துக் கொண்டு அவற்றிற்குச் சோறு, சாறு முதலியவற்றைப் படைக்கின்றாயே. இஃது அறிவுள்ளவர் செயலா?” என்று கேட்கின்றார்.

(3) அன்பு மயமான ஆண்டவனுக்கு அவன் திருக்கைகளில் அரிவாள், சூலம், வில், வேல் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருப்பதுபோல் உருவம் அமைக்கப்பெற்றுள்ளது. இஃது அன்புள்ளவருக்குப் பொருத்தமான செயலா? இப்படியெல்லாம் படைப்பது காட்டுமிராண்டித்தனமல்லவா? இவ்வாறு படைப்பவர்களை அடியார்கள் என்று சொல்வதற்கு என்ன அருகதை? “நான்பந்தயம் கட்டிச் சொல்லுகின்றேன்; நம் மக்களில் கடவுளை வணங்குகிறவர்களில் அறிவாளர்களோ யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ? இல்லை; இல்லை! இல்லவே இல்லை!” என்கின்றார் பகுத்தறிவுப் பகலவன்.

(4) திராவிடப் பொருளைச் சுரண்டுவதற்கு காரணமாயிருந்ததும், இன்றுவரை காரணமாய் இருந்து வருவதும் சிலை வணக்கமேயாகும். ஆரிய நச்சுமரத்திற்கு எருப்போட்டு நீர் ஊற்றி வருவது இந்தச் சிலை வணக்கமேயாகும்.

(5) ரு சக்தியிலுள்ள கடவுள் என்பதைச் சாதாரணச் சாணி உருண்டையாக ஆக்கிவைத்திருப்பது மாபெரும் அயோக்கியத்தனம்; ஆட்டுக்கல்லாக அடித்து வைத்திருப்பது அதைவிட பெரும் அயோக்கியத்தனம் என்கின்றார் பெரியார்.

(6) கடவுள் எங்கும் இருக்கிறார் என்றும் சொல்லி முடித்த பிறகு எதற்காகக் கோயில் கட்டி அதற்குள் குழவிக்கல்லைக் கொண்டுபோய் வைத்து ‘இதுதான் கடவுள்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? உருவம் இல்லாதவர் கடவுள் என்று கூறிவிட்டு கடவுளுக்கு நான்கு கைகள், 12 கைகள் என்றும் இரண்டு தலை, ஆறு தலை என்றும் எதற்காகப் படைக்க வேண்டும்?

(7) கடவுள் எக்காலத்தும் என்றும் நிறைந்து நிற்கும் சக்தியாகச் சொல்லப் பெறுகிறது. அப்படிப் பார்த்தால் இராமன் எப்படிக் கடவுளாக முடியும்? கிருட்டிணன், கந்தன், விநாயகன் இப்படியாகச் சொல்லப்பெறுபவை அனைத்தும் எப்படிக் கடவுளர்களாக முடியும்? இவர்கள் எல்லாம் பிறந்திறந்து போயுள்ளனர். சராசரி மனிதர்களின் குணம் படைத்தவர்களாக உள்ளனர். இவர்களை எப்படிக் கடவுளர்களாக ஒத்துக் கொள்ள முடியும்? என்று வினவுகின்றார்

குறிப்பு:

  1. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவரவர் செய்த வினைப்பயன் என்று சமயங்கள் சாற்றும். தந்தை பெரியார் பேச்சில் எழுத்தில் இதுபற்றிய குறிப்பே இருப்பதாகத் தெரியவில்லை. மோட்சம் நரகம் என்ற அளவில் அவர் சிந்தனை நின்று விடுகின்றது.
  2. ஒருவன் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் கடவுளை நினைத்து சுவாமி என்று குறிப்பிடுவதாக ஐதிகம்

 

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்