தந்தை பெரியார் சிந்தனைகள் 13

 (தந்தை பெரியார் சிந்தனைகள் 12 இன் தொடர்ச்சி)

(7) கடவுள் என்கிறார்களே; என்ன கடவுள்? வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும்; ஒத்துக் கொள்கின்றேன்; வேதத்தில் கடவுள் இல்லை. நான் ஒன்றும் புளுகுபவன் அல்லன். அதில் எங்கே இருக்கிறது என்று எடுத்துக்காட்டட்டும்; ஒத்துக் கொள்ளுகிறேன். அதுவும் தமிழனைப் (திராவிடனைப்) பொறுத்தவரையில் கடவுளே இல்லை.

இவ்விடத்தில் பாரதியார் ‘கண்ணன்-என் தாய்’ என்ற ‘கண்ணன் பாட்டில்’

சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் போதினிலேநான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும்மதக்
கொலைகளும் அரசர்தங் கூத்துகளும்
மூத்தவர் பொய்நடையும்இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்(9[குறிப்பு 1]

என்று கூறுவதை நினைவு கூர்ந்து மகிழலாம். ஒருவகையில் தந்தை பெரியார் பாரதியாரின் உள்ளத்திலிருந்து பேசுவது போல் தோன்றுகின்றது.

(10) ‘கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு கடவுளைச் செருப்பால் அடித்துக் கொண்டிருக்கும் ஒருவன் [குறிப்பு 2], 92 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றான் என்றால் உண்மையில் கடவுள் இருந்தால் தன்னை இழிவு படுத்துகிறவனை இவ்வளவு நாள் விட்டு வைத்திருக்குமோ? தண்டனையும் கொடுக்கவில்லை. ஏன்? கடவுள் இல்லை என்பதே உண்மை.

(11) கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்கின்றதைக் கேட்டு ஒருவன் கோபம் அடைகிறான். ஒருவரின் மனம் நோகிறது என்றால் அவன் கடவுள் தானாகத் தோன்றினார் என்பதை நம்பவில்லை என்பதோடு கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பெற்றது என்று கருதுகிறான் என்பதுதானே பொருள்?

(12) கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதர் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவரும் இல்லை. ஒருபொருள் இருந்தால் தானே அஃது இன்னது என்று புரிந்து கொள்ளமுடியும்? அஃது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாகக் கடவுளைப் பற்றி உளறிக் கொட்டுகின்றனர்.

(13) எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்ட எவற்றையுமே வெங்காயம் என்றுதான் சொல்வேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை அச்சசொல்லின் பொருள்-வெறுங்காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்கஉரிக்கத் தோலாகவே-சதையாகவே வந்து முடிவில் சூனியமாய்-விதை இல்லாத தன்மையதாய்-முடிவது என்பது. ஆகவே வித்து, விதை இல்லாத காரணத்தால் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாகிறது. அது போன்றனவே, கடவுளும் மதமும் ஆகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருள்களே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்”

இந்த உவமையின் சிறப்பைப் பாராட்டும் முகத்தான் இலால்குடி திராவிடக் கழகத்தினர் (திருச்சி மாவட்டம்) நான் துறையூரில் பணியாற்றிய காலத்தில் (1941-50) ஏதோ ஒரு வருடத்தில் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை (துலாபாரம்) வெங்காயப் பரிசு அளித்ததை நினைவுகூர முடிகின்றது.

கடவுள் ஒழிப்பு: இது பற்றிய ஐயா அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.

(1)கடவுள் தன்னைச் செல்வனாகப் பிறப்பித்ததற்காக செல்வனொருவன் திருக்கோயிலை எழுப்புகிறான் என்றால், வறிஞனாகப் பிறப்பித்தற்காக அந்த வறிஞன் அத்திருக்கோயிலை இடித்துத் தள்ள வேண்டாமா! அல்லது அத்திருக்கோயிலில் எழுந்தருள்விக்கப் பெற்ற தெய்வத்திருமேனியைத் தூள்தூளாக்க வேண்டாமா? கடுமையான யோசனை. இங்கு வைதிகரின் கருத்து பொடியாக்கப்பெறுகின்றது. இந்தக் கடவுளையும் ஆத்திகத் தன்மையையும் ஒழித்துக்கட்டாமல் மனிதன் மனிதத் தன்மையை அடைய முடியாது என்பது ஐயா அவர்களின் அசைக்க முடியாத அபிப்பிராயம்.

(2) கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டு பலனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும் வயிறும் வாயும் பற்றி எரிய எரிய அந்த உழைப்பாளிகளின் பணங்களைக் கொண்டு திருக்கோயில் எழுப்பவும், வாகனங்கள் செய்யவும், திருமேனிக்குக் கிரீடம் அமைக்கவும், திருக்கல்யாணம் செய்யவும், திருவிழாவான வேடிக்கை உண்டாக்க ஏற்படுத்தப் படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? அப்படி ஒரு கடவுள் உள்ளது என்று சொல்லப் பெறுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதால் என்ன நட்டம்? என்று கேட்கின்றார் ஐயா.

(3)கடவுளைப் பற்றிய எண்ணமேகூடாது என்பது ஐயாவின் கருத்தன்று. மனிதச் சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப் பட்ட கடவுள் இருக்கக்கூடாது என்றுதான் ஐயா அவர்கள் வற்புறுத்திப்பேசுகின்றார்கள்.

(4)புலிக்கு ஆடுகளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப் பெற்ற அடிமை என்பதாகக் கருதி நடத்தப் பெற்று வருகின்றனர். உண்மையிலேயே கடவுள் இப்படி ஒரு நீதி எற்படுத்தி இருப்பாரானால் முதலில் அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

(5)கோயிலுக்குப் போய்ச் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப் பட்டுச் செத்துவிடும் என்கிறானே பார்ப்பான் ! ‘வெளியிலிருந்து கன்னத்தில போட்டுக்கொள்’ என்கிறானே! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால் கீழச்சாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே பொருள்? மானமுள்ளவன் கோயிலுக்குப் போகலாமா? -என்கிறார் பெரியார்.

(6)நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100க்கு 90 விழுக்காடு பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும் அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு அந்தக் கதைகள் காட்டு மிராண்டிக் கதைகள் என்பது விளக்கப்படவேயாகும்.

(7)கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாகவே முடியாது. பணக்காரனாகப் பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியாது. எங்கெங்குப் பகவான்- கடவுள்- ஒழிகின்றானோ அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான்; அறிவியலறிஞன் தோன்றுவான்.

(8)தமிழனை முட்டாளாக ஆக்குவது கடவுள். அதை ஒழிப்பது தான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான். எங்கள் வேலை-என்கின்றார்கள்.

(9)பெரியார் சொல்லுவார்: “இந்த ஊர்க் கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல்தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூசைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு நீ கோயிலின் வெளியிலிருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாயே! நீ இழிசாதி, நீ தொட்டால் சாமி தீட்டாகிவிடும். சாமி செத்துவிடும்” என்கின்றான். இதை பொறுத்துக் கொண்டுதானே சாமி கும்பிடுகிறாய். இப்படிநீ தொட்டால் தீட்டாகிவிடும். செத்துவிடும் என்கிற கடவுளை நீ கும்பிடலாமா?-என்று கேட்கின்றார்.

(10) மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு, பகுத்தறிவற்ற தன்மைக்கு, கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை-என்கின்றார். இக்கருத்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பெறல் வேண்டும்.

குறிப்பு :

  1. மதக்கொலைகள்-சமணர்களைக் கழுவேற்றல், சிலுவைப்போர்கள் போன்றவை. அரசர்தம் கூத்துகள்- துரியோதனன் செயல்கள், இராவணன் தீங்குகள், இரணியனின் அடாத செயல்கள் போன்றவை.
  2. இராமர் படத்தைச் செருப்பால் அடித்தவர் பெரியார். தன்னையே படர்க்கையில் சுட்டுகின்றார்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்