(தந்தை பெரியார் சிந்தனைகள் 14 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 15

(4) பிராமணர்களின் மோசடித்தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டுமக்கள் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தில் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பெற்றிருக்கும் மதவுணர்ச்சி வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும். குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப் பெறல் வேண்டும். அயோக்கியச் செயல்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்து மதப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடலாயங்கள் எல்லாம் மக்கள் சொத்தாக வேண்டும்.

(5) மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால், அஃது எந்த மதமாயிருந்தாலும் ஒழித்துதான் ஆகவேண்டும். ‘உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; அவனைப் பிராமணனாய்ப் படைத்தார்; என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்’ என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அநுகூலமாயும் இருக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்கின்றார்.

(6) மதம், சாத்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப் பெறாவிட்டால் தீண்டாமையும் சாதிப் பேதமும் போக்கடிக்கப் பெறமுடியுமா? இதுவரையும் இந்துமதம் விட்டு வேறு மதம் (முக்கியமாக இசுலாம்) ஆகாத எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயுள்ளதா? பார்ப்பனருக்குள்ள சுதந்திரமும் செளகர்யமும் சமூகவாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பினருக்கு இருந்து வருகிறதா? இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பெற வேண்டியதுதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்?

(7) எல்லா மதக்காரர்களுக்கும் எல்லாவிதமானப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு, பாவவிலக்குபெற மதங்களில் ஆதாரங்கள் மார்க்கங்கள் உள்ளன. இதனால்தான் மனிதரில் எவனும் யோக்கியமாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. மனிதன் என்றால் எவனும் அயோக்கியமாய் இருக்க வேண்டியவனாகவே ஆகிவிட்டான். எனவே, மதங்கள் ஒழிந்தால் ஒழிய எவனும் யோக்கியனாக இருக்க முடியாது.

(8) சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், சாதி, பழக்க வழக்கங்கள், சாத்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்பவை தகர்க்கப் பெறாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தம் ஏற்பட்டாலும் ஒருகாதொடிந்த ஊசியளவுகூட ஒருபயனும் பாமரமக்களுக்கு ஏற்படாது. இது பெரியாரின் சிந்தனையின் கொடுமுடி.

(9) ‘மதச்சார்பற்ற’ (Seculer) என்ற சொல்லுக்கு காங்கிரசு, பார்ப்பனர் என்று இருசாராரும் கூறிவருகின்ற வியாக்கியானம் பற்றிப் பெரியார் கூறும் விளக்கம்: ஒரு பெண் கன்னியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண்சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக் கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி புரிய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பது போல் பொருள் சொல்லுகின்றனர். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற கொள்கை மதவிஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்? பெரியாரின் இச்சிந்தனை கூர்த்த மதியுடையாருக்கும் வியப்பினை விளைவிக்கும்.

(10) ‘மதச்சார்ப்பற்ற என்பதற்குப் பெரியார் தரும் விளக்கம் இன்னோர் உவமையின் அடிப்படையில் அமைகின்றது. பெண்கள் மாநாடு நடத்துகிறார்கள். அந்தமாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனைபேரும் ‘பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ளவேண்டும்’ என்று தீர்மானித்து விட்டுப் பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போல் கருதி நடந்துகொள்ள வேண்டும். அதுதான் பதிவிரதைத் தன்மை: என்று பொருள் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தன மானதோ, அதைவிட அயோக்கியத்தனமாகும் ‘மதச்சார்பற்ற’ என்பதற்கு எல்லாமதங்களையும் ஒன்றுபோலக் கருதவேண்டும் என்பதும் ஆகும். மதச்சார்பற்ற என்றால் எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள். பெரியாரின் இந்த விளக்கம் அவரது சிந்தனையை இமயம் போல் உயர்த்துகின்றது. இந்த விளக்கம் அரசின் காதில் ஏறுமா? புத்திக்கு எட்டுமா?

மனிதகுல முன்னேற்றத்தில் இராமாநுசரும் தந்தை பெரியாரும் விரிந்த பரந்த நோக்கத்தையுடையவர்கள். திருவரங்கத்தில் முன்னவர் ஆத்திகர்; ஆசாரியநிலையில் இருந்தவர்; பின்னவர் நாத்திகர் (தாம் நாத்திகர் அல்லர் என்று பல இடங்களில் சொல்லியுள்ளார்); கடவுளைக் கனவிலும் கருதாதவர். மனிதகுல மேம்பாட்டில் இருவரும் ஒத்த கருத்தை புடையவர்கள்.

திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து இராமாநுசர் திருமந்திர உபதேசம் பெற்றது ஒரு நீண்டகதை. திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சுமார் 60 கல் தொலைவிலுள்ளது. 18 முறை கால் நடையாக நடக்க வைத்து 18-ஆவது முறைதான் அறிவுரை(உபதேசம்) வழங்கினாரி். செய்தார். தனிமையாக வரச் சொன்னார். ஆனால் இவர் முதலியாண்டானுடனும் (தண்டு) கூரேசனுடனும் (பவித்திரம்) சென்றார். அதற்கு விளக்கமும் சொன்னார். நம்பிக்கு ஒரே வியப்பு.

ஓராண்வழியாக, குரு சீடர் முறையில், உபதேசிக்கப்படும் திருமந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய) எவர்க்கும் தெரிவிக்கக் கூடாது என்ற உறுதி மொழியையும் பெற்றார். “தான் அறப் பெய்துமாயும் தடமுகில்” என்று பாராட்டப்பெறும் இளையாழ்வார் திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி சாதிவேறுபாடின்றி திருமந்திரத்தையும் அதன் பொருளையும் அனைவரும் கேட்குமாறு முழங்கினார். போர்க்களத்தில் கண்ணன் காண்டீபனுக்குக் கீதையை உபதேசிக்கவில்லையா? அதுபோல் எனலாம். ஆசாரியரும் உடையவரை ‘எம்பெருமானாரே’ என்று அழைத்து மகிழ்ந்தார். “இதுவரையில் ‘பரமவைதிக சித்தாந்தம்’ என்று வழங்கிவந்த இந்தச் சித்தாந்தம் இன்று முதல் ‘எம்பெருமானார் தரிசனம்’ என்ற வழங்குவதாகுக” என்று வாழ்த்திப்போற்றினார்.

காரேய் கருணை இராமாநுசர் இக்கட லிடத்தில்‘’
‘’ஆரே அறிபவர்நின் அருளின் தன்மை?’’ (இராமா. நூல். 25)

என்று திருவரங்கத்து அமுதானாரும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

தந்தை பெரியாரும் தம்வாழ்நாள் முழுவதும் பிராமணரல்லாத சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக (சாதி பேதமின்றி) தம்பணியைச் செய்தவரல்லவா? ஆகவே, இருவரும் இந்த வகையில் ஒப்புமை உடையவர்கள். உடையவர் வைதிகர்; ஆதலால் அவர்க்கு மோட்சம் உண்டு. தந்தை பெரியாரும் ஒரு வகையில் வைதிகரே. எப்படி? ‘பெரியாரின் சீடர்கள் யாவரும் தம் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.[குறிப்பு 1] 1ஆனால் அவர் பெயராகிய இராமசாமி (தந்தையார் சூட்டிய பெயர்) அவரோடு நிலைத்து நின்றது. இராமர் படத்தை ஊர்வலம் செய்து செருப்பால் அடிக்கச் செய்தார். ஆனால் ‘இராமசாமி’ என்ற தம் பெயரைக் கட்டுரைகளிலும் காசோலைகளிலும்; பத்திரங் களிலும் இன்னபிறவற்றிலும் எழுதியும் பெரிய கூட்டங்களில் ‘இராசாமி கூறுகிறான்’ என்று மொழிந்தும் தள்ளியிருப்பார். ‘சிரீராமசெயம்’ என்பதை இலட்சக்கணக்காகப் பயன் கருதி எழுதியவர்கள் உண்டு. இவர் பயன் கருதாது தம் பெயரை எழுதி இராமபக்தரானார் என்பது அடியேனின் கணிப்பு. இராம காதையில் வரும் அநுமனுக்கு நிகரான இராமபக்தர்கள் இவ்வுலகில் இல்லை. ஞாயிற்றுக்கிழமையை அநுமனது நாளாகக் கொண்டாடுவதுண்டு. தந்தை பெரியாரும் தம் புகழுடம்பை விட்டு விட்டுப் பூத உடம்பைக் கழிந்தது ஞாயிற்றுக் கிழமையில்தான். ஆதலால் அந்த மீளாத உலகில்- பரமபதத்தில்- வைணவ குடும்பத்தைச் சார்ந்தவராதலால்- ஒருதனித் திருமாளிகையில் தங்கி யிருக்க வேண்டும். வழிபாட்டுக்குத் திருமாமணிமண்டபம் வந்து நித்திய சூரியர்களுடனும் முத்தர்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று என் சிறுமனம் எண்ணுகின்றது.

ஓரிடத்தில் “நான் நாத்திகன் அல்லன்; தாராள மனமுடையவன்; நான் பகுத்தறிவு வாதி” என்றும் (இரண்டாம் பொழிவு -பக்.56) மனிதன் இழிவுக்கும் மானமற்ற தன்மைக்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை” என்றும் (முதற்பொழிவு-பக் 4), கூறுவனவே இதற்கு அரணாக அமைகின்றன.

‘’மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்’’
‘’தம்புகழ் நிறிஇத் தாமாய்ந்த’’ (புறம்-165)

பெரியாருள்-ஒருபெரும் பெரியாராக-‘தந்தை பெரியாராக’-நம்மனோர் உள்ளத்தில் நிலையான இடம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

‘’உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்’’
‘’உள்ளத்துள் எல்லாம் உளன்’’ (குறள்-294)

முடிவுரை: இன்றைய பொழிவில் தந்தை பெரியாரைப் பாவேந்தர் அறிமுகத்தைக் காட்டினேன். அடியேனுக்கும் தந்தை பெரியாருக்கும் 1934 முதல் அப்பெருமகனாரின் பூதவுடல் மறையும் வரையிலும் இந்தத் தொடர்பு இருந்தது என்று கூறினேன்.

பெரும்பாலும் தந்தைபெரியாரின் சிந்தனைகள் மறுக்கும் பாங்கில் அமைந்திருப்பதால் அவர் ஒருவாறு மறுக்கும் சைவ வைணவ கடவுளர்களையும் அவர்தம் உருவங்களையும் முன் வைத்தால்தான் அவர்தம் மறுப்பின் போக்கு தெளிவாகும் என்று கருதியே சைவசமயத்திலுள்ள கடவுளர்களின் வடிவங்கள் பற்றியும் வைணவ சமயத்தில் உள்ள இறைவனுடைய ஐந்து நிலைகளையும் எடுத்துக் காட்டினேன்.

பெரியாரின் சிந்தனைகளுக்கு வரும்போது கடவுள், அவர் பற்றிய நம்பிக்கை, கடவுள் எல்லாம் வல்லவர், கடவுளர்களின் உருவங்கள், திருக்கோயில்கள், கடவுள் மறுப்பு, கடவுள் ஒழிப்பு ஆகியவைபற்றிய சிந்தனைகளையும் உங்கள் முன் வைத்தேன்.

அடுத்து சமயம் என்ற தலைப்பில் சமயம் பற்றியும், சமயக் கேடுகள், சமயவாதிகளின் கொடுமை சமய ஒழிப்புபற்றிய சிந்தனைகளையும் எடுத்துக் காட்டினேன்.

இவை வைதிக சமயத்தில் வேதங்களினின்றும் தெள்ளி எடுத்த உபநிடதக்கருத்துகள்போல தந்தை பெரியார் தமது நீண்டகால வாழ்வில் பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியவற்றிலிருந்தும், குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவற்றிலிருந்தும் எடுக்கப்பெற்று உங்கள் முன் வைத்த சிந்தனைகள் உபநிடத கருத்துகளை நிகர்த்தவை என்று உறுதியாகக் கூறலாம்.[குறிப்பு 2)  பேராசிரியர் நன்னன் அவர்களின் நூல்களும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொகுத்த பெரியார் களஞ்சியத் தொகுதிகளும் இப்பொழிவை அமைக்கத் துணையாக இருந்தன. அந்த இரண்டு நண்பர்களுக்கும் என்நெஞ்சம் உருகும் நன்றி. இன்று இவண் கூடி, பெரியார் அவர்களோடு நெருங்கிப் பழகி 85 அகவை நிறைவுறும் நிலையிலுள்ள அடியேனினின் சொற்களைச் செவிமடுத்த உங்கள் அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியவை.

அடுத்த இரண்டாவது பொழிவு “சமூகம் பற்றிய சிந்தனைகள்” என்பது. இதற்கும் அன்பு வருகை தந்து சிறப்பிக்க வேண்டு கின்றேன்.

00

குறிப்புகள்

1. இராமய்யா – அன்பழகன் ஆனார். நாராயணசாமி – நெடுஞ்செழியன் ஆனார். சோமசுந்தரம்-மதியழகன் ஆனார். 2. பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் பெரியார்கணிணி (இரண்டு பகுதிகள்) உபநிடதங்கள்போல் என்றும் நிலைத்து வாழும்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்