(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1. தொடர்ச்சி)

தனித்தமிழ் மாட்சிமறைமலையடிகள்

2

 

இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும்பொருட்டுக் கோலுங் குறடும் எழுத்தும் போலி கை கால்களுஞ் செயற்கையாகச் செய்து அமைத்துக்கொள்ளுதல் போலவும், இயற்கையிலேயே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளே மற்றை மொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டிநிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ்மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை.

மக்கள் இம்மை மறுமை பற்றி அறிய வேண்டுவனவெல்லாம் முற்றும் எடுத்துக்கூறுந் தொல்காப்பியம்‘ ‘திருக்குறள்என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்ற தென்றால், உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ்வுறுப்புகள்போற் செய்து அவற்றை அதன்கண ஒட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச்சொற்களை விடுத்து ரோமம்‘ ‘சிகை‘ என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலியவற்றை நீக்கிச் ‘சரீரம்‘ ‘சிரசு‘ ‘வதனம்‘ என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு நயனம்‘ ‘கர்ணம்‘ ‘நாசி என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் ‘கண்டம்‘ என்னுஞ் சொல்லையுந் தோள் கை முதலியன இருக்கப் ‘புஜம்‘ ‘கரம்‘ என்பவற்றையும், வயிறு அகடு இருக்க ‘உதரம்‘ ‘குஷி‘ என்பவற்றையும், கால் அடி என்னுஞ்சொற்களுக்குப் ‘பதம்‘ ‘பாதம்‘ என்பவற்றையுங், கொண்டுவந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ற் சொற்களாகிய உறுப்புகளை வெட்டியெறிந்துவிட்டு, அவை போன்ற ஏனை மொழிச்சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலையே போல்கின்றதன்றோ? பொருள்களை ‘வஸ்துகள்‘ என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் ‘பிரகாச‘ மென்றும், ஓசையைச் ‘சப்தம்‘ என்றுஞ் சுவையை ‘ருசி‘ என்றும், மணத்தை ‘வாசநை‘ என்றுந், திதித்திப்பு இனிப்பை ‘மதுரம்‘ என்றுந். தண்ணீர் சோறு உணவு என்பவற்றை ‘ஜலம்‘ ‘அந்நம்‘ ‘ஆகாரம்‘ என்றும், ஆடையை ‘வஸ்திரம்‘ என்றுங், கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்‘ எனறுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை ‘மாதா‘ ‘பிதா‘ ‘புத்ரன்‘ ‘புத்ரி‘ ‘பந்துக்கள்‘எனறுந், துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் கஷ்டம்‘ ‘நஷ்டம்‘ ‘சம்ஸாரம்‘எனறுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை ஸ்நாநம்‘ ‘பூஜை‘ ‘ஆயாசம்‘ ‘நித்திரை‘ என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை ஞாபகம்‘ ‘பாவநை‘ ‘வசனித்தல்எனறுந், தூய தமிழ்ச்சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ்மொழியை வளர்த்தல்? அறிவுடையீர் கூறுமின்கள்!

இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிறமொழிகளினின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்ததை எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டுமென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழிதேடுவதுதானா தமிழ்கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும் பிறமொழியையுங் கற்க்கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற்பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்குவீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம்மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்!

ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான சேக்சுபியர், மில்டன், செல்லி? தென்னிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச்சொற்கள் விரவாத தூய ஆங்கிலநடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதாக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த தென்னிசன் தமதுகாலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து வழங்கி அவற்றை வழங்கவிட்டமைக்காக, அவர் சுற்ற்றவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! சான்சன், கிப்பன் என்னும் உரைநூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக்கு முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரை நூல்களில் விரவைத் தெழுதினமைக்காக அவர்களை அந் நனமக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கிலநூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ?

ஆங்கிலமொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்சான் என்னும் ஆசிரியர், “பழைய நாளில் ஆங்கிலமக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானே பலமொழிபேசும் பல்வகைநாட்டாரும் அவரமேற் படையெடுத்து வந்து அவர்தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுக்க கலந்துவந்தனர்“ எனவும், “அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப் பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கிலமொழியிற் கலந்து நிலைபெறலாயின“ எனவும் “ மொழிக்கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டியபின், “பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச்சொற்களை மிக்க் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. ‘உரோம் அரசியலின் இறக்கமுஞ் சிதைவும்‘ என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள் எழுதிய சான்சன் என்பவரும் இலத்தீன் மொழிச்சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர், கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், சான்சன் இருபதெட்டு விழுக்காடுமாக அயன் மொழிச் சொற்களை விரவவிட்டனர். ஆனால், உள்ளுர் நிகழ்ச்சிகளைப்பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன் மொழிச்சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். சான் முனிவரது நூலின் மொழி பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன் மொழிச்சொற்கள் ஒன்று கூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம்“ என்று கூறிப் பின்னும் “பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச் சொற்களைத் தொகுதியாய்க் கொண்டு வந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது. அங்ஙனமே அவை உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்டமையுந், தாம் வேலை செய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அதுமுதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குருமுதல்வரான செரிமிடெய்லர் Sportiveness என்னும் ஆங்கிலமொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady’s maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்நது வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகையநடை பெருகி வரவே, இத் தன்மையவான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கிலமக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந் தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்துதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான்.“ என்று எழுதி, அதன்பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக்காட்டி “ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச் சேர்த்து ஒருநடை எழுதமாட்டான்“ என்று அதன பிழைகளை எடுத்துக் கூறிச், “சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை இன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும அயலான் ஒருவன் அச் சொற்கள் வழங்கும் நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்கவேண்டும்“ என்றும், “நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடிய மட்டும் விலக்குகின்றார்கள்“ என்றுங். “கோல்ட்சிமித்து, இயேன், ஸ்ஃச்டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரியகாலத்தே நல்ல தூய ஆங்கிலநடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவன்“ என்றும் முடித்துக் கூறுகின்றனர்; (Prof. J.M.D. Meikle John’s The Art of Writing English. ப. 121 132).

(தொடரும்)

தமிழ்க்கடல் மறைமலையடிகள்

தனித்தமிழ் மாட்சி