தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும்
நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
இராகுலிடம் தன் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் வழக்கத்திற்கு மாறான துணிவாக முடிவு எடுக்கும் திறமும் உள்ளது. தனிப்பட்ட முறையில் அவரின் திறமைகள், பண்புநலன்கள்பற்றி நமக்குக் கவலை இல்லை. தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்ற நிலையில் இருந்த அவர், மதுவிலக்கைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் நுழைந்துள்ளார். மது விலக்குதான் அவரது கொள்கை எனில் அவர் காங்கிரசு என்னும் பேராயக்கட்சி ஆளும் எல்லா மாநிலங்களிலும் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த பொழுது அதனை நடைமுறைப்படுதாததற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய பருப்பு இங்கே வேகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நூறாயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படவும் ஊனமுறவும் உடைமை இழக்கவும் காரணமாக இருந்தவர் இங்கே வந்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றார். இதற்குக் காரணம் தமிழகக் கட்சிகள்தாம்.
1967 இல் விரட்டியடிக்கப்பட்ட பேராயக்கட்சியாகிய காங்கிரசை மக்கள் எக்காரணத்திலும் வரவேற்க இயலா வண்ணம் அக்கட்சி தமிழர்க்கு எதிரான தன் செயல்பாடுகளைப் பெருக்கிக் கொண்டு போகிறதே தவிர குறைத்துக் கொள்ளவில்லை. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப் படுகொலைக்குப் பின்னர் அதனை மனித நேயமுள்ளவர்கள் தீண்டத்தகாததாகவே கருதுகின்றனர். ஆனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனக் கருதும் எதிர்க்கட்சிகள் வாக்குவிகிதக் கணக்குகள்போட்டுக்கொண்டு அக்கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்காக உறவாடி வருகின்றனர். இதில் மிகவும் வேதனையான செய்தி தி.மு.க. கீழிறங்கிப் போவதுதான். இளங்கோவன் என்னும் தமிழினப்பகையாளி எப்பொழுதும் தி.மு.க.விற்கு எதிரான நிலைப்பாடு கொண்டு தேவையற்று அக்கட்சியையும் கலைஞரையும் தாக்கி வந்தவர். இன்று காங்.கட்சியின் தமிழகத் தலைவரான பின்னர் உறவுபோல் வெட்கமின்றிப் பேசி வருகிறார். தி.மு.க.வும் வெட்கம் இழந்து அவருடன் உறவபாடுகின்றது. தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து செயல்படும்; கூட்டணி அமைக்கும் என்பதுபோல் தாலின் (ஃச்டாலின்) அறிவிக்கிறார். ஆனால் இளங்கோவனோ தேர்தல் கூட்டணி அல்ல, போராட்டங்களுக்கான கூட்டணி என மூக்கறுக்கிறார்.
“எமை நத்துவாய் என ஒரு கோடி இட்டழைத்தாலும் தொடேன்” எனத் திகழ வேண்டிய தி.மு.க., தொழுநோயர் கையில் உள்ள வெண்ணெயை வாங்கி உண்ண விரும்புவதுபோல் பேராயக்கட்சியுடன்(காங்கிரசுடன்) கூட்டணி வைத்தால் இருக்கின்ற செல்வாக்கும் போகும் என்பதை ஏன் உணரவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை கொலைகாரக்காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க. கூடுதல் இடங்களைப் பிடிக்கும் அல்லது ஆட்சியைப்பிடிக்கும் என்ற நிலை வந்தால்கூட அதைப் புறக்கணித்தால்தான் மானமுள்ள கட்சியாக அதனைக் கருத இயலும்.
அடுக்கிய கோடி பெரினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் [திருவள்ளுவர், திருக்குறள் 954]
என்னும் தமிழ் நெறியைப் பின்பற்ற வேண்டிய தி.மு.க. தலைவர் கலைஞரும் பதவி நிலையில் பொருளாளராகவும் அதிகார நிலையில் தலைவராகவும் திகழும் தாலினும் (ஃச்டாலினும்) மானக்கேடான செயலில் ஈடுபடலாமா என எண்ணி அதை ஒதுக்க வேண்டும். ஆட்சிப்பீடத்தைக் குறியாகக் கருதி 1,76,000 ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக்கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தா இழி செயலால் ஆட்சியை இழந்தது போதும்! இனியும் காங்.கட்சிக்குத் துணை நின்று அதனைத் தமிழ்நாட்டில் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டா என அன்புடன் வேண்டுகின்றோம்!
பா.ம.க., தே.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கும் முதல்வர் பதவியில்தான் கண்ணும் கருத்தும் உள்ளன. எனவே, பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க இயலாது. தேர்தல் நிதிக்காக அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பி அவ்வப்பொழுது அதற்கேற்பப் பேசுகின்றனர். தேவைப்பட்டால் துணைமுதல்வர் பதவி தருவதாகக்கூறிக் கூட்டணி வைக்கலாம் என்பது அக்கட்சிகளின் எண்ணம். இது பகற்கனவாக இருந்தாலும் கனவிலும் அவர்களுக்கு இன்னலும் இழிவும் தருவதாகவே அமையும்.
உலக அளவில் வரவேற்பு பெற்ற நல்ல எதிர்காலம் உள்ளவராகக் கணிக்கப்பட்ட வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் முன்பே அரைகுறை மனத்துடன் பேராயக்கட்சியாகிய காங்.உடன் கூட்டணி வைத்துப் பின் அதனுடன் இரண்டறக்கலந்தவர்தான். இதனால் அவர் மதிப்பு உலகளவில் கீழிறங்கிப் போனததை உணர்ந்தவர்தான். மீண்டும் அவர் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தில் கொலைகாரக் காங்.உடன் கூட்டணி வைத்தால், அக்கட்சிபோல் முகவரி காணாமல் போய்விடுவார் என்பதை உணர வேண்டும்.
ம.தி.மு.க. தலைவர் வை.கோ. நேரடியாகக் கூட்டணிக்கு முயலமாட்டார் என்றே நம்புகின்றோம். அதே நேரம் கொலைகாரக் காங்.உடன் கூட்டணி வைக்கும் கட்சிக் கூட்டணியில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார் எனில், அது தற்கொலைக்குச் சமமாகும். இதற்கு அவர் அரசியல் துறவறம் பூணலாம்.
ஆனால், ஆட்சிபிடிக்கும் ஆசையில் பிற கட்சிகளில் முதுகில் உலா வரக் காங். கனவுகாண்கின்றது. தமிழ்நேயமும் மனித நேயமும் உள்ள கட்சியினர் தேர்தல் வெற்றிபற்றிக் கணக்கு போடாமல் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக் கட்சியை அடியோடு ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 89,ஆடி 10, 2046 / சூலை 26, 2015
Leave a Reply