(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  23 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  24

 

13. பழக்க வழக்கங்கள் 

மக்கள் அன்றாடம் வாழ்வில் கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்து பின்னர் அவையே நாகரிகப் பண்பாட்டுச் செயல்முறைகளாக மாறிவிடுகின்றன.  எல்லாப் பழக்கவழக்கங்களும் அவ்வாறு அமைந்து நிலைத்து நிற்கும் என்று கூறுவதற்கின்று.  இப் பழக்க வழக்கங்கள் என்றும் ஒருதன்மையாய் இருக்கும் என்றும் கூற இயலாது.  சில மறையும்; சில தோன்றும்.  உயர்பண்பாட்டுக் குரியனவாய் உள்ளன மட்டும் காலவெள்ளத்தைக் கடந்து நிற்கும்.  பழமை பாராட்டும் மக்களியல் பாலும் மூடநம்பிக்கையாலும் காலத்துக்கொவ்வாத சில பழக்க வழக்கங்கள் காலவெள்ளத்தை எதிர்த்து நிற்கும்.

       ஆகவே, பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், காலத்துக்குக் காலம் வேறுபடுவனவா யுள்ளன.

மக்கள் வாழ்வில் பிறத்தல், திருமணம் செய்தல், இறத்தல் ஆயவை முதன்மையான நிகழ்ச்சிகளாகும்.  இவற்றினடிப்படையில் பல வழக்கங்களும் சடங்குகளும் எல்லா நாட்டிலும் இன்றும் நடைபெறுகின்றன. சங்க காலத்தில் இவைபற்றித் தோன்றியன யாவையெனக் காண்போம்.

       குழந்தை பிறந்த பின்னர்  சில சடங்குகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன என்பது,

புதல்வர்ப் பயந்த புனிறுசேர் பொழுதில்

 நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி

  ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்

 செய்பெரும் சிறப்பொடு சேர்தற் கண்ணும்1

எனும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.

+++

  1. தொல். பொருள்-146

+++

       குழந்தைப்பேறு நிகழ்ந்த சில நாள்களுக்குப் பின்னர் எண்ணெய் தேய்த்து முழுகுதலும்  பின்னர்ப் பெரியவர்கட்கும் வீரர்கட்கும் சிறப்புச் செய்தலும் சடங்குகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். ‘செய்பெரும் சிறப்பு ’ என்பதில் ‘ சிறப்பு ’ என்பதற்குப் பிறந்த புதல்வன் முகம் காண்டலும், ஐம்படை பூட்டலும், பெயரிடுதல் முதலியனவும், எல்லா முனிவர்க்கும் தேவர்க்கும் அந்தணர்க்கும் கொடுத்தலும்  என நச்சினார்க்கினியர் விரிவுரை எழுதியுள்ளார்.  இவை எல்லாம் சில செல்வக் குடும்பங்களில் இன்றும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.

ஐம்படை’ என்பதை ஐவகைக் கருவிகளைக் குறிக்

கும் சொல்லாகப் பிற்காலத்தார் கொண்டு திருமாலுக்குரிய ஐவகைக் கருவிகளையும் குழந்தைகட்கு அணிதல் என்பர்.  இதனை ஐம்படைத் தாலி என்றும் கூறுவர்.  இத் தாலியைச் சிறு குழந்தைகட்கணிவது ஒரு மரபாக இருந்துள்ளது.

குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தாலோ, இறந்து பிறந்தாலோ அவற்றை வாளால் வெட்டித்தான் புதைப்

பாராம்.  குழந்தை வடிவம் பெறாமல் வெறும் சதைத் திரளாக இருந்தாலும் இப் பழக்கத்தினின்றும் தப்பமுடியாதாம்.

குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

  ஆளன் றென்று வாளில் தப்பார்”     (புறநானூறு -74)

இவ்வாறு வெட்டிப் புதைக்கும் பழக்கம் இன்னொரு பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறந்தோர் யாவரும் (ஆடவர்கள்)  நாட்டுக்காகப் போர்க்களத்தில் மடிய வேண்டும் என்று கருதினர்.  அவ்வாறு மடிந்தால்தான் துறக்க இன்பம் கிட்டுமென்று நம்பினர்.  ஆதலின் போர்க்களத்தில் இறக்கும் நிலை பெறாது குழந்தைப் பருவத்தில் மடிந்தாலும் முதுமைப் பருவத்தில் மடிந்தாலும்  மடிந்த பின்னர் வாளால் வெட்டித்தான் புதைத்தனர்.

நோயால் இறந்தவர்களை, போர்க்களத்தில் இறவாத குற்றம் நீங்க, பசும்புல் மீது கிடத்தி அறநெறியிற் செல்லும் நான்மறை முதல்வர்கள் “வீரமே துணையாகப் போர்க்களத்தில் இறந்தோர் செல்லுமிடம் செல்க” என வாளால் வெட்டும் செய்தியை,

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

 திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

 மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த

 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன

 வாள்போழ்ந் தடக்கல்” (புறநானூறு -93)

எனப் புறநானூறு அறிவிக்கின்றது.

       முதியோர் இறந்தால் இவ்வாறு செய்யாவிடினும் குழந்தை இறந்தால் புதைப்பதற்கு முன்பு வடுப்படுத்துதல் இன்றும் நிகழ்ந்து வருகின்றது. வாளால் வெட்டுவதன்றிச் சிறு கத்தியாலோ புதைக்குமிடத்தில் கிடைக்கும் காட்டு முள்ளாலோ காதிலோ மூக்கிலோ கீறுகின்றனர்.  அன்று வீரத்துறக்கம் கிடைக்க வாளால் வெட்டினர்.  இன்று மந்திரவாதிகள் எடுத்துச் செல்லாமல் இவ்வாறு செய்கின்றனராம். காலப் போக்கில் பழக்கமும் அதுபற்றிய நம்பிக்கையும் எவ்வாறு மாறிவந்துள்ளன என்பதை நோக்குமின்.

       திருமணக் காலத்தில் கொள்ளும் பழக்கங்கள்   ‘சாதி’ தோறும் இன்று வேறுபடுகின்றன.  அன்று நிகழ்ந்த ஒரு பழக்கத்தை முன்பே சுட்டிக்காட்டி யுள்ளோம். 

(இல்வாழ்க்கை என்னும் தலைப்பில் காண்க).  திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு காதலன் தன் காதலிக்கு உறுதிமொழி கொடுக்குங்கால் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டென்பது,

ஏமுறு வஞ்சினம் வாய்மையில் தேற்றி

  அம்தீம் தெண்ணீர் குடித்தலின்

எனும் குறிஞ்சிப்பாட்டு அடிகளால் (210-11) தெளியலாம்.  திருமணம் நிகழ்ந்த பின்னர் மணமகனுக்கு மணமகள் சோறு வட்டிக்கும் (பரிமாறும்) நிகழ்ச்சி தொடர்பாகச் சில பழக்கங்கள் இருந்துள்ளன.  தொல்காப்பியர் “அடிசிலும் பூவும் தொடுதல்” என்பர் (தொல்.பொருள்-146).

வீரராக இறந்தோர்க்குக் கல்நடும் வழக்கம் இருந்துள்ளது.  தொல்காப்பியத்தில், இது

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்

 சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்என்று

 இருமூன்று வகையின் கல்லொடு புணர.” 1 

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கல் நடுதல் தொடர்பாகப் பல்வகைப் பழக்கவழக்கங்கள் உருவாகியுள்ளன.  கல்லில் இறந்தோர் பெயரைப் பொறித்தலும் அவர் புகழ்ச் செயல்களை எழுதுதலும்  பின்னர் அக் கல்லுக்கு மயிலிறகு சூட்டுதலும், கள், சோறு முதலியன படைத்து வழிபடுதலும், பூவும் நெல்லும் போட்டுக் கும்பிடுதலும் நிகழ்ந்துள்ளன. 2

+++

  1. தொல். பொருள்-60
  2. புறம்-221, 223, 232, 260, 261, 263, 264, 306, 314, 329, 335

+++

       இன்றும் ஒருவர் இறந்த பதினாறாம் நாளில் கல் நிறுத்திக் காடேத்துகின்றோம்.  ஆனால், கொள்கையும் குறிக்கோளும் முறையும் முற்றிலும் மாறிவிட்டன.

       உரிமையரசு நிலைபெற்றுள்ள அக்காலத் தமிழ் நாட்டில் போர் நிகழ்ச்சி தொடர்பாகப் பல பழக்கவழக்கங்கள் இருந்துள்ளன.

       பகை நாட்டின்மீது போர் தொடங்கிப் படை புறப்படுவதற்கு முன்னர்ப்படைத் தலைவர்கள், படை வீரர்கள் ஆயவருடன் அரசர் உடனிருந்து உண்ணும் பழக்கம் இருந்துள்ளது.  இதனைத் தொல்காப்பியர்

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை” (தொல்.பொருள்-63) என்பர்.  குறிப்பிட்ட நேரத்தில் படை புறப்படுவதற்கு இயலவில்லை யெனில், அரசின் அடையாளங்களாம் குடையையும் வாளையும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படச் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.  இதனைத் தொல்காப்பியர் “குடைநாட் கோள், வாள்நாட்கோள்” (தொல். பொருள்-68) என்பர்.

போர்க்களத்தில் புறங்காட்டி ஓடுதல் வெறுக்கப்பட்டது.  படையழிந்து மாறுதலைப் பேரிழுக்காகக் கருதி அவ்வாறு மாறியவரின் அன்னையர் அவர்க்குப் பாலூட்டிய மார்பினை அறுத்து எறியும் வீரமிக்க பழக்கமும் இருந்துள்ளது.1 முதுகில் புண்படுதலே கூடாது.  பட்டுவிட்டால் உண்ணாநோன்பு கொண்டு உயிர்விட்டனர்.2

+++

  1. புறம்-278
  2. புறம்-65

+++

       வீரத்திற்கும் பெருமைக்கும் இழுக்கு நேரும் போதெல்லாம் உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.  அக்கால மக்கள் மட்டுமன்றி மாக்களும் இப் பழக்கத்தை மேற்கொண்டன என்று புலவர்கள் கூறியுள்ளனர் (புறநானூறு -190).  மக்களியல்பைப் பிற உயிர்கட்கு ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் எனும் அணியின் பாற்பட்ட தாயினும் “உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் பழக்கம்” மக்கள் உளத்தில் ஆழமாகக் காழ்கொண்டுள்ளது என்பதனை அறிவிக்கின்றதன்றோ?

எல்லா நாடுகளிலும் ஆண்களுக்கெனவும் பெண்களுக்கெனவும் தனித்தனிப் பழக்கவழக்கங்கள் தோன்றி வளர்ந்துள்ளன.   தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கன்றே.

       திருமணமாகாத பெண்கள் சிலம்பு அணிந்து கொள்ளுதலையும், திருமணம் நிகழ்வதற்கு முன்னர் அச் சிலம்பினைக் கழித்துவிடுதலையும் முன்பே குறிப்பிட்டுள்ளோம்.  மங்கலநாண் அணிந்து கொள்ளுதல் பெண்களுக்கே யுரிய ஒன்று.  கணவனை மணக்குங்கால் ஆடைகளும் அணிகலன்களும் அணிந்துகொள்ளும் பெண்கள், அவன் இறந்த காலத்து அவற்றை நீக்கிவிட வேண்டிய நிலையில் இருந்துள்ளனர், ஆகவே, கணவனை இழந்த மகளிரைக் கழிகலமகளிர் (புறநானூறு-280) என அழைத்துள்ளனர். மகளிர் கணவரை இழந்து நோன்பு கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை ஆசிரியர் தொல்காப்பியர்தாபத வாழ்க்கை என்பர்.  கணவரை இழந்த பின்னர்ப் பிரிவாற்றாது உயிர்விட்ட மகளிரும் உண்டு.  உயிர்விடாது வாழ்ந்தவர்கள் பலவகை இன்பங்களையும் துறந்து துன்புற்று வாழ்ந்தனர்.

 (தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்