தலைப்பு-தலைமைப்போராளிஇலக்குவனார், மறைமலை ;thalaippu_thalaimiapoarali_ilakkuvanar_maraimalai

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3

 இயல்பாகத் தமிழுக்கு முதன்மையும் பெருமையும் வழங்கிப் போற்றிவந்த தமிழர் வேற்றவர் மொழியும் பண்பாடும் அறிமுகமான பொழுதில் தமிழின் தனித்தன்மையும் மேலாண்மையும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என எழுச்சியுடன் இயங்கிய செயல்முறையே தமிழியக்கம் என வரையறை அளிக்கலாமல்லவா? சமணர் நுழைவும் அர்த்தமாகதி, சௌரசேனி முதலான பிராகிருதங்களின் அறிமுகமும் ஏற்பட்டவேளையில்

வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

என்று விதி வகுத்த தொல்காப்பியரே முதல் தமிழியக்கப் போராளி. சமற்கிருதத்தின் தோற்றத்திற்கு முன்னமேயே வகுக்கப்பெற்ற இந்த விதி பின்னாளில் சமற்கிருதம் தமிழருக்கு அறிமுகமான வேளையில் தக்கவாறு பயன்பட்டது. கம்பருக்கு இந்தத் தொல்காப்பிய விதியே தமிழ் மணம் கமழக் காப்பியம் படைக்க உதவியது. இன்றளவும் பிறமொழிச் சொற்கள் தமிழ்மை சான்றவகையில் ஒலிபெயர்ப்பதற்குப் பயன்படுகிறது.

  ‘ஆரியம் நன்று; தமிழ் தீது’ என வெறுப்பினை உமிழ்ந்த வேட்கோக் குயக்கொண்டான் என்பவனை “அறம் சேர்க சுவாகா” எனக் கடிந்து அவனது உயிர்போக்கிய நக்கீரர் தமிழியக்கக் களப்போராளி ஆவார். இதனைக் கதை எனச் சிலர் ஒதுக்கினாலும் அங்ஙனம் கதை தொடுக்க முனைந்தவர் உள்ளம் தமிழியக்கக் களப்போர் முழங்கும் மறச் சிறப்புமிக்கது என்பதை மறுக்க இயலுமா?

 தமிழ் என்பது மொழியை மட்டுமின்றி தமிழ்க்காதலையும்(அகத்தையும்) தமிழ் வீரத்தையும்(புறத்தையும்) குறிப்பதாகும். தமிழ்க்காதலை, காதல் மாண்பை ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவிக்கக் குறிஞ்சிப்பாட்டு பாடிய கபிலர் தமிழியக்கப் பரப்புரையாளர் எனப் போற்றத்தக்கவர் அன்றோ?

  தமிழ் வீரம் வடவருக்குத் தோல்வியையும் அழிவையும் நல்கும் பேராற்றல் என்பதனைச் சேரன் செங்குட்டுவன் வழி உலகுக்குணர்த்திய இளங்கோவடிகள் தமிழியக்கக் களப் போராளி எனக் குறிக்கத்தக்கவர் என்பதை மறுக்கமுடியுமா?

  பல்லவர்கள் பாலியையும் பிராகிருதத்தையும் தலைமேல் தூக்கிக் கொண்டாடியவேளையில் தமிழைப் போற்றி, தமிழால் இறைவனைப் போற்றி, தமிழையே இறைமையாகவும், இறைவனையே தமிழின் வடிவாகப் பாராட்டிப் பாடிய அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் தமிழியக்கக் களப்போராளிகள் என வரலாற்றில் அழியா இடம் பெற்றவர்கள். திருக்குறளின் சிறப்பையும் சங்கத் தமிழ் மாண்பையும் வலியுறுத்தும்வகையில் பாசுரங்கள் பாடிய நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் முதலிய ஆழ்வார்களும் இந்தத் தமிழியக்க அணியைச் சேர்ந்தவர்களே.

  அவ்வப்போது தமிழர் உள்ளங்களில் தமிழ் ஊற்றமும் தமிழ் வீறும் பதியும்வண்ணம் பாடிச் சென்ற சேக்கிழார், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், உமறுப் புலவர், வீரமாமுனிவர் முதலான புலவர்பெருமக்களும் தமிழியக்கச் சான்றோர்களே.

  ஆரியமும் ஆங்கிலமும் தமிழை அடிமைப்படுத்தி வந்தவேளையில் வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் ஆகிய சான்றோர்கள் தமிழ்மறுமலர்ச்சி முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

  பாரதியார், வ.உ.சி,நாவலர் சோமசுந்தரபாரதியார், சுப்பிரமணிய சிவா என  நாட்டுவிடுதலைக்காக உழைத்தவர்கள் தமிழின் விடுதலைக்காகவும் உழைத்தனர்.

  1916-ஆம் ஆண்டு “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” எனும் வள்ளலாரின் பாடலடியில் தேகம் என்னும் வடசொல் நெருடுகின்றதே, அதற்கு மாற்றாக, யாக்கை எனும் நற்றமிழ்ச்சொல் இடம் பெற்றால் இலக்கணமும் கெடாது, இனிமையும் கூடுமே என்னும் சுவாமி வேதாசலத்தின் சிந்தனை அவரை மறைமலை அடிகள் என மாற்றியது.இருபதாம் நூற்றாண்டில் தமிழியக்கம் எழுச்சி பெற வழிவகுத்தது.

  அடிகளாரின் ஓயா உழைப்பும் அதற்கேற்பத் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம் தமிழியக்கத்தைத் தமிழரின் வாழ்வியக்கமாகக் கடைப்பிடித்த நடைமுறைகளூமே தமிழியக்கவெற்றிக்கு வழி வகுத்தன. எனவே தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச்சி என்னும் நாணயத்தின் இருபக்கங்களாகத் தமிழியக்கமும் திராவிட இயக்கமும் விளங்கின என்னும் உண்மையை மறைத்தலோ மறத்தலோ பெரும்பிழை எனலாம். இன்றைய தமிழியக்க ஆர்வலர் பலர் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் பழித்தலும் குறைகூறுவதுமே தமிழியக்கக் கோட்பாடு எனக் கருதிச் செயற்படுகின்றனர்.

  மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் பெரியாரின் துணையின்றிப் போயிருந்தால் அறிஞர்தம் இயக்கமாகவே விளங்கி, மக்களின் பின்பற்றுதலின்றிப் போயிருக்கும். ஆனால் தன்மதிப்பு(சுயமரியாதை) கொண்டு தலைநிமிர்ந்து வாழப் பிறமொழி—அதுவும்—வடமொழியின் வல்லாண்மையை வேரறுக்கவேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தியதாலேயே இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசு ஆகவும் தனித்தமிழில் பெயர்மாற்றம் செய்தனர். இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் தனித்தமிழில் பெயர் மாற்றம் செய்யத் தூண்டுகோலாக விளங்கிய திராவிட இயக்கம் 1967-இல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆட்சிக்கலைச்சொற்களைத் தமிழாக்கி நாட்டில் தமிழ்மணம் கமழச் செய்தது. இந்த மடைமாற்றம் ஒருவேளை இன்னும் சிறப்புற்றிருக்கலாமே என மனக்குறை கொள்வதை ஏற்கலாம். ஆனால் திராவிட இயக்கத்தின் துணையின்றித் தமிழியக்கம் வேரூன்றியதாகக் கூறுவது வரலாற்றை மறைக்கமுயலும் சூழ்ச்சி என்றே கூறவேண்டும்.

  தமிழின் தனித்தன்மையையும் சொல்வளத்தையும் பொருள்நுட்பத்தையும் முன்னிலைப்படுத்தித் தனித்தமிழியக்கம் அறிஞர்களால் முன்னிறுத்தப்பட்டது. தமிழனின் தன்மதிப்பையும் சாதிவேறுபாடு அகற்றும் சமநோக்கையும் அனைவரையும் தமிழின் பெயரால் ஒன்றுபடுத்தும் உயர்நோக்கையும் பெரியாரியக்கம் வலியுறுத்தியது.

  உயர்சாதி இந்து தன்னொத்தவனைக் காணும்போது ‘நமஃச்காரம்’ என்பதும் பிற்பட்டவர்கள் உயர்சாதியினரைக் காணும்போது ’கும்பிடறேனுங்க சாமி” என்பதும் இசுலாமியர்கள் ‘சலாம்’ சொல்வதும் கிறித்தவர்கள் ‘தோத்திரம்” சொல்லிக்கொள்வதும் வழமைகளாக இருந்தன. பெரியார் அறிமுகப்படுத்திய “வணக்கம்” இத்தனை சாதி சமயவேறுபாடுகளையும் தூக்கி எறிந்த சமநீதிச் சூறாவளியாக விளங்கியது. நமஃச்காரம், சலாம், தோத்திரம் மறைந்தன. தமிழன் தமிழால் ஒன்றுபட்டான். இதுதான் பெரியார் செய்த பெரும்புரட்சி.

  தமக்கு ‘வணக்கம்’ தெரிவித்த பா.வே.மாணிக்க நாயகர் அவர்களைப் பார்த்து தமிழ்த்தாத்தா உ.வே.சா. ”என்ன நாயக்கர்வாள், நீங்களும் இந்த சு.ம.க்கள் மாதிரி வணக்கம்’ என்கிறீர்களே? நமஃச்காரம் என்று சொல்லக்கூடாதா?” என மனக்குறைப்பட்டார் என்பது வரலாறு. சு.ம.,காரர்கள் புகுத்திய ‘வணக்கம்’ சாதி, சமய வேறுபாடுகளைத் தகர்த்தெறியவில்லையா?

  பேராசிரியர் சி.இலக்குவனார் பள்ளிப்பருவத்திலேயே தமது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டார். அவரது தலைமுறையைச் சார்ந்த அறிஞர்கள் வரதராசன், இராசமாணிக்கன், சிதம்பரநாதன் என்றிருந்த சூழலில் அவருக்குமட்டும் தனித்தமிழ் நாட்டம் 1920களின் இறுதியிலேயே ஏற்படக் காரணம் என்ன? அக்காலத்தில் சுயமரியாதைக்காரராக விளங்கிய சாமி.சிதம்பரனார் இலக்குவனாரின் ஆசானாகப் பள்ளியிலே விளங்கியதுதான் காரணம். பின்னாளில் மறைமலையடிகளைத் தமது முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் ஏற்ற இலக்குவனார் தமிழியக்கத்தில் ஈடுபாடு கொண்டு களமிறங்கியது சு.ம.இயக்கத்தாலேதான்.

  கல்லூரிமாணவனாக இருந்த காலத்தில் விடுமுறை நாள்களில் சிற்றூர்களுக்குச் சென்று ‘திருக்குறள் பரப்புரை” மேற்கொள்ளவும் இந்தத் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம்தான் காரணம்.

மறைமலைஇலக்குவனார் ; maraimalai_ilakkuvanar

பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

முத்திரை-புதியபார்வை ; muthirai_puthiyapaarvai

(தொடரும்)

(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3)