(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3  தொடர்ச்சி)

தலைப்பு-தலைமைப்போராளிஇலக்குவனார், மறைமலை ;thalaippu_thalaimiapoarali_ilakkuvanar_maraimalaithalaippu_ilakkuvanar_thamizhppani

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3

  தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி “வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் இராசாசி ‘வாய்மை’என்பதே பொருந்தும் எனக் கூறினார்.

  தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்று விட்டதால் உடனே அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் தமிழையே பயிற்சிமொழியாக ஆக்கவேண்டும் என இலக்குவனார் வலியுறுத்திய வேளையில் அப்போதைய கல்வியமைச்சர் நாவலர் ஆங்கிலத்தை அகற்றுவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகும் என விடையளித்தார். தமிழ்  நாவலராகத் திகழவேண்டியவர் ஆங்கிலக் காவலராகச் செயற்படலாமா என அமைச்சரிடம் நேருக்கு நேர் நேர்படக்கூறியதால் இலக்குவனார் தம் பதவியை இழந்தார்.

  1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு, அறிஞர் அண்ணா அவர்களின் மேற்பார்வையில் நடந்து வரலாற்றுப் புகழ் பெற்றது. (மெரீனாக்) கடற்கரையில் தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் நிறுவப்பட்டன; பூம்புகார்த் திடலில் நாள்தோறும் கருத்தரங்கமும் கவியரங்கமும் பட்டிமன்றமும் நாடகங்களும் நடைபெற்று மக்கள் உள்ளத்தில் தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின

 அதே வேளையில் சென்னைப்பல்க்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் கூடிப் பல ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் விவாதித்தும் வந்தனர்.

 ஆய்வரங்கின் முதல் நாள் முதல் கட்டுரை ழீன் பீலியோசா என்னும் பிரெஞ்சு அறிஞரால் படிக்கப்பட்டது. நடப்பது உலகத்தமிழ் மாநாடு; கட்டுரையோ ஆங்கிலத்தில்; அதன் நோக்கமோ சமற்கிருதத்திற்கு முதன்மை வழங்குவது!

 இந்தியாவில் சமற்கிருதம்தான் ஆட்சிமொழியாக இருந்தது என அந்த அறிஞர் குறிப்பிட்டிருந்தார். இலக்குவனார் எழுந்தார். ”ஐயா! சமற்கிருதம் ஆட்சிமொழியாக இருந்தது எனக் கூறினீர்கள்’ எந்த நூற்றாண்டில் எந்த மன்னர் ஆட்சியில் எந்தப் பகுதியில் எனத் தெளிவுபடுத்துகிறீர்களா?” என்பதே அந்த வினா.

 அந்த மாநாட்டின் முதல் வினா அதுதான். கட்டுரையாளரால் விடையிறுக்க முடியவில்லை. தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்; மீண்டும் அந்த வினாவைக் கேட்குமாறு கூறினார். இலக்குவனாரும் கேட்டார். இந்த முறையும் விடை வரவில்லை. அந்த அமர்வு முடிவுற்றது.

 கருத்தரங்கின் மூன்றாம் நாள் ஐராவதம் மகாதேவன் என்னும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்(அப்போது உணவுத்துறைச் செயலர்) வழங்கிய கட்டுரையில் தமிழுக்கு எழுத்துகள் தோன்றியது கி.பி.இரண்டாம் நூற்றாண்டில்தான் என்பது கட்டுரையின் சாரம். இலக்குவனார் விடுவாரா? கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்தை அடிப்படையால்கக் கொண்டு கட்டுரையாளரின் கருத்துப் பிழையைச் சுட்டிக்காட்டினார்.

 இவ்வாறு ஆய்வரங்குகளில், மக்கள் மன்றங்களில், கல்விக்கூடங்களில் என வாய்ப்புக் கிட்டும் இடங்களில் எல்லாம் தமிழின் தலைமைப்பண்பை உணர்த்தவும் தமிழுக்கு நிகழும் தீங்குகளைக் கடிந்து களைந்திடவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர் இலக்குவனார்.

  அவருடைய கொள்கைவீறும் போர்ப்பண்பும் எந்த இடத்திலும் நிலையாகப் பணிபுரிய இயலாச் சூழலை ஏற்படுத்தின. அமைதியாகக் குடும்பவாழ்வு நிகழ்த்தும் வாய்ப்பின்றிக் காலமெல்லாம் ஊர்விட்டு ஊர் பெயர்ந்து நிறைந்த மக்கட்செல்வத்துடன் அல்லலுற்றாலும் தமது தமிழியக்கப் போரை நிறுத்திக்கொள்ளவில்லை. தி.மு.க.ஆட்சியிலும் அவருக்குத் தொல்லைகள் ஓய்ந்தபாடில்லை. ஐந்தாண்டுக் காலம் மாநிலக்கல்லூரியில் அவரைத் தலைமைப் பேராசிரியராகப் பணியமர்த்துமாறு அறிஞர் அண்ணா பரிந்துரைத்த பின்னரும் அப்போதிருந்த கல்வியமைச்சரும் உயர் அலுவலர்களும் அவரை ஓராண்டிலேயே பணிநீக்கம் செய்துவிட்டனர். தமது சொந்த முயற்சியால் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணி ஏற்றார் இலக்குவனார்.

  1968-ஆம் ஆண்டு சூன் மாதம் அவர் ஐதராபாது சென்றபோது அங்கிருந்த தமிழர்கள் கண்ணீர் மல்க வரவேற்றார்கள். காலமெல்லாம் திராவிட இயக்கக்கோளரியாகச் செயற்பட்ட செந்தமிழ் அரிமா இலக்குவனார், தி,மு.க.ஆட்சி மலர்ந்த சூழலிலும் பிழைப்புக்காக ஐம்பத்தைந்து அகவையில் வெளி மாநிலத்திற்கு வரவேண்டுமா என்னும் வினா அவர்கள் நெஞ்சைப் பிழிந்தது.

  கனிந்த நட்பும் ஆழ்ந்த அன்புள்ளமும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள்  விரும்பியபோதும், இலக்குவனார் தமிழக அரசுப்பணியில் திகழ்வதை ஏனையோர் விரும்பாத சூழலில் அண்ணாவுக்கு மனச்சோர்வு அளிக்காத வண்ணம் தமிழ்நாட்டை விட்டே வெளியேறுவது இலக்குவனாருக்குப் பிடித்திருந்தது. தமது பெரிய குடும்பத்தைப் பிரிந்து இரண்டாண்டுகள் ஐதராபாது நகரில் இருந்த இலக்குவனார் அங்கும் தமிழ்ப்பணிகள் ஆற்றினார்.

  தி.மு.க.ஆட்சியைப்போல ஐதராபாது உசுமானியாப் பல்கலைக்கழகம் ஒராண்டுப் பணியுடன் விரட்டிவிடவில்லை. ஐந்தாண்டுகள் வாய்ப்பு அளித்தது. ஆனால் அகவை மூத்தநிலையில் குடும்பத்தைப் பிரிந்து வெளிமாநிலத்தில் நெடுநாள்கள் இருக்க இயலாமல் இரண்டாண்டுகள் சென்றதும் 1970 சூன் திங்களில் தமது பணியைத் துறந்தார். 1970 திசம்பர் வரை நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வர் பணியாற்றினார்.

  அங்கிருந்து ஓய்வு பெற்றபின் மீண்டும் ‘குறள்நெறி; இதழை நடத்தினார்; தமிழ்க்காப்புக்கழகப் பணிகளைத் தொடர்ந்தார். தி.மு.க.ஆட்சி தமிழுக்கு எதுவும் செய்யவில்லை என்னும் மனக்கசப்பில் இருந்தவர் அண்ணா தி.மு.க. நிறுவிய எம்ஞ்சியார். அவர்களுடன் இணைந்தார். ஆனால் அவரது தமிழியக்கப் பணிகளுக்கு அரசியல் சூழல் இயைந்துவரவில்லை.

 தாம் இறக்கும்வரை இலக்குவனார் தமிழ்வளர்ச்சியே தம் வளர்ச்சியாகக் கருதிப் பணிவாய்ப்பையோ பொருள்வளத்தையோ கருதாது தமிழ் உரிமைப் போர்ப் படைத்தலைவராக—தமிழியக்கத் தலைமைப் போராளியாகத் திகழ்ந்தார்.

தமிழியக்கநூற்றாண்டு கொண்டாடும் இவ்வேளையில் அவரது போர்ப்பண்பைப் பின்பற்றி நாம் உழைத்தால் தமிழ் மீண்டும் தலைமையேற்குமாறு செய்யலாம் அல்லவா?

பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

மறைமலைஇலக்குவனார் ; maraimalai_ilakkuvanar

முத்திரை-புதியபார்வை ; muthirai_puthiyapaarvai