(ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 1

தமிழ்நாட்டில் தமிழே எங்கும் திகழ அனைவரும் கருத்தூன்றிப் பணியாற்ற வேண்டும். ஆனால், பெரும்பகுதியினர் தமிழ்த்துறையினர் பொறுப்பு இது என்று வாளா இருக்கின்றனர். மறு பகுதியினர், அரசின் வேலை இது என்று ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால், அனைவருக்குமான கடமை இது என யாரும் உணரவில்லை. அதனால்தான் தமிழ் ஒருபுறம் தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டு உள்ளது; மறுபுறம் சிதைந்து தேய்ந்து கொண்டுள்ளது.

தமிழே நம் தேசிய மொழி!

தமிழ் அழிந்தால் நாமும் அழிவோம்!

உலகிற்கும் அஃது அழிவே!

என உணர்ந்து நாம் நம்மால் இயன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழரல்லாதோர் கணிசமான அளவில் வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் வாழ்ந்தால் நமக்கென்ன? வாழாவிட்டால் நமக்கென்ன? என்று புறக்கணிப்புப் போக்கில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு தமிழ்நாட்டு வாழ்வோடு, தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளதை உணரவேண்டும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள அயலார்,

தமிழே நம் வாழ்வியல் மொழி!

தமிழ் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்!

தமிழழிவு நமக்கும் அழிவே!

தமிழ்நலம் பேணித் தமிழ் நாட்டவராய் வாழ்வோம்!

என உறுதிமொழி எடுத்து ஒல்லும் வகையெல்லாம் தமிழைப் புறக்கணிக்காமல் தமிழுக்கு முன்னுரிமை அளித்து வாழ வேண்டும். தமிழ், தமிழருடன் இணங்கி வாழ விழையாத அயலார், தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள அயலார் தத்தம் தாய்மொழியையும் புறக்கணிக்காமல் தமிழையும் விலக்காமல் தமிழ் மறவாத் தகைமையாளர்களாக வாழ வேண்டும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழர்கள், தமிழையும் விலக்கித் தாம் வாழும் மாநில மொழியையும் புறக்கணித்து, ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் முதன்மை கொடுத்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தாம் வாழும் மாநிலத்து மொழியை விலக்காமல் கற்க வேண்டும். வாய்ப்பு இருப்பின் அதில்  புலமை பெற்று அம்மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள உறவு நிலையையும் இலக்கியச் சிறப்புகளையும் எடுத்துரைக்கவும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடவும் முன்வர வேண்டும்.

தமிழ் நாட்டார் போல் அயலகத் தமிழர்கள் சமற்கிருத்திற்கு இல்லாத உயர்வுகளை இருப்பதாக நம்புவதாலும் இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என அறியாமையால் கருதுவதாலும் அன்றாடப் பயன்பாட்டில் இவற்றிற்குத் தரும் இடங்களை உலக மொழியாகிய தமிழுக்குத் தருவதில்லை. ஆங்கிலத்தையும் இந்தியையும் படிக்கையில் மாநில மொழியும் தமிழும் எதற்கு என்று ஒதுங்கிச் செல்லும் அயல்மாநிலத் தமிழர் பலர் உளர். அத்தகையோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தத்தம் பகுதி தமிழ் அமைப்புகளுடனும் தமிழ்நாட்டுத் தமிழமைப்புகளுடனும் தமிழ் உறவுகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். வாழ்வியல் பயன்பாட்டு மொழி என்னும் தகுதியைத் தமிழுக்குத் தர வேண்டும்.

அயல் மாநிலத்தமிழர்கள்

தமிழே நம் தாய்மொழி!

மாநில மொழியே நம் வாழ்வியல் மொழி!

தமிழையும் மாநில மொழியையும் இரு கண்களாகப் பேணுவோம்!

என்னும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் நற்றமிழ் ஆர்வலர்களாகத் தத்தம் பகுதிகளில் தமிழ் கற்பிக்கவும் தமிழைப் பரப்பவும் தமிழ் உணர்வுடன் செயல்படுகின்றனர். ஆனால், இளந்தலைமுறையினர் தமிழை மறந்து வளர்வதாக மூத்த குடியினர் கவலைப்படுகின்றனர். எனவே, தாம் தாம் வாழும் நாட்டு வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டித் தமிழ்ப்பற்றுடன் செயல்படவேண்டும். எனவே,

தமிழை மறவாதீர்!

தாய் நாட்டை மறவாதீர்!

தாம் வாழும் நாட்டையும் மறவாதீர்!

இலங்கையில் குடியேற்றத் தமிழர்கள் இருந்தாலும் இலங்கையும் ஈழமும் தமிழர்க்குரிய தமிழ்நிலம்தான். சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. மலேசியாவில் தமிழ் பள்ளிக் கல்வி மொழிகளில் ஒன்றாக உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, தமிழை அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. அயல்நாடுகளில் சில, தமிழைப் பண்பாட்டு மொழியாக ஏற்றுள்ளது. புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ்க்கல்வியை வளரும் தமிழ் முறையினருக்கு அளித்து வருகின்றனர். சில நாடுகளில் தமிழ் நாள், தமிழ் மாதம் முதலியவை கொண்டாடப்படுகின்றன.

பருமா, மொரீசியசு, இறீயூனியன், கனடா, பிரான்சு, சீசெல்சு முதலான பல நாடுகளில் தமிழர்கள் குறிக்கத்தக்க அளவில் வாழ்கின்றனர்.  பொதுவாக, 177 நாடுகளில் பேசப்படும் மொழியாகத் தமிழ் உள்ளது.

இவற்றால் வரும் அற்ப மகிழ்ச்சியைத் தமிழன்பர்கள் பெரிதாக விளம்பரப்படுத்தி விடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய உரிமை இல்லாத பொழுது, இந்தியக் கூட்டரசில் அடிமைப்படுத்தப்படும் நிலை இருக்கும் பொழுது பிற நாடுகளில் தமிழ் உரிய தகைமையைப் பெறும் எனக் கனவு காண்பது கானல் நீராகவே போகிறது.

ஒரு பானைச் சோற்றுக்குப் பதமாக, மியன்மா அல்லது மியான்மர் எனப்படும் பருமாவில் தமிழ் நிலை குறித்துப் பார்ப்போம்.

பருமியச் சிறுவர் சிறுமியருக்குத் தமிழ் தெரியவில்லை. அவர்கள் பருமிய வழிக்கல்வியில் படித்து வருவதாலும் வீட்டில் பருமியமொழியே பேசப்படுவதாலும் தமிழை அயல்மொழியாகக் கருதுகின்றனர். பருமிய ஆட்சிமுறையால் தமிழ், பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டமையால், தமிழ் கற்க வழியின்றிப் பருமிய மொழியைப் படித்து அதையே தாய்மொழிபோல் எண்ணுகின்றனர்.” எனினும்,

தமிழால் ஒன்றிணைவோம்! தமிழராய் உணர்வோம்!”

பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்”

எனத் தமிழ் அமைப்புகளும் தமிழ்ப்பள்ளிகளும் உணர்வை ஊட்டி வருகின்றன.

ஏறத்தாழ 15  நூறாயிரம் தமிழர்கள் அங்கு வாழ்ந்தாலும் அரசு முறையான புள்ளிவிவரப்படி சில நூறாயிரமே  காட்டப்படுகின்றன. 1962 இல் அரசுப்பணிகளில் இருந்து தமிழர்கள் நீக்கப்பட்டனர். இப்பொழுது வரை அரசுப்பணிகளில் தமிழர்கள் இல்லை. இது குறித்து முன்னரே நான் எழுதியுள்ளேன். பின்னரும் தனியாக மியான்மர் அல்லது மியான்மா குறித்து எழுதும் பொழுது குறிப்பிட விரும்புகிறேன். இந்தியக் கூட்டரசோ தமிழர்கள் இருக்கும் நாடுகளில் எல்லாம் இந்தியைக் கற்பிக்கவும் பரப்பவும் செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டரசு தமிழர் வாழும் நாடுகளில் மறையும் தமிழை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற நாடுகளில், தமிழ்நிலத்தின் ஒரு பகுதியாக முன்பு அமைந்த நிலப்பரப்பினாலும் பிறப்பினாலும் வேறு வகையாலும் குடியுரிமை உடைய தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் முழு வாழ்வுரிமையைப் பெறுவதற்குத் தமிழக அரசும் பணியாற்ற வேண்டும்.

உலகத் தமிழர் யாவரும்,

மொழியால் தமிழர் என்னும் நிலையை மறக்க வேண்டா.

இனத்தால் தமிழர் என்னும் மரபினைத் துறக்க வேண்டா.

ஆதலின்,

தாய்நாட்டில் தமிழைக் காப்பது முதற்பணி!

அயலகங்களில் தமிழை நிலைக்கச் செய்வது இரண்டாம் பணி!

இவற்றைத் தமிழ் மக்களும் தமிழக அரசும் ஆற்ற வேண்டியதே நாம் செய்ய வேண்டிய தலையாய பணி.

தொடரும் கட்டுரை : 2. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கத்துறை எனப் பெயர் மாற்றுக.

– இலக்குவனார் திருவள்ளுவன்