(தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தொடர்ச்சி)

ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்!

தலைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள இந்தி மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருதக்கூடாது. அவர்களுக்கு இந்தியைச் செயற்படுத்துவதில் உள்ள உணர்வும் செயலும்போல் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்குத் தமிழ் மீது உணர்வும் செயற்பாங்கும் வேண்டும். இது குறித்துப் பின்னர்தான் வேறுவகையில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனால் கடந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர்  “அரசு ஏன் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும். அவரவரை வைத்துக்கொள்ளச்சொன்னால் தமிழில் வைத்துக்கொள்ள மாட்டார்களா” என்று கேட்டார். “அப்படிச் சொன்னால்  ஏறக்குறைய எல்லாமும் ஆங்கிலத்தில்தான் இருக்கும்” என்றேன். இதற்கு முன்னர்ச்  செயலர் சிலர்  அறைகளில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அப்பொழுது அவர்கள், “நான் இங்கு பொறுப்பேற்க வரும் முன்னரே இவ்வாறு வைத்து விட்டார்கள்”, “பழைய பெயர்ப்பலகையைக் கழட்டி இங்கே கொண்டு வந்து மாட்டி விட்டார்கள்”, “என் மீது அன்பு கொண்ட ஒருவர்  அவராக ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைத்துவிட்டார்” என்பனே போல் சொல்லி உடன் ஆங்கிலப் பெயர்ப்பலகையைக் கழற்றச் செய்தனர்.

1990களில் ஒருநாள் புதியதாகப் பொறுப்பேற்ற தமிழ்வளர்ச்சி இயக்குநர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். இயக்குநர்,  “ஏன் வாசலிலேயே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றார். அப்பொழுதும் நான் வாசலில் நின்று கொண்டு கதவைப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் “உள்ளே வாருங்கள்” என மீண்டும் சொல்லிக்கொண்டே வெளியே வந்து கதவைப்பார்த்தார்.

பெயர்ப்பலகை ஆங்கிலத்தில் உள்ளதைப் பார்க்கிறீர்களா? இப்பொழுதுதானே இயக்குநர் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுகிறேன்” என்றார். “இதுவரை தமிழ்வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் இருந்தீர்களே! அப்பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை வைக்காதவர்கள் இப்பொழுது மட்டும் எப்படி வைப்பீர்கள்? எனவே இதனைக் கழற்றி விடுங்கள்.” என்றேன். “இல்லையில்லை! தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுவேன். இது அரசாங்கப்பணத்தில் வைத்த பெயர்ப்பலகை யன்று. என் சொந்தப் பணத்தில் வைத்தது”  என்றார். “அஃதாவது, அரசாங்கப்பணம் என்றால் விதிப்படித் தமிழ்ப்பெயர்ப்பலகை வைத்திருப்பீர்கள். சொந்தப்பணம் என்பதால் அப்படி வைக்கவில்லை என்கிறீர்களா?” என்றேன். “இல்லையில்லை. நான் பெயர்ப்பலகையைக் கழற்றி விடுகிறேன். போதுமா” என்று உடனே கழற்றிவிட்டார்.

பொதுமக்களின் வீடுகளில் பாருங்கள். அங்கொன்றம் இங்கொன்றுமாக எங்கேயாவது தமிழ்ப்பலகையைக் காணலாம். ஆங்கிலப்பலகைதான் எங்கும் இருக்கும். வீடுகளில் முகப்பில் இல்லத்தின் பெயரையும் உரிமையாளரின் பெயரையும் பதித்து வைத்திருக்கிறார்களே! அதுவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு? தமிழ் உணர்வில்லா மக்களின் சிறு பகுதியினரான அரசு ஊழியர்களுக்கு மட்டும் எங்ஙனம் தமிழ் மொழி உணர்வு வரும்? கட்சித்தலைவர்களும் ஆட்சியாளர்களும் தமிழ், தமிழ் எனக் கூவிக் கொண்டிருந்தாலும் இவர்களின் உள்ளங்களில் ஆங்கிலம்தான் வீற்றிருக்கும். இந்த அடிமை நிலை போக வேண்டும். எனவேதான் ஒன்றிய அரசு ஊழியர்களைப்போல் இங்குள்ளவர்களுக்கும்  ஆட்சித் தமிழ் உணர்வு வேண்டும் என்கிறேன்.

ஒருவர், “தமிழ் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுப் பாராட்டக் கூடாதா? எதற்கு எங்கள் குறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறீர்கள்” என்று கேட்டார். சம்பளம் பெற்றுச் செய்யும் பணிகளைப் பாராட்டுவது நம் வேலையல்ல. ஆனால், சம்பளம் பெற்றுக் கடமை தவறும் பொழுது சுட்டிக்காட்ட வேண்டுமல்லவா? நாம் பாராட்டிக் கொண்டிருந்தால் பாராட்டு மழையில் நனைந்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருப்பதாக ஆள்வோரும் மக்களும் எண்ண மாட்டார்களா? சுட்டிக்காட்டினால்தானே குறைகள் களையப்படும். நாம் கடந்த கட்டுரையில் தலைமைச்செயலகத்திலிருந்து தமிழ் பரவ ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை அமைக்க வேண்டினோம். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், “ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் விரைந்து முனைப்போடு செயலாற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை உடன் அமைத்திட வேண்டும் எனும் கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் ஆவன செய்கிறோம்என மறுமொழி அளித்திருந்தார். அவருக்கு நம் நன்றி. 

இதற்கு முன்னரும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், “தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் குறித்த கட்டுரைகளை ஒரு கோப்பில் இட்டு, எதை எவ்வாறு நிறைவேற்றுவது எனத் திட்டமிட்டு வருகிறேன்” என்றார். அவருக்கும் நன்றி.

தமிழ் வளர்ச்சிச் செயலர் மரு.செல்வராசு ... அவர்களிடம் தமிழ் நல முறையீட்டை அளித்ததும் உடன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.

இத்தகைய ஆக்கச் செயல்களுக்காகக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது சரிதானே!

ஆட்சிமொழிச் செயலாக்கதில் யார், யார் தமிழில் வரைவுகள் மடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்ப்பதை விட, மக்களுக்குக் கண்களில் படும், அறிவிப்புகள், விளம்பரங்கள், செய்திகள், பெயர்ப்பலகைகள், தகவல் பலகைகள், பதாகைகள், அழைப்பிதழ்கள்  முதலிய யாவும் தமிழில் இருக்க வேண்டும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு அனுப்பக்கூடிய மடல்கள், மடலுறைகளில் குறிப்பிடும் முகவரிகள் என யாவும் தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்பதை இலக்காக அவர்கள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மணத்தை மக்கள் நுகர முடியும்.

ஒன்றிய அரசின், தகவல் பலகைகள், பெயர்ப்பலகைள், அறிவிப்புகள், விளம்பரங்கள், சுற்றறிக்கைகள், ஒப்பந்த அறிவிப்புகள், பணியாணைகள், அழைப்பிதழ்கள், தகவல் கல்வெட்டுகள் என யாவும் இந்தியில் அல்லது இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில்கூட இந்தியும் ஆங்கிலமும்தான் உள்ளன. அஃதாவது இந்தியில்லாத எதையும் பார்க்க முடியாது. யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைதான். அதுபோன்ற உறுதிப்பாடு நம்மவர்களுக்கும் வேண்டுமல்லவா? இங்கே இவற்றுள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். அல்லது பெரும்பான்மை ஆங்கிலத்தில்மட்டும் இருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு தமிழை இல்லாமல் ஆக்குகிறோமே என்ற கவலையோ வருத்தமோ இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. இத்தகையவர்களுக்குத் தண்டனை கொடுத்தாலதானே திருந்தித் தமிழை வாழ வைப்பார்கள். எனவேதான், ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தவறுசெய்வோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம்.

அரசு ஊழியர்கள் நல்ல வழிகாட்டுதல் இருப்பின் தமிழைப் பயன்படுத்துவதில் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். ஆனால், சில நேர்வுகளில் மேலதிகாரி  போதிய தமிழ் அறியாதவராக இருக்கும் பொழுது அவர் கேட்கிறார் என்பதற்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி விடுகிறார்கள். தமிழாணை மட்டுமே செல்லத்தக்கது என அரசு அறிவித்தால் உயர்அதிகாரிகள் ஆங்கிலத்தில் கேட்க மாட்டார்கள் அல்லவா? இவை குறித்துப் பின்னர்த் தனியாகப் பார்ப்போம். இப்போது நாம் வேண்டுவது மக்களுடன் நேரடித்தொடர்பில் உள்ளவற்றில் தமிழையே பயன்படுத்துங்கள். ஒன்றிய அரசில் பணி யாற்றுவோா்போல் தமிழ் உணர்வுடன் செயற்பட்டுத் தமிழை வாழ வையுங்கள் என்றுதான்.

தமிழ் உணர்வு கொள்வார்களா? தமிழை முழுமையாகப் பயன்படுத்துவார்களா?

தமிழ் நலத்தை வலியுறுத்தும் முதல்வரும் தமிழ் அமைச்சரும் பிற அமைச்சர் பெருமக்களும் தலைமைச் செயலரும் தமிழ் வளர்ச்சிச் செயலரும் தமிழ் வளர்ச்சி இயக்குநரும் இருக்கும்பொழுது கூடத் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றால் எப்போதுதான் தமிழ் வாழும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்