தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 4/4 – சி.சேதுராமன்
(தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 3/4 தொடர்ச்சி)
தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 4/4
மே நாளைப் போற்றி அதில் தொழிலாளர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார் கவிஞர். அத்துடன் சீனப் புரட்சியையும்-ஆசிய நாடுகளின் விடுதலைச் சூழலையும் பாடினார். பொதுவுடைமை என்றால் பாமர மக்கள் அறியாத காலத்தில் இலெனினைப் போல, ஏங்கல்சு போலத் தாமாகவே சிந்தித்து முடிவுகள் மேற்கொண்டு எதிர்நீச்சல் போட்டுப் பொதுவுடைமை இயக்கத்தின் பாவலனாகத் தமிழ்ஒளி விளங்கினார்.
தமிழ்ஒளியின் கவிதைகளில் நேரடியாகவே ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி பேசப்பட்டிருக்கும். மேலும், சமூக-பொருளாதாரத்திற்குத் தனியிடம் கொடுத்து நிரப்பப்படாத இலக்கிய வெற்றிடத்தை முதன் முதலில் நிரப்பியவர் தமிழ்ஒளி. அதனால்தான் அவரைப் ‘பொதுவுடைமைப் பாவலன்’ என்று அழைத்தனர்.
மே நாளை முதன்முதலில் கொண்டாடியவர் தோழர் சிங்காரவேலர் என்றால், அதனை வரவேற்று முதன்முதலில் கவிதை வடித்தவர் தமிழ்ஒளி. இதனைக் கருத்தில் கொண்டே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், “பாரதி-பாரதிதாசன் இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளர்களின் இயக்கமாகிய பொதுவுடைமைப் போர்க்களத்தில் களப்போர் வீரனாக விளங்கியவன்” என்று கவிஞர் தமிழ் ஒளிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார்.
தமிழ் உணர்வு
மே நாளைப் பாடி வெளியிட்ட நூலின் விற்பனையில் பாதித்தொகையை அக்காலக்கட்டத்தில் மலேசியாவில் நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்காகத் தமிழ்ஒளி வழங்கினார். இது அவரின் தமிழ் உணர்வுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இதனைத் தொடர்ந்து அவர், “விதியோ? வீணையோ?” என்னும் இசை நாடகத்தை 1955 –ஆம் ஆண்டில் எழுதினார். இந்தச் சமயத்தில் ஒரு பெண்ணைக் காதலித்து அதில் தோல்வியுற்றுப் பல துன்பங்களுக்கு ஆளான கவிஞர் தமிழ்ஒளி “கண்ணப்பன் கிளிகள்”, “மாதவி காவியம்” என்ற இரு படைப்புகளைப் படைத்தார். இவ்விரண்டிலும் முழுக்க முழுக்க தமிழ் ஒளியின் காதல் தோல்வியால் ஏற்பட்ட மனத்துயரத்தை நாம் நன்கு உணரலாம். கண்ணப்பன் கிளிகள் உருவகக் காப்பியத்தில் ஒலிக்கின்ற ஆண் கிளியின் சோகம் தமிழ்ஒளியின் குரலே என்பது படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்கு விளங்கும்.
‘தமிழ்ஒளி’ என்று தாம் புனைந்து கொண்ட பெயருக்கு ஏற்ப தமிழுக்கும்-தமிழருக்கும் அவர் ஆற்றியுள்ள பணிகள் அளப்பறியன. அந்தக் காலக்கட்டத்தில் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய “நாம் தமிழர்” என்னும் இயக்கத்தில் தீவிரமாகச் செயலாற்றிய தமிழ்ஒளி அவ்வியக்கத்தின் சார்பாக வெளிவந்த ‘தமிழன்’, ‘சமநீதி’ ஆகிய இதழ்களில் பல இந்தி எதிர்ப்புக் கவிதைகளை எழுதினார்.
இலக்கியப் பணி
தமிழ்ஒளி ஏறக்குறைய 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களை ஊ.கோவிந்தன், மா.சு. சம்பந்தன், பெண்ணாடம் வீ.இராமசாமி, செ.து.சஞ்சீவி ஆகிய தோழர்கள் வெளியிட்டுள்ளனர். கவிதை-நாடகம்-ஆராய்ச்சி என்ற வட்டத்திற்குள் மட்டும் தமிழ்ஒளி இயங்கவில்லை. திரைப்படத் துறையிலும் அவர் கால் பதித்தார். 1957இல் வெளியான ‘உலகம்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல் எழுதினார். ஆனால் திரைத்துறை அவருக்குச் சரிப்பட்டு வராததால் விலகிவிட்டார்.
1962-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்ஒளி காசநோய்க்கு ஆளானார். தமிழ்ஒளியின் உடல் நலம் குன்றியது. அவரின் உடல் நலம் குன்றிய போதிலும்கூட கடைசி வரையிலும் அவர் எழுதிக் கொண்டேதான் இருந்தார். 1964-ஆம் ஆண்டில் தனது குருவான பாவேந்தர் பாரதிதாசன் இறந்தபோது,
“உயிரில் உணர்வில் கலந்த கவிஞன்,
என் உயிரில் உயிர் கொண்டு உலவுகிறான்”
என்று மிகவும் வருந்தி எழுதினார். இது தான் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கடைசிக் கவிதை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
“மண்ணில் முளைத்தவன் நான்-அதன்
மார்பில் திளைத்தவன் நான்!
எண்ணித் துணிந்துவிட்டேன்-இனி
எங்கும் பறந்து செல்வேன்”
என்று பாடித் திரிந்த நமது பாட்டாளிகளின் கவிஞன் தாம் பிறந்த ‘ஆடூர்’ மண்ணிலேயே 1965-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29-ஆம் நாளன்று மறைந்தார். தமிழுக்கு ஒளியூட்டிய தமிழ் ஒளி மறைந்தது. ஆனாலும் அத்தமிழ் ஒளியின் கதிரொளி என்றும் பாட்டாளி வரு க்கத்தினரின் இதயங்களில் கலந்து, அவர்தம் இதயங்களில் எல்லாம் நீங்காத இடம்பெற்றுவிட்டது. தமிழ் ஒளியின் புகழ் தமிழிலக்கிய உலகில், தமிழர் தம் நெஞ்சில் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
நிறைவு
முனைவர் சி.சேதுராமன்,
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61105088&format=print
மிக அழகாகப் பாட்டாளிப் பாவலன் தமிழ்ஒளி குறித்த தொடர் உள்ளது.கட்டுரையாளரைப் பாராட்டுகின்றேன்.
அக்கவிஞனைப் பற்றி இன்னும் சொல்ல நிறையவே உள்ளது. அந்தவகையில் ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, கட்டுரை அமைந்துள்ளது. சிறப்பு.வாழ்த்துகள்.