– வெற்றிச்செழியன்

செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம்

தமிழ்வழிக் கல்வி

       “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

        தமிழ் நமது தாய்மொழி என்ற நிலையைத் தாண்டி, தலைமுறைகளாய் வளர்ந்து வரும் மொழி, செவ்வியல் மொழி, செறிவார்ந்த மொழி.  இன்றையப் பல்துறை அறிவு வளர்ச்சிக்கும் இடம் தரும், இயந்து செல்லும் வளப்பமான கட்டமைப்புடைய மொழி.  தமிழில், தமிழ் வழியில் கற்பது, கற்பிப்பது எளியது, ஏற்றது.

தமிழும் தமிழ் வழிக்கல்வியும்

           தமிழ்வழிக்கல்வியே ஏற்றது. ஆனால் ஆங்கில மாயை நம் தாய்த் தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை மேலோங்கச் செய்துவிட்டது. பணம் கொடுத்துப் படிக்கச் செல்கிற தனியார்ப் பள்ளிகளைத் தாண்டி அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

           இன்றைய நிலை இன்னும் இழிவானது.  அரசின் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கற்பிக்கத் தொடங்கி விட்டார்கள்.  ஆங்கிலவழிக் கல்வி குழந்தைகளை, எதிர்காலத் தலைமுறையைச் சீரழிக்கக்கூடியது; சிந்திக்கத் தெரியாத ஒரடிமை இனத்தை உருவாக்கக்கூடியது.

            இவை ஒருபக்கம்.  ஒருமொழி அது புழங்கும் தளங்களாலேயே வாழும்.  நம் தமிழ், பேச்சு மொழியாய், கலைமொழியாய், கல்வி மொழியாய், ஊடக மொழியாய், வழக்கு மொழியாய், வழிபாட்டு மொழியாய்……..என எல்லா

இடங்களிலும் வழங்கப்படும் போதுதான் வளப்படும், வளரும். இவற்றுள் ஒவ்வொரு துறையும்  இன்றியமையாதன.  கல்வி மொழி என்பது தலைமுறை உருவாக்க இடம்.  அக்கல்வி மொழி என்ற நிலையை, தமிழ் இழக்க   நேர்ந்தால் தமிழின் வளமும் வளர்ச்சியும் தடைபடும். தமிழின்    எதிர் காலம் வினாக் குறியாகும்.

       எனவே தமிழைக் காக்க, தமிழை, கல்விமொழியாக மீட்டெடுக்க வேண்டியதும், தக்க வைத்துக் கொள்வதும் இன்றையத் தேவை, உடனடித் தேவை.

ஆங்கில மாயை

           ஆங்கிலேயருக்கு அடிமையாய்க் கிடந்த அடிமை வாழ்வும், இன்றைய உலக மயமாக்கல் வெறியும் ஆங்கில மாயையை நம் தமிழர்களிடையே பெரிய அளவு ஏற்படுத்தி விட்டது. ஆங்கிலம் படித்தால் பணம், பதவி, உயர்வு என்ற கற்பிதங்களைத் தாண்டி, ‘ஆங்கிலமே அறிவு’ என எண்ணும் மயக்கம் பலருக்கு.

            படிக்காத எளிய மக்களைத் தாண்டி படித்த படிப்பாளிகளையும் இந்த ஆங்கில மாயை ஆட்டிப் படைக்கிறது. ‘தமிழ் வழிக் கல்வி, எனப் பேசும் மிகப் பலரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைக்க முடியாத அளவு இயலாமையை, அச்சத்தை ஆங்கிலம் அவர்களிடையேயும் விதைத்துள்ளது.

           ஊடகங்களின் துணையால் ஆங்கில மாயையும் ஆங்கில அடிமை மன நிலையும் கடைக்கோடி தமிழர் வரை பரந்து விரிந்துள்ளது.

தமிழ்வழிப் பள்ளிகளும் தாய்த்தமிழ்ப்பள்ளிகளும்

            தமிழ்வழிக் கல்வியே சரி, தமிழ்வழிக் கல்வி நமது உடனடித் தேவை என எண்ணி ஏங்குபவர்கள் பலர். உரக்க முழங்குபவர்கள் சிலர்,

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி போரட்டக் களம் காண்பவர்கள் மிகச் சிலர்.

        தமிழ்வழிக் கல்வியை வேண்டி விரும்புபவர்களுக்கு நம்பிக்கை விளக்கமே இந்தத் தமிழ் வழிப் பள்ளிகள், தாய்த் தமிழ் பள்ளிகள்.

        வீட்டுக் கல்வி, குருகுலக் கல்வி, திண்ணைக் கல்வி, பள்ளிக் கல்வி எனப் படிப்படியாய் கல்வி முறை வளர்ந்தது.  நம் தமிழ் நாட்டில் இவை தாய் தமிழ் மொழியிலேயே இருந்தன.  ஆங்கிலேயரின் மெட்ரிக் தேர்வு என்ற நடைமுறையைத் தொடங்கி அரசும் தனியாரும் சில ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்துதல் எனத் தொடர்ந்தன. ஆனால் பள்ளிக் கல்வி என்பது பொதுவில், அரசு  நடத்தியதும், தனியார் நடத்தியதும் தமிழ் வழியிலேயே இருந்தன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் ஆங்கில வழிப் பள்ளிகள் சில பலவாகின,  பல எல்லாமுமாகிக் கொண்டிருக்கின்றன.

        இதே காலக் கட்டத்தில் தனியாரின் முயற்சியால் சில தமிழ் வழிப் பள்ளிகள் தொடங்கப் பெற்று அரசின் உதவியுடன் நடத்தப் பெற்று வருகின்றன. சில தமிழ் வழிப் பள்ளிகள் தனியார் முயற்சியில் தொடங்கி நடத்தப் பெற்றன.

         நம் தாய் தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகி வந்த காலத்தில் நம் தமிழ் வழிக் கல்வியின் தேவை மெல்ல உணரப்பட்டது.  தமிழ்வழிக் கல்வி மெல்ல எழுச்சிப் பெற்றது. தமிழ்வழிக் கல்விகளின் முழக்கம் மெல்ல எழுந்தது.

          அறியப்படாமல் தமிழ்வழியில் நடந்து வந்த சில பள்ளிகளுக்கு நடுவில் இறை பொற்கொடி அம்மையாரால் 1991-இல் திருவான்மியூரில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பள்ளிக் கூடம் ஒரு புது முயற்சியாக அமைந்தது. அதைத் தொடர்ந்து  1993-இல் தோழர் தியாகுவால் அம்பத்தூரில் தொடங்கப் பெற்ற ‘தாய்த் தமிழ்ப் பள்ளி ஒரு புதிய முயற்சியாய் அமைந்தது. ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ எனும் பெயரில் பல பள்ளிகள் தொடங்க இதுவே தொடக்கமாக இருந்தது.

          தமிழ்வழிக் கல்வி உணர்வு தமிழ் நாட்டில் பெற்ற எழுச்சியோடேயே தமிழ்வழிப் பள்ளிகள், தாய் தமிழ்ப் பள்ளிகள் பலத் தொடங்கப்பெற்றன, தொடர்ந்து நடந்தன.  தமிழ் வழிக் கல்வி உணர்வில் ஏற்பட்ட தளர்ச்சியில் இன்று அத்தமிழ் வழிப் பள்ளிகள், தாய் தமிழ் பள்ளிகள் மிகச் சிலவாக அருகிவிட்டன.

           தமிழ்வழிப் பள்ளிகளை நடத்துவது ஒரு பெரும் போராட்டம். அதே நேரத்தில் தமிழ் வழி பள்ளிகளே தமிழ் வழிக் கல்விக்கான முதன்மைப் போராட்டம்.  அவற்றைப் பற்றி தொடர்ந்து விரியக் காண்போம்.

(தொடரும்)