(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)

 kaiyedu-document04copy

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 4 

(மொழிபெயர்ப்பு முயற்சி-1) 

இயீன் ஃகைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கப் பெண்மணி, பங்குனி 04, தி.ஆ. 1950 / 1919-ஆம் ஆண்டு மார்ச்சு 17-ஆம் நாள் பிறந்தவர். மிக நல்ல முற்போக்கு எண்ணம் கொண்டவர். வியத்துனாம் போர்க்காலத்தில் எளியவர்கள் சார்பில் போராடியவர். கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்தார்; பிறகு இல்வாழ்க்கை.

  இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவியது எப்படி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயீன் அம்மையாரைக் கத்தோலிக்கப் பாதிரிமார் பற்றிய படிப்பில் ஈர்த்தது. யூதராகப் பிறந்த ஒருவர் (அன்றீக்கு அடிகளார்) சட்டப் படிப்பு (Cannon Law) படித்து, இயேசு   அவையில் (Society of Jesus) சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றியது அவர் கவனத்தை ஈர்த்தது. மேற்கொண்டு அந்தப் பாதிரியைப் பற்றிப் படிக்கத் தொடங்கி, பல வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து, 1964-இல் அந்தப் பாதிரியின் வரலாற்றை எழுதத் தொடங்கினார்.

அப்போது, அந்தப் பாதிரி எழுதிய நூல்களைப் பற்றியும் தெரிந்துகொண்டார். பாதிரியின் ஒரு கையேடு (handwritten manuscript)  பதிப்பிக்கப்படாமலே இருந்ததை அறிந்து,  அந்தக் கையேட்டின் படி இருக்கும் இடத்தை (இலிசுபன், போர்த்துகல்) அணுகி அங்கேயிருந்து ஒரு படியை வாங்கி அதைப் படிக்கத் தொடங்கினார்.

ஆ, அப்போதுதான் வந்தது சிக்கல்!

சிக்கல் – 1

அன்றீக்கு அடிகளாரின் படைப்பு ஒரு கையேடு. பழங்காலப் (16-ஆம் நூற்றாண்டு) போர்த்துக்கீசியமும் பழங்காலத் (16-ஆம் நூற்றாண்டு) தமிழும் கலந்து எழுதப்பட்ட ஒன்று. பழங்காலத் தமிழைப் பழங்காலப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்கியது.

   இயீன் அம்மையாருக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்த இலத்தீன் மொழி ஓரளவு உதவி செய்தது. கணவர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததால் பிற பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. பல போர்த்துக்கீசிய அறிஞர்களைக் கலந்து பேசி ஒருவழியாக அந்தக் கையேட்டைப் புரிந்துகொண்டார். ஆனால் … பழைய தமிழ் குறுக்கிட்டது!

என்னுடன்தொடர்பு

 1978-இல் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாவீது மெக்கால்பின் மூலமாக அங்கே முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்துகொண்டிருந்த என்னைப் பற்றி இயீன் அம்மையாருக்குத் தெரியவந்தது.

பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்ப்பதில் எனக்கு விருப்பம் இருக்குமா என்பதில் இயீன் அம்மையாருக்கு ஐயம். அதைப்பற்றி என்னைக் கேட்பதற்காகப் பிலடெல்ஃபியாவுக்கு வந்தார். தொல்காப்பியம்-பாணினி பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உடனே அவருடன் இணைந்து வேலை செய்ய ஒத்துக்கொண்டேன்.

  அதன் பிறகு, நேரம் கிடைத்தபோதெல்லாம் அவர் ஊருக்குப் போவேன்; அவரும் அடிக்கடி நான் இருந்த ஊருக்கு வருவார். இப்படி இருவருமாக இணைந்து வேலை செய்து மொழிபெயர்ப்பை ஒருவழியாக 1980-இல் முடித்தோம்.

  முடித்தோம் என்று எளிமையாகச் சொல்கிறேன். ஆனால், சிக்கலான சிக்கல்!

சிக்கல்2 

பாதிரியாரின் கையேடு பல இடங்களில் தெளிவாக இல்லை; தாளைப் பூச்சி அரித்த இடங்கள், மையின் கருப்புப் பூசல், அடித்தல் திருத்தல்கள், கொஞ்சம் போர்த்துக்கீசியம், கொஞ்சம் தமிழ் என்று இருக்கும் இடங்களே மிகுதி. “en” என்ற சொல் போர்த்துக்கீசியமா தமிழா என்று பார்த்தவுடனே சொல்லிவிட முடியாது! “chati” என்று எழுதப்பட்ட ஒரு சொல்லை எப்படிப் புரிந்துகொள்வது? சதி? சத்தி? சாதி?  சாத்தி? சட்டி? சடி? சாடி? கதி? கத்தி? காத்தி? கடி? காடி? காட்டி? கட்டி? — இப்படிப் பல வகையிலும் நினைத்துப் பார்த்துத்தான் பாதிரியார் சொல்லவந்த கருத்தைப் புரிந்துகொள்ள முடியும்!

தமிழ் ஒலியைப் போர்த்துக்கீசிய எழுத்து வழியாகக் காட்டப்பட்ட இணைப்பைப் புரிந்துகொள்வது எளிமையாக இல்லை. பாதிரியின் கையேடு முழுவதையும் பற்பல முறைகள் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது! ஓரிடத்தில் உள்ள சொல்லுக்கு இன்னோர் இடத்தில் இருக்கும் சொல்லின் வடிவம் விளக்கம் தரும், இப்படி.

ஆனாலும் … “கூரைப்பாய் தோணிய்லெ இருக்கிது” “கோளி திண்டான்” என்று எங்கள் பாதிரி தந்த எடுத்துக்காட்டுகளைப் புரிந்துகொள்ளூம்போது கிடைக்கும் பெருமித மகிழ்வு இருக்கே … அதுக்கு இணையே இல்லை!! 

இப்படியே எங்கள் முயற்சி தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள “அனைத்துலகத் தமிழ் ஆய்வுக்கூடம் (International Association of Tamil Research)” என்ற இடத்தில் எங்கள் நூலைப் பதிப்பிக்க இயீன் அம்மையார் விரும்பினார்.

அந்த ஆண்டு (1980) நான் என் முழுநேர ஆசிரியப் பணியைத் தொடரவேண்டி, இயீன் அம்மையாரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு மிச்சிகனுக்குப் புலம் பெயர்ந்தேன்.

1982-இல் மீண்டும் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பணிக்குத் திரும்பினேன்.

  சிக்கல் 3

  1982-ஆம் ஆண்டில் செருமனியிலிருந்து ஒருவர் நம் பாதிரியாரின் கையேட்டைப் பதிப்பித்திருக்கிறார் என்ற செய்தி வந்தது! அதைக் கேட்டதும் இயீன் அம்மையார் ஊக்கம் இழந்தார்கள். நாம் செய்துவந்த வேலையை வேறு யாரோ ஒருவர் செய்து முடித்துவிட்டார், இனி நம் உழைப்புக்கும் செயலுக்கும் மதிப்பில்லை என்று போட்டது போட்டபடி … எங்கள் ஆய்வைத் தொடர்ந்து செய்வதில் விருப்பமும் ஊக்கமும் இழந்தார்.

  என்னால் ஆனமட்டும் சொன்னேன்: “செருமனிப் பதிப்பாளர் நம் பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்க்கவில்லை. நம் முயற்சி மிகவும் வேறுபட்டது. ஊக்கம் இழக்க வேண்டாம்.“

  இயீன் அம்மையாரின் தளர்ந்த உள்ளம் மீண்டு வரவேயில்லை.

1982-க்குப் பிறகு நான் என்னுடைய சொந்த ஆய்வுகளில் ஈடுபட்டேன். சங்க இலக்கியங்களுக்கான இலக்கண நூல் எழுதினேன். இன்ன பிற ஆய்வுகள் செய்தேன்.

(தொடரும்)

http://mytamil-rasikai.blogspot.in/2013/04/4.html

Rasam_ramamurthy