தமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார்
தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும் விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்: கார்த்திகை 01, தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)] மட்டுமே!
அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன. அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர், செந்தமிழ்மாமணி, செந்தமிழ் நலம் பேணும் செல்வர், தமிழ் ஞாயிறு, தொல்காப்பியச்செல்வர், முத்தமிழ்க்காவலர், தமிழ் மொழியின் தனிச்செல்வர், தமிழ்க் கொண்டல், தமிழ்த்தாய் முதலிய பட்டங்கள் அவரின் பிறமொழிக் கலப்பில்லாத செந்தமிழ்ப்புலமையையும் அவற்றை மக்களிடையே கொண்டு சென்ற பரப்புரைகளையும் உணர்த்துவன.
தன்மானத்தமிழ் உணர்வு ஆசிரியர்களின் மாணாக்கராகப் பள்ளியில் இவர் படித்தது இவரின் கிடைத்தற்கரிய பேறு என்று சொல்ல வேண்டும். இவர்களால் பள்ளி வாழ்க்கையிலேயே தூயதமிழ் உணர்வு இவரிடம் முளைவிட்டுப் பரவலாயிற்று. பள்ளியில் பாராட்டு விழா, வழியனுப்பு விழா முதலான விழாக்கள் நடைபெறும்பொழுது நல்ல தமிழில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.
புலவர் கல்லூரி மாணாக்கனாக இருந்த பொழுது உடன் படித்த நண்பர்களை இணைத்துக் கொண்டு விடுமுறைகளில் தூயதமிழ்ப் பரப்புரை மேற்கொண்டார். இளம்புலவர் வகுப்பில் படிக்கும்பொழுது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்க் குறும்பாவியத்தை எழுதினார். படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப்பாவலாகத் திகழ்ந்து தூயதமிழ் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
வகுப்பில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.சா.சுப்பிரமணிய(சாத்திரியார்) தொல்காப்பியத்தின் தொன்மையைச் சமசுகிருத நூல்களுக்குப் பின்னராகக் கற்பித்தார். தமிழ்ச்சொற்களின் மூலமாகச் சமசுகிருதச் சொற்களைக் காட்டினார். தூயதமிழ்க்காப்பு என்பது பிற மொழிச்சொற்களை அகற்றி நல்ல நடையைப் பேணுவது மட்டுமல்ல. தமிழின் மீது திணிக்கப்பட்ட அயல்கருத்துக் கறைகளைப் போக்குவதும்தான் என்பதே இலக்குவனாரின் இலக்கு. எனவே, அவற்றை உடனுக்குடன் ஆதாரங்களுடன் மறுத்தார். இதன்மூலம் உடன் பயில்வோருக்கும் தமிழ்க்காப்பு உணர்வு வரலாயிற்று.
தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து முதல்வராகப் பணி நிறைவு பெற்றது வரை தூயதமிழை வளர்க்கும் பணிகளிலேயே ஈடுபட்டார். வருகையின் பொழுது “Yes Sir”, “Present Sir” என்றெல்லாம் சொல்வதற்கு முற்றுப்புள்ளி இட்டார். “உள்ளேன் ஐயா” எனச் சொல்ல வைத்தார். பின்னர் “உள்ளேன் ஐயா” என்பது தமிழ்நாடு முழுவதும் பரவியது. விளையாட்டிலும் அனைவரும் எண்களைத் தமிழில் சொல்லவும் ‘Love all’ என்று சொல்லாமல் ‘அன்பே கடவுள்’ என்று சொல்லவும் வைத்தார். வகுப்பில் பிற சொற்கள் கலப்பில்லாமல் நல்ல தமிழிலேயே பேசவேண்டும் என்ற உணர்வை விதைத்தார். அப்படி யாரும் தவறுதலாகப் பிற மொழிச்சொல்லைப் பயன்படுத்தினால், “ஐயா, நம் வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமா ஐயா. அதற்காகவா நான் இத்தனை பாடுபடுகிறேன் ஐயா” என வருந்தி உரைப்பார்.
பேராசிரியர் இலக்குவனார் “இனிய எளிய தமிழைப் பயன்படுத்த வேண்டும். அதுவே தமிழ் வளரும் வழி.” என்னும் நோக்கம் கொண்டவர். எனவேதான் சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு முதலான திங்களிதழ், திங்களிருமுறை இதழ்கள், நாளிதழ் எனப் பலவகைகளிலும் இதழ்கள் மூலம் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு சேர்த்து மக்களின் அறிஞராகத் திகழ்ந்து தூய தமிழைப் பரப்பினார். ‘Dravidian Federation’, ‘Kural Neri’ ஆகிய ஆங்கில இதழ்கள் நடத்தி அவற்றின் மூலம் தூய தமிழ்ப்பண்பாட்டையும் தூய தமிழ் நெறியையும் தமிழ் அறியாதவர்க்கு உணர்த்தினார்.
இவர் பாடங்கள் நடத்தும் பொழுது தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்கள், தமிழ்ச்சொற்களின் தொன்மை, தமிழ்ச்சொற்களில் இருந்து உருவான சமசுகிருதச் சொற்களை மூலச்சொற்களாகக் காட்டும் அறியாமை ஆகியவற்றை விளக்கினார். “தமிழைச் சிதைக்கும் அயற்சொற்களை அகற்றுவதும் இனி அயற்சொற்கள் நுழையாமல் தடுப்பதுமே தமிழாசிரியர் கடமை” என்ற அவர் தாமும் அவற்றைப் பின்பற்றினார். புலவர் விழாக்களையும் இலக்கிய விழாக்களையும் நடத்தித் தூயதமிழ் உணர்வுகளை மாணாக்கர்களிடையே பரப்பினார். தனிப்பட்ட வகுப்புகள் நடத்திப் பொதுமக்களும் தமிழ்ப்புலவராக வழி வகுத்தார். மக்களிடையேயும் தூய தமிழ் உணர்வைப் பரப்பினார். மக்கள் பெயர்களைத் தமிழில் சூட்டவும் கடைப்பெயர்களைத் தமிழில் இடவும் ஊர்வலங்கள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார். தமிழுக்காக ஊர்வலம் நடத்துவதில் இவரே முன்னோடி! தனித்தமிழ்க்காப்புத் தலைவராகப் பன்முகச்சிறப்புடன் திகழ்ந்து தூயதமிழ் பரப்பியவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
தூயதமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நாமும் மொழித்தூய்மை பேணுவோம்! தமிழின் புகழை நிலைக்கச் செய்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 03.09.2019
Leave a Reply