(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – 3/4

சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். சைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவக-சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு பழந்தமிழகத்தின் வரலாற்றுக் கருவூலமாக விளங்குவது. எனவே பழந்தமிழரின் கொடை வளத்தையும் வாழ்க்கை வளத்தையும் அறிந்து கொள்ளத் தலைப்பட்டார். இவர் தொண்டால் முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் மக்களிடையே பரவத் தொடங்கியது. பெளத்த சமய நூலான மணிமேகலை தமிழரிடையே அறக்கருத்தைப் போதித்தது. பத்துப்பாட்டின் இலக்கியப் பெருந்தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தது. ஐயர் அவர்களின் பெருமையும், அறிவும், பண்பாடும்: பதிப்புத் திறமையும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்றன. பின் ஐயர் அவர்கள் ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் தொகை நூல்களை வெளியிட்டார். கொங்குவேள் என்னும் புலவர் இயற்றிய ‘பெருங்கதை’ என்னும் இடைக்கால இலக்கியம் அச்சுக்கு வந்தது.

இலக்கிய நூல்களைப் பதிப்பித்ததோடு அன்றி இலக்கண நூல்களையும் சாமிநாத ஐயர் நன்கு பதிப்பித்தார். புறப்பொருள் வெண்பா மாலை. நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை முதலான இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.

அடுத்து, சமய இலக்கியங்களையும் இவர் திறமையாகப் பதிப்பித்தார். நம்பி திருவிளையாடல், திருக்காளத்திப் புராணம் முதலியன இவரால் வெளியிடப் பெற்றன. கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ். குறவஞ்சி முதலிய சிறுபிரபந்த நூல்கள் இவரால் உரையுடன் பதிப்பிக்கப் பெற்றன.

பதிப்பின் திறம்

ஏட்டிலிருந்த பாடத்தை இவர் அப்படியே பதிப்பிக்கவில்லை. ‘ஏடு எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. ஆதலால் ஒரு முறைக்குப் பலமுறை நன்கு ஆராய்ந்து செல்லரித்துப் போன இடத்தையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தக்க பாடங்களை ஊகித்துத் தம்பாலுள்ள பயிற்சியாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும் பழஞ்சுவடிகளை ஆராய்ந்து செப்பம் செய்தார். திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழி அமைத்துக் கொண்டு புஞ்சைக் காட்டை நஞ்சைக் காடாக்கிய நல்ல அறிவு உழவர் இவர். இவருடைய பதிப்பின் திறம் இன்று பேராசிரியப் பெருமக்களால் ஒருமுகமாகப் பாராட்டப் பெறுகின்றது. இவர், தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலுக்கும் எழுதியுள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும் நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும், அறிவு உலகத்தால் என்றென்றும் பாராட்டப்படும் தகுதி வாய்ந்தன. இவர் எடுத்துக் கொண்ட உயர்வு மிக்க சிறப்பு, ஊக்கம் நிறைந்த உயர் உழைப்பாகும். எனவே மறைந்த இராசாசி அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது;

‘சாமிநாத ஐயர் முயற்சியுடன் எறும்பும் தேனீயும் போட்டி போடலாம்’ என்றும், ‘தமிழ்மொழியின் லாவகமும்’ எளிய நடையில் ஆழ்ந்த பொருள்களை அளிக்கும் அதன் ஆற்றலும் இவரால் நமக்குத் தெரிய வந்தன.’ என்றும், ‘தமிழ் வியாசர்’ என்றும் இவரைப் போற்றியுள்ளார். இவருடைய பதிப்பு நூல்களில் ஒவ்வொரு பக்கங்களின் அடியிலும் அடிக்குறிப்பில் பலவகையான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப் பெற்ற ஒப்புமைப் பகுதிகளும் சொல்லாற்றல் வளமும் காணப்பெறும். நூலின் இறுதியில் நூல் களில் வந்துள்ள பொருள்களின் பெயர் அகராதி (Word–index) இருக்கும். ஆகையால் ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் இவருடைய பதிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன.

உரைநடைப் பணி

தாம் பதிப்பித்த நூல்களின் முன்னுரையில் அந்நூலைப் பற்றிய சிறந்த செய்திகளை-ஆராய்ச்சி நலன்களை அழகுச் செவ்விகளைப் புலப்படுத்த எளிய இனிய உரைநடையினைக் கையாண்ட சாமிநாத ஐயர், விரிந்த அளவில் மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் முதலிய உரைநடை நூல்களை எழுதினார். மேலும் இவர் கோபாலகிருட்டிண பாரதியார், வைத்தியனாதையர், கனம் கிருட்டிணய்யர் முதலிய பெரியோர் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். ‘நல்லுரைக் கோவை’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாங்கி நான்கு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ‘நினைவு மஞ்சரி’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை கொண்ட இரு தொகுதிகளாகும். ‘புதியதும் பழையதும்’, ‘கண்டதும் கேட்டதும்’ முதலியன நல்ல தமிழ் நூல்களாகும்.

சென்னை மாற்றம்

1903ஆம் ஆண்டு வரை குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் 1903ஆம் ஆண்டிலிருந்து 1919ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கொலு வீற்றிருந்தார். கல்லூரியில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதோடு அமையாமல் வீட்டிலும் தம்மிடம் பயில வந்த மாணவர்களுக்கு இவர் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் பாடம் கேட்டவர்களில் வியாசபாரதத் தமிழ்மொழி பெயர்ப்பு ஆசிரியர் ஆகிய மகோ மகோபாத்தியாய இராமானுசதச்சாரியர், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான், துள்ளும் நடையில் நெஞ்சையள்ளும் காவடிச் சிந்து பாடிய சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் முக்கியமானவர்கள் ஆவர். இவரிடம் பயின்று ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்ட பின்னர் நற்றிணையைப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவர். மற்றொருவர் இ. வை. அனந்தராம ஐயர் ஆவர். இவர் கலித்தொகையைப் பதிப்பித்தார்.

அண்ணாமலைப் பணி

1924 முதல் 1927 வரையில் செட்டி நாட்டு அரசர் இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்கள் சிதம்பரத்தில் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் தலைவராகப் பணியாற்றினார்.
(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்