தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?
by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடு
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத் தமிழக அரசின் பாடலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன. 1960இல் தமிழகப் புலவர் குழுவின் செயலராக இருந்த பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழக அரசிற்கு இது குறித்து கோரிக்கை அனுப்பினார். நடவடிக்கை எதுவும் இல்லை. அவர் இரண்டாம் முறை அதன் செயலராகப் பொறுப்பேற்றார்.அப்பொழுது மீண்டும் அரசிற்கு மடல் அனுப்பினார். அப்பொழுது முதல்வராக இருந்த அவர் மாணவரான கலைஞர் கருணாநிதி இதனை ஏற்றார். 1970ஆம் ஆண்டு மார்ச்சு 11ஆம் நாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக முதல்வர் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் சிலரிடம் இருந்து வந்த எதிர்ப்பால், ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் நீக்கப்பட்டுப் பிற பாடல் வரிகளை ஏற்றார். இந்த திசம்பர் 17ஆம் நாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வர் மு.க. தாலின் தலைமையிலான தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதுகுறித்து தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் அளித்த நேர்காணல்:
கேள்வி: தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த (“தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். மேலும், தனியார் மத்தியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஊக்குவிக்கப்படும் என்னும்”) தமிழக அரசின் ஆணை குறித்து என்ன கருதுகிறீர்கள்?
இலக்குவனார் திருவள்ளுவன்: பாராட்டப்பட வேண்டிய ஆணை. தமிழ்த்தாயைத் தலைநிமிரச் செய்த ஆணை.
கேள்வி: ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?
திருவள்ளுவன்: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பில் “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, கலந்து கொள்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் எனச் சட்டப்பூர்வமாகவோ, நிருவாக முறையிலோ உத்தரவு எதுவும் இல்லை “ என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அரசு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. கண்டித்தும் அறிக்கை விடவில்லை. மாறாக இதற்கான சட்டம் இல்லை என்றுதானே நீதிபதி கூறுகிறார். அதற்கு ஆவன செய்வோம் என உரிய சட்டத்தை இயற்றியுள்ளார்கள்.
“வாழ்த்து பாடப்படுவதுடன் அனைவரும் எழுந்து நிற்பதும் அவசியம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இசைத்தட்டு ஒலிக்கச் செய்வதை விடப் பாடலில் தேர்ச்சிப் பெற்றவரை கொண்டு வாய்ப்பாட்டாக பாடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என அரசாணை கூறுகிறது. எனவே, இதுவரை எழுந்து நிற்காதவர்கள்கூடச் சட்டப்படி எழுந்து மதிப்பளிக்க வேண்டும். எனவே, வழக்கினால் நல்லதுதான் நடைபெற்றுள்ளது. தன்னை மதிக்காத தமிழ் மக்களால் தலை குனிந்த தமிழ்த்தாய் இப்பொழுது தலைநிமிர்ந்து காட்சியளிக்கிறார். எனவே, தலைகுனிந்த தமிழன்னை மகிழும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டம் இயற்றிய முதல்வர் மு.க. தாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்பான அதிகாரிகள் அனைவரும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள். எதிர்ப்பு கண்டு ஒதுங்கவும் இல்லை. அதனை எதிர்த்துச் சிக்கலையும் உருவாக்கவில்லை. மாறாகத் தக்க தீர்வு கண்டுள்ளார்கள். தமிழ் உலகு உள்ளளவும் இச்செயல் என்றும் பாராட்டிற்குரியதாகும்.
சமற்கிருதப்பாடலை மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருக்கலாம் அல்லது திரைப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது தமிழையோ தமிழ்த்தாயையோ திட்டிக் கொண்டுகூட இருக்கலாம். எனவே, ஒன்றுபோல் தமிழன்னைக்கு மதிப்பளிக்காமல் அவரவர் வழியில் மதிப்பளிக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தவறு செய்தவர்கள் மீது மதிப்பு இருந்தால், அவர்களின் தவறான செயல்களும் நல்ல செயல்களாகத்தான் தெரியும். எனவேதான் தவறான புரிதலில் தீர்ப்பு வெளிவந்துள்ளது எனலாம்.
கேள்வி: என்ன நீங்கள், தமிழைத்திட்டிக்கொண்டுகூட இருக்கலாம் என்று சொல்கிறீர்கள்?
திருவள்ளுவன்: தமிழ்ப்பகைக் குணமே இவர்களின் பரம்பரைக்குணம்தானே. உலகம் தொழுது போற்றும் திருக்குறளைத் தீய குறள் என்று சொன்னவர்களும் தமிழ் அறநெறிக்கருத்துகளுக்கு எதிராக நச்சுப் பரப்புரை மேற்கொள்பவர்களும் எப்படித் தமிழ்த்தாயை வணங்குவார்கள்? அவர்கள் பரம்பரையில் வந்தவர் எப்படி இருப்பார்?
சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல் உண்டு எனக்கூறித் தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவரின் பரம்பரையில் வந்தவர் எப்படித் தமிழை மதிப்பார்?
எப்பொழுதுமே அவர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்துவதில்லை என்று கூறியிருக்கும் பொழுது கண்களை மூடிக்கொண்டு தமிழை வாழ்த்தியிருப்பார் என்பது அவருக்கே எதிரான கருத்துதானே.
கேள்வி: அதைத் தவறு என்றாலும் தனி ஒருவர் தவற்றால் என்ன ஆகப்போகிறது?
திருவள்ளுவன்: அப்படிச்சொல்லக்கூடாது. அவரது ஆதரவாளர்களும் தமிழ்ப்பகைவர்களும் அதைப் பின்பற்றுவார்கள்; பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட நிகழ்வு நடந்த சில வாரத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது பார்வையாளர்கள் எழுந்து நின்றனர். மேடையில் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள். இதைப்பார்த்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் எழுந்து நிற்கக்கூடாதுபோல எனக் கருதி அமர்ந்து விட்டார்கள். கூட்டம் முடிந்ததும் மேடையில் இருந்த தமிழ்ப்பணி ஆற்றுவதாகக் கருதப்படும் இதழாசிரியரைச் சந்தித்தேன். ‘‘பிறர் அமர்ந்திருந்தாலும் நீங்கள் எழுந்து நின்றால் அவர்களும் எழுந்து நிற்பார்கள் அல்லவா? தமிழ்த்தொண்டாற்றுதாகக் கூறிக்கொண்டு தமிழ்த்தாயை மதிக்காதிருப்பது சரிதானா?’’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘‘தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கத் தேவையில்லை. அது ஒரு பாட்டு. அவ்வளவுதான்’’ என்றார். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழை மதிக்காதவர்கள் பெருகுவதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
கேள்வி: இதுகுறித்து நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
திருவள்ளுவன்: இத்தகைய தவறான போக்குகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் தமிழரல்லாதவர்களும் தமிழ்த்தாயை மதிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தமைக்காகத் தமிழ்நாட்டின் முதல்வருக்கும் தமிழ் வளர்ச்சி அமைச்சருக்கும் தமிழக அரசிற்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் மீண்டும் தெரிவிக்கிறேன்
வழக்கம் போலவே உங்கள் கனல் தெறிக்கும் கருத்துக்களுடன் கூடிய செவ்வி! யார் என்று குறிப்பிட்டுச் சொல்லாமலே தவறு செய்தவர்களை, செய்பவர்களைச் சரியாகச் சாடியிருக்கிறீர்கள் ஐயா! தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பாட்டுதான் எனச் சொன்ன அந்த இதழாசிரியர் பெயரைச் சொல்லவில்லையே!