(இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6 தொடர்ச்சி)

7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்

வாழ்வும் பயனும்

இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின்றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் இலக்கியத்தையும், அரசியலையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டுணர்வுடன் இணைத்து இழைத்துப் பார்த்த வித்தகர் திரு. வி. க மொழிக் கண்ணோட்டத்திலிருந்து உரைக்கும் போது ஒரு திருப்பு மையத்தையும், அரசியல் பார்வையிலிருந்து அணுகும்போது சமய உணர்வுடன் கலந்த விடுதலை எழுச்சியையும், பொருளாதாரக் கோணத்திலிருந்து குறிப்பிடும்போது முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும் கொண்ட எளிமை, மறுமலர்ச்சி, காந்திய தெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர் எனலாம்.

பிறப்பும் கல்வியும்

திருவாரூரில் விருத்தாசல முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் செங்கற்பட்டு துள்ளல் எனும் கிராமத்தில் 26.8-1883 இல் பிறந்த கலியாணசுந்தரனார் சென்னை, இராயப்பேட்டை ‘ஆரியன் பிரைமரி பாடசாலை’யிலும், வெசுலி கலாசாலை உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ்ச் சுவையறிந்த இவர், மயிலை தணிகாசல முதலியாரிடம் சித்தாந்தம் பயின்றார். பின் மறை மலையடிகளிடம் இலக்கியத் தேர்ச்சி பெற்றார்.


சமயப் பணியும் ஆசிரியப் பண்பும்

சைவ நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சனசபையிலும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்திலும் சொல்லாலே உழவாரப் பணிபுரிந்த நாவுக்கரசராய்த் திகழ்ந்தார். பென்சர் கம்பெனியில் பணியாற்றியிருந்த காலத்தில், சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாகச் செயலாற்றியிருந்த இவர் ‘திலகர்’ சிறைப்பட்ட செய்தியறிந்து பணியை விடுத்தார். நாட்டுணர்வில் நாட்டம் கொண்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட விழைந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்றார். தொடர்ந்து வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பொறுப்பினைச் சிறப்பித்தார். இக்காலக் கட்டத்தில் சைவ சித்தாந்த மகா சமாசத்திலே இலக்கியவாணர்களும் பாமர மக்களும் போற்றும் வண்ணம் செஞ்சொல் நடையில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.


இல்லறமும் எழுத்துலகமும்


1912ஆம் ஆண்டு ‘கமலாம்பிகை’ என்ற அம்மையாரை மணந்து, ஆறாண்டு கால இல்லறவாழ்வை மட்டும் பெற்று. மனைவியையும், ஈன்ற ஆண்மகவு ஒன்றையும் பெண்மகவு ஒன்றையும் இழந்தார். பின் திரு.வி.க. துறவி நிலை அடைந்தார். ஆனால் சமுதாயத் தொண்டினை உயிர் மூச்சாகக் கொண்டார். 1917ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ என்ற நாளிதழினைத் தொடங்கி, நாட்டுப் பற்றினைத் தமிழ் மக்கள் நெஞ்சிலே கொழுந்திடச் செய்தார், தொழிற் சங்கம் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து தொழிலாளர் தம் வாழ்வில் விடிவை உருவாக்க, ‘வாடியா’ என்பவரின் துணையுடன் 27-4-1918 அன்று ஆசியாவிலே முதன் முதலாகத் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். பின், நாளிதழ் ஆசிரியராகவும், தொழிலாளரின் ஆதரவு பெற்ற தலைவராகவும், சிந்தனையைக் கிளறும் எழுச்சியுரைப் பேச்சாளராகவும் திகழ்ந்து இவருடைய பணி காங்கிரசு இயக்கத்தில் பொலிவுற்றது. பேச்சிலும், எழுத்திலும் பெருமிதம் காட்டி. எண்ணற்றோரைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கச் செய்தார். மொழி வேறு, இலக்கியம் வேறு. சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலையை மாற்றி, அனைத்தையும் ஒரே பார்வையில் கொண்டுவந்து ஆற்றிய பணி அவர்தம் தனித்தன்மையைக் காட்டி நிற்பதாகும். பக்கிங்காமில் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களின் வேதனைக்கு விடிவு கண்டார். தொழிலாளர் தலைவரானார்.


வாழ்வும் தொண்டும்


அவருடைய வாழ்வும் தொண்டும் ஒரு துறையினைச் சார்ந்ததாக இல்லை. பல்வேறு துறைகளில் தனிப்புகழ் பெற்று விளங்கிய தமிழ் முனிவர் அவர். ஆம். “அவர் தொடாத துறை ஒன்றுமில்லை: தொட்ட துறைகளை அழகு படுத்தாமல் விட்டதில்லை” எனப் பாராட்டப் பெறும் அளவிற்கு அவர் அரசியல், சமயம், இலக்கியம், பொருளாதாரம், மகளிர் முன்னேற்றம், தொழிலாளர் நலம், இளைஞர் திறம், சீர்திருத்தம், நாட்டுயர்வு முதலான கோணங்களில் ஆரவாரமின்றி அமைதியாகத் தொண்டாற்றினார். மொழிப் பற்றும், சமயப் பற்றும், நாட்டுப் பற்றும் நிறைந்த அவர் நாடு விடுதலை பெற, மொழி நலம் சிறக்க, சமயப்பற்று மிளிரத் தகைசால் தொண்டாற்றினார். அவர்தம் தனித் தொண்டால் மகளிர் முன்னேற்றமடைந்தனர். இளைஞர் ஏற்றம் பெற்றனர்.


பேச்சும் எழுத்தும்


சிலருக்குப் பேச்சு கடல் மடைதிறந்தாற்போல் வரும். எழுத்து என்றால் ஒரு வரியும் ஓடாது. சிலர் எழுதி எழுதி நூல்களைக் குவிப்பார்கள். ஆனால் மேடையேறிச் சில மணித் துளிகளேனும் பேசுவதென்றால் மெய்ந்நடுக்கம் ஏற்பட்டு நாத்தழுதழுத்துச் சொற்களே வாயினின்றும் வெளிவராமல் நின்று விடுவார்கள். சிலருக்குப் பேச்சு வரும்; எழுத்து வரும்; ஆனால் பேசிய வண்ணம் எழுதியவாறு சொல்லும் எழுத்தும் செயலும் ஒத்த வாழ்க்கை-உள்ளும் புறமும் ஒன்றான வாழ்க்கையைக் காணல் அரிது. நாவும் நடப்பும் ஒன்றாக்கிச் செயல்வழிச் சான்றோராய்த் திகழ்ந்தவர் திரு.வி.. ஆவார்.

திரு.வி.க, அவர்கள் நெஞ்சம் தேசியத்தில் ஊறித் திளைத்தது. அவர் காந்தியடிசுளின் கோட்பாட்டிலே கொண்டிருந்த ஆழமனஈடுபாடே. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்எனும் நூலாக விரிந்தது. பெண்களின் வாழ்வு துலக்கம் பெற்றுத் துரண்டா விளக்காய்ச் சுடர்விட வேண்டுமென்ற எழுச்சியே பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை எனும் நூலாக மலர்ந்தது. இன்றைய இளைஞர்கள் வீறு கொண்டோராய் மட்டுமின்றி, விடுதலைப் பணிபுரியும் வித்ததராய் விளங்க வேண்டும் என்ற கருத்தே ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலாகக் கனிந்தது. இலக்கியத்தை ஆய்ந்து காணும் நோக்கிற்கும், இசைவான எழில் நடைக்கும் காட்டாக நிற்பது அவர்தம் ‘நாயன்மார் வரலாறு ஆகும். பெரிய புராணத்துக்கும். காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் எழுதிய குறிப்புரைகள் அவர்தம் சமய அணுகு முறையைப் புலப்படுத்த வல்லனவாகும், தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு என்னும் நூல் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றில் மிதந்த காலத்தின் எதிரொலி யாகும். திரு.வி.க.வின் எழுத்துப் படைப்புகளிலும். சொற் படைப்புகளிலும் முருகன் அல்லது அழகு’. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’, ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி’, ‘உள்ளொளிஎன்பவை இந்த நூற்றாண்டின் நூல்களில் சிறப்பிடம் பெற்றவை என்கிறார் முனைவர் மு.வ.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்