தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.
இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத் திகழ்பவரே செந்தமிழ்க் காவலர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் ஆவார்.
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைக் குறள்நெறிக் காவலராகச், சங்கத்தமிழ்ப் பரப்புநராகத், தொல்காப்பிய அறிஞராக, இலக்கிய உரையாசிரியராக, நூலாசிரியராக, மொழியறிஞராக, நற்றமிழ் நாவலராக, மொழிபெயர்ப்பு அறிஞராகச், சிறந்த கல்வியாளராக, இரு மொழி இதழாளராக, சீர்திருத்தச் செம்மலாகப், பயிற்று மொழிப் போராளியாகத், தமிழ்க் காப்புப் போரின் தலைமைத் தளபதியாக நாடு நன்கறியும். தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றோர், ”பேராசிரியர் சி.இலக்குவனார் ஒரு சிறந்த கவிஞர். அகவல் பாடுவதில் வல்லவர்” எனக் கூறி இருப்பினும் பைந்தமிழ்ப் பாவலராக அவர் தமிழுக்கு அளித்த கொடையினைப் பலரும் அறியவில்லை.
செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனாரின் கவிதைப் பங்களிப்பு அவரது மாணவப் பருவத்திலேயே அரும்பி விட்டது. தாய்த்தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையாளராக விளங்கிய பேராசிரியர் பள்ளிப் பருவத்திலேயே வரவேற்புப் பாக்கள், வழியனுப்புப் பாக்கள் எனப் பலவகைப் பாக்களைப் பிற மொழிச் சொற்களைக் கலக்காமல், செந்தமிழ் நடையில் எளிமையாக எழுதியுள்ளார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, கல்விக்கூட ஆண்டு மலரில் இடம் பெற்ற, ஆங்கிலக் கவிதை யொன்றின் தழுவலான, ‘உலகம் நமதே! உயர்ந்தோர் நாமே!’ என்னும் அகவற்பாடலாகும். பொதுமை உணர்வையும் இன உணர்வையும் வெளிப்படுத்தும் தனித்தமிழ்ப் பாடலை இயற்றியதன் மூலம் தமது தன்மான உணர்வையும் வாழ்க்கைப் பாதையையும் உணர்த்தியுள்ளார் பேராசிரியர் அவர்கள். அகவல் பா அல்லது ஆசிரியப் பா என்பது சங்கப் புலவர்களின் நடையாகும். இதனை மாணவப் பருவத்திலேயே எளிதில் கையாண்ட பேராசிரியர், தாம் சங்கப் புலவர் வழி வந்த தங்கத் தமிழ்ப் புலவர் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளார்.
பேராசிரியர் அவர்களின் படைப்புகளில் நூலாக வந்த முதல் பாவியப் படைப்பு, “எழிலரசி அல்லது காதலின் வெற்றி” என்பதாகும். புலவர் மாணாக்கராய் இருக்கும் பொழுதே இப்பாவியத்தைப் படைத்துச் செந்தமிழ் வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பைத் தொடங்கியுள்ளார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். மொழிபெயர்ப்புத்திறன் மிக்க பேராசிரியர் அவர்கள், அறிஞர் கீட்சு அவர்களின் ‘இசபெல்லா’ நூலைத் தழுவியே இதனைப் படைத்துள்ளார். இருப்பினும் மொழி பெயர்ப்புப் படைப்பு என்று உணராத அளவில், தம் தமிழ்மொழி, இன உணர்வையும் பொதுவுடைமை உணர்வையும் குழைத்து, மொழிமரபைப் பின்பற்றி, மூல நூல் போன்றே படைத்தளித்துள்ளார். எனவே, படிக்கும் பொழுதே(1933) தனித்தமிழ்க் குறுங்காவியம் படைத்த முதல்வராகப் பேராசிரியர் திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பற்றிச் செல்வி கு.இராசலக்குமி என்பார், தம் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேட்டில், இதன் நடைச்சிறப்பு, பொருட் சிறப்பு பற்றிப் பாராட்டியுள்ளார்.
திராவிட இயக்க உணர்வில் ஊறிய பேராசிரியர் அவர்கள், இப்பாவியத்தின் தொடக்கத்திலேயே,
“பெற்றோர் ஈட்டிப் பேணிய பொருளை
மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும்
உரிமையாக்கும் ஒரு விதி”
குறித்துக் குறிப்பிட்டுப் பெண்களுக்கும் பெற்றோர் சொத்தில் உரிமையுண்டு என்பதை வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு வலியுறுத்தியுள்ளோர் பலராக இருப்பினும், அதனைச் சட்டமாகக் கொணர்ந்தவர் பேராசிரியரின் மாணாக்கரான முத்தமிழறிஞர் கலைஞர் என்னும் பொழுது இவ்வரிகளுக்குச் சிறப்பு வந்துள்ளது எனலாம்.
“எம்முடைச் செல்வம் நும் முடைத்தாகச்
செய்து அன்புடன் சேர்ந்தே உழைப்போம்
உழைப்பின் பயனையும் ஒருங்கே துய்த்து
எஞ்சிய பகுதியை எய்ப்பில் வைப்பாய்க்
கொண்டு வாழக் கூடுவீராக!”
என்னும் வரிகள், கூட்டுழைப்பையும் சேமிப்பையும் வலியுறுத்தும் சிறந்த வரிகளாகும். பேராசிரியர் அவர்கள், எளிய நடையில் எழுதினாலும், எய்ப்பில் வைப்பு போன்ற சங்கத்தமிழ்ச் சொல்லாட்சிகளையும் மக்களிடையே உலவவிட்டுச் செந்தமிழ்ப் பணிக்குத் தம் பங்களிப்பையும் பாங்குடன் அளித்துள்ளார் எனலாம்.
எழிலரசி படைப்பு குறித்து, “தமிழ் வளர்ச்சியில் டாக்டர் சி.இலக்குவனார் பங்களிப்பு” என்னும் தலைப்பில் அளித்துள்ள ஆய்வேட்டில், முனைவர் கா.மாரிமுத்து அவர்கள், பேராசிரியர் கையாண்டுள்ள சொல், பொருள், அணி நயங்கள், பழமொழிகள், வழக்காறுகள் முதலியவற்றின் சிறப்பை எடுத்துக் கூறி, கற்போர்க்குக் கலையின்பம் நல்கும் வகையில் காவியத்தைப் படைத்துள்ளார் என விளக்கியுள்ளார்.
“இவர் கவிதையில் அமைந்துள்ள சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் பெண்ணுரிமை பேணலும் பழங்காலத் தமிழர்களின் ஒழுகலாறுகளும் தற்காலத்திலுள்ள சீர்கேடுகள், அறங்கூறவை நடுவரின் நிலை, பணியாளர் பொருள் வேட்கையால் கையூட்டு (இலஞ்சம்) பெற்று நீதி பிறழ்ந்து நடத்தல் போன்றன குறிக்கப் பெற்றிருப்பதும் வாழ்வியல் நன்னோக்கு அடிப்படையிலும் இக்காப்பியம் யாக்கப் பெற்றுள்ளதை விளக்கும்” எனக் காப்பியத்தின் அடிப்படையையும் முனைவர் கா.மாரிமுத்து அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
இவ்வாறு, அயல்மொழிச் சிறு கதையைக் கவிதையில் அளித்து, மொழிபெயர்ப்புப் பணியிலும், கவிதையுலகிலும், கதையுலகிலும் தம் பங்களிப்பை ஒரு சேர அளித்துள்ளார் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள். எனவே, செந்தமிழ்த்தாய்க்கு நற்றமிழ் நடையில் நன்னோக்குப் பாவியம் ஒன்றை அணிவித்துக் கவிஞர் என்ற முறையில் செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கான தன் பங்களிப்பை மாணாக்கர் பருவத்திலேயே பேராசிரியர் அவர்கள் அளித்துள்ளார் எனலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply