1. தமிழ் நாடு

1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி


தமிழகத்தின் சிறப்பு

உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனியிடம் கொண்டுள்ள நாடுகள் சில. அந்தச் சிலவற்றிலே சிறந்த வரலாற்றைக் கொண்ட நாடு தமிழ் நாடு. இக்காலச் சென்னை மாநிலம், மைசூர், ஆந்திர நாடுகளின் ஒரு பகுதி, கேரளம் ஆகியன சேர்ந்த பகுதியே பழங்காலத் தமிழகமாகும். தமிழகத்தின் வட எல்லை வேங்கடம்; ஏனைய முப்புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தன.

இந்திய வரலாற்றிலேயே தமிழகத்திற்குரிய சிறப்பினைக் குறைக்க எவராலும் முடியாது. தமிழகம் பக்தி வெள்ளத்தில் மூழ்கும் ஒரு நாடு. இந்தியச் சமயத்தின் வளர்ச்சிக்குத் தமிழகத்தைத் தவிர வேறு எப்பகுதியும் அவ்வளவாக உதவி செய்ததில்லை. ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாடு பல்லாயிரக் கணக்கான கற்கட்கு அப்பாலிருக்கும் கிரேக்கத்தோடும் சீன நாட்டோடும் கடல் வாணிகம் செய்தது. தமிழர்கள் பெருவாரியாக மலேயா, சிங்கப்பூர் முதலிய கிழக்கிந்தியத் தீவகங்களிற் குடியேறியுள்ளமைக்குக் காரணம், பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் கிழக்கிந்தியத் தீவுகளோடு செய்துவந்த வாணிகமே ஆம். உலகிலே உள்ள பல்வேறு நாடுகளிற் பரவியுள்ளதாகக் கூறப்படும் இந்திய நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே. வாணிகத் துறையில் மட்டுமின்றி ஆட்சித் துறையிலும் தமிழ் நாடு அடைந்திருந்த முன்னேற்றம் சீரியதாகும்.

அடிக்கடி ஏற்பட்ட அயலவர் படையெடுப்புகளினாலும் உள் நாட்டுக் குழப்பங்களாலும் வட நாடு அல்லலுற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமைதியாக இருந்து மொழியையும் இலக்கியத்தையும், வாணிகத்தையும், ஆட்சியையும் திறம்பட நடத்திய பெருமை தமிழர்க்கே உரித்து.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், சைவத் திருமுறைகள், வைணவர் பாடல்கள், கம்பராமாயணம் முதலியவை தமிழகம் பெற்ற அரும் பெரும் களஞ்சியங்களாகும். தமிழரின் கலையாற்றலைக் காஞ்சி, மதுரை, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், மாமல்லபுரம் முதலிய பெரு நகரங்களில் நின்று மகிழ்விக்கும் கோயில்களும் கோபுரங்களும் தெற்றெனக் காட்டும். சுருங்கக் கூறின் இந்தியாவின் வரலாற்றைத் தொடங்க வேண்டிய இடம் காவிரிக் கரையே தவிர கங்கைக் கரையல்ல. ஆனால் இந்திய வரலாற்றை எழுதியவரில் பெரும்பாலோர் தில்லியையும், வட இந்தியாவையும் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளனரே தவிர தமிழ் நாட்டைப் பற்றி விரிவாக ஒன்றும் எழுதவில்லை.

தமிழக வரலாற்று மூலங்கள்

தென்னக வரலாற்றுக்குதவும் கல்வெட்டும் செப்பேடும் இக்காலத்திலே குறைவே. கார்த்தியாயனர் தமிழ் நாட்டு ஊர்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். மெகசுதனீசர் பாண்டிய அரசி, அவள் வைத்திருந்த படையின் அளவு ஆகியவை பற்றிக் கூறியுள்ளார். அசோகனது கல்வெட்டுக்கள் தமிழகத்தைக் குறிக்கின்றன. காரவேலன் என்ற கலிங்க மன்னனின் அதிகும்பாக் கல்வெட்டுத் தமிழ் மன்னர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. பெரிப்புளுசின் ஆசிரியர், தாலமி, பிளினி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புக்கள் தமிழகத்தைப் போற்றிப் புகழ்கின்றன, பிளினி என்பவர் தென்னாட்டுக்கும் உரோம் நாட்டுக்கும் இடையே நடந்த வாணிகத்தைப் பற்றித் தெளிவாகக் குறித்துள்ளார். அதுமட்டுமல்ல; தமிழ்நாட்டு முத்தின் மீது உரோம் நாட்டு மகளிர் கொண்ட மோகம், அதனால் உரோம் நாட்டுப் பணம் பெருவாரியாகத் தமிழ்நாட்டுக்கு வந்த விதம் ஆகியன கண்டு பிளினி வெகுண்டுரைத்தும் உள்ளார். இக் கூற்றைத் தமிழ் நாட்டு மண்ணில் கண்டெடுக்கப்பட்ட உரோம நாணயங்களே நன்கு வலியுறுத்தும். இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் இலங்கை – தமிழகம் உறவைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

பண்டைத் தமிழகத்தைச் செம்மையாக அறியப் பெரிதும் உதவுவன சங்க இலக்கியங்களே. பண்டைத் தமிழகத்தைத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்ட வல்லன சங்க இலக்கியங்களே. பண்டைத் தமிழகத்தின் நில வளம், நீர் வளம், நிலப் பகுப்பு, அங்கே வாழ்ந்த மக்கள், அந்த மக்களின் மனவளம், கல்வி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் கொண்ட தொடர்பு, அவர்கள் நடத்திய காதல் வாழ்வு, செய்த போர், அவர்களின் வணிகம், பிற நாட்டார் தமிழரோடு கொண்டிருந்த தொடர்பு, சமயம் ஆகிய அத்தனை குறிப்புகளையும் சங்க இலக்கியங்களிற் காணலாம். சங்க இலக்கியங்களின் காலத்தைப் பற்றிப் பலவிதக் கருத்துகள் உலவுகின்றன. ஆனால் தமிழ் நூல்களைக் கற்றுத் துறைபோய நற்றமிழ்க் குரிசில்களினால் முடிவு செய்யப்பட்ட ஆண்டு கி. பி. 200-க்கு முந்தியதாகும். மேல் எல்லை கி. மு. 1000 வரை செல்லும். சில ஆசிரியர்கள் சங்க காலம் கி.பி. 700-800 என்று கூறினர். இது முற்றிலும் பொருந்தாது. ஏனெனின் கி. பி. 700-800 வரை பல்லவர் ஆட்சி தமிழகத்தில் செழிப்பாக நடைபெற்ற காலம். ஆனால் சங்க இலக்கியங்களிலே பல்லவரைப் பற்றி ஒரு சொல்கூட இல்லை. அதுமட்டுமல்ல; கி. பி. 700-800-ல் சைவம் செழித்திருந்தது. சங்கச் சார்புள்ள இலக்கியங்களிலே சமண பௌத்த சமயங்களின் செல்வாக்கே தெரிகிறது. மோரியர் படையெடுப்பு, புத்த – சமண மதக் கருத்துகள் முதலியன தென்படுகின்றன. அதுமட்டுமா? சிலப்பதிகாரத்திலே செங்குட்டுவன் நடத்திய பத்தினி விழாவில் இலங்கைக் கயவாகு மன்னன் கலந்துள்ளான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கயவாகுவின் காலம் கி. பி. 173-195. எனவே சங்க காலத்தின் கீழ் எல்லை கி. பி. 200 ஆகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்