(தமிழ்நாடும் மொழியும் 16 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 17

பல்லவப் பேரரசு தொடர்ச்சி

அபராசிதவர்மன்

நிருபதுங்கனுக்குப் பிறகு அபராசிதவர்மன் என்பான் பல்லவ நாட்டின் அரசனானான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்புறம்பியம் என்னும் ஊர். அவ்வூரின் கண்ணே பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் போர் நடை பெற்றது. அப்போரில் முதலாம் பிருதிவிபதி என்னும் கங்க அரசன் பல்லவ மன்னனுக்கு உதவிபுரிந்தான். இப்போரில் பல்லவனே வெற்றிபெற்றான். ஆனால் வெற்றியைப் பல்லவனால் துய்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போரில் பல்லவன் பக்கம் போரிட்ட முதலாம் ஆதித்த சோழன் போர் முடிந்த பிறகு பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டான். இது நடைபெற்ற ஆண்டு கி. பி. 895. அபராசிதவர்மனோடு பல்லவர் பரம்பரை முடிவடைகிறது. அதன் பிறகு பல்லவ மன்னர்கள் முடியிழந்து குறுநில மன்னர்களாகச் சோழர்களின் கீழ் வாழலானார்கள். அப்படி வாழ்ந்தவர்களில் ஒருவனே சயங்கொண்டார் புகழும் கருணாகரத் தொண்டைமான். மற்றொருவன் சேந்த மங்கலம் பெருஞ்சிங்கன் ஆவான். சோழப் பேரரசு அழிவதற்குக் காரணமாயிருந்தவர்களில் இவனும் ஒருவன் ஆவான்.

பல்லவர் ஆட்சி முறை

பைந்தமிழ் நாட்டில் பல்கலைகளும் வளர்த்த பல்லவப் பேரரசர்கள் ஆட்சிபுரிந்த பல்லவப் பெருநாடு பல ராட்டிரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ராட்டிரமும் பல விடயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இராட்டிரம், விடயம் என்பன முறையே மண்டலம், கோட்டம் எனப்படும். ஆனால் தொண்டை இராட்டிரத்தில் (நாட்டில்) கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகள் இருந்தன.

தந்தைக்குப்பின் அரசுகட்டிலில் ஏறும் உரிமை மூத்த மகனுக்குத்தான் உண்டு. அரசன் பிள்ளை இன்றி இறந்தால், மக்களும் மதிஅமைச்சரும் ஒன்றுகூடி அரச மரபைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்து எடுத்து அரசராக்குவர். பல்லவ மன்னர்கள் அனைவரும் தங்கள் வீரச்செயல்களுக்கு ஏற்ப விருதுப் பெயர்களை வைத்துக்கொண்டனர். நந்தி இலச்சினை பல்லவரது அரச இலச்சினையாகும். அமைச்சரும் பலதுறை அரசாங்க அலுவலரும் அரசன் நன்கு ஆட்சிபுரிவதற்குப் பல்வகையானும் உதவினர். உட்படுகருமத் தலைவர், வாயில் கேட்போர், கீழ்வாயில் கேட்போர் போன்ற அரசாங்க அலுவலர் அரசனுக்குத் தூண்போன்றோராவர்.

காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இவை அனைத்தும் பல்லவரிடம் இருந்தன. கடற்படை வலிமை மிக்கதாய் விளங்கியது. எனவே பல்லவர் ஈழநாட்டை வெற்றிபெற முடிந்தது. கடல் வணிகத்தையும் வளம்பெறச் செய்தனர்.

ஊர்தோறும் நீதிமன்றங்கள் திறம்படச் செயலாற்றின. பல்லவர் தலை நகரில் விளங்கிய உயர்நீதிமன்றம் ‘அதிகரணம்’ என்று அழைக்கப்பட்டது. சிற்றூரில் விளங்கிய அறங்கூறவையம் ‘கரணம்’ என்று வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ‘தருமாசனம்’ என்று கூறப்பட்டது. நீதிபதி ‘ அதிகாரி’ எனப்பட்டார். பட்டயங்களை எழுதுபவர் ‘காரணிகர்’ என்று கூறப்பட்டார்.

சங்ககாலத்திலேயே கிராம மன்றங்கள் விளங்கின போதிலும், கிராம ஆட்சிமுறை பல்லவர் காலத்திலேதான் நன்கு வலுப்பெற்றது. இதற்குப் பல பல்லவர் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. கிராம ஆட்சியினை ஊரவையார் திறம்பட நடத்தினர். இவர்களே நிலவரி வசூலித்தனர்; வழக்குகளை விசாரித்து நீதி வழங்கினர்; ஊர் நிலம், தோட்டம், நீர்நிலை, கோவில் இவை சம்பந்தமான பணிகளைக் கண்காணித்து வந்தனர். ஊரவை பல பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவும் வாரியம் எனப்பட்டது. ஊரவையார் பெருமக்கள் எனவும் அழைக்கப்பட்டனர். நீர் நிலையைக் கவனித்தவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனவும், தோட்டத்தைக் கவனித்தவர் தோட்டவாரியப் பெருமக்கள் எனவும், கோவில் திருப்பணிகளைக் கண்காணித்தவர் அமிர்தகணத்தார் எனவும் அழைக்கப்பட்டனர்.

பல்லவ மன்னர்கள் சிறந்த சமயப் பற்றுள்ளவர்களாய் விளங்கியதால், அவர்கள் நிலம், சிற்றூர் இவற்றைக் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்தனர். இவ்வாறு கொடுக்கப்பட்டது – ‘தேவதானம்’ என வழங்கப்பட்டது. இந் நிலங்களுக்கு வரி இல்லை. சமண பௌத்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்பட்டன. பிராமணர்க்கென்று உண்டான புதிய சிற்றூர்கள், பிரமபுரி, பிரம்ம தேசம், குடி, மங்கலம் என்று பெயரிடப்பட்டன. இவ்வூரவைகள் சபைகள் என அழைக்கப்பட்டன.

தென்னை, பனை, பாக்கு பயிரிட்டோர், மரிக்கொழுந்து, குவளை பயிரிட்டோர், கால்நடைகளால் பிழைப்பவர், புரோகிதர், சலவை செய்பவர், ஆடை நெய்பவர், ஆடை விற்பவர், கொல்லர், தரகர், நெய், பதநீர் விற்பவர், ஓடக்காரர் ஆகிய பலவகைத் தொழிலாளரும் அரசாங்கத்திற்கு வரி கொடுத்தனர். மக்கள் வரியினைப் பணமாகவோ அன்றிப் பண்டமாகவோ செலுத்தினர்.

நாட்டிலுள்ள நிலங்கள் அனைத்தும் செம்மையாக அளக்கப்பட்டன. அதன் பின்னரே வரி விதிக்கப்பட்டது. உழவுத்தொழில் உயர்ந்து விளங்கவேண்டும் என்பதற்காக, நாடு செழிக்கவேண்டும் என்பதற்காகப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; ஏரிகள் அமைக்கப்பட்டன. குழி, வேலி என நிலங்கள் அளந்து சொல்லப்பட்டன. உழக்கு, உரி, நாழி, பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குருணி, காடி, கலம் என்னும் முகத்தலளவைகளும், நாலுசாண் கோல், பன்னிரு சாண் கோல், பதினாறு சாண் கோல் முதலிய நீட்டலளவைகளும் பல்லவர் காலத்தில் வழக்கத்திலிருந்தன.

காஞ்சி, கடிகாசலம், பாகூர் இவ்விடங்களில் விளங்கிய கல்லூரிகள் பல்லவர் ஆட்சியில் சிறந்த கல்விக் களஞ்சியங்களாய் விளங்கின. ஆனால் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த பல்லவர் தலை நகராகிய காஞ்சிமாநகர் தொன்றுதொட்டே கல்விக்கு இருப்பிடமாகவும், கற்றோர்க்கு உறைவிடமாகவும் விளங்கியது. இதன் காரணமாகவே அப்பர் பெருமான் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்’ என்றும், அவந்திசுந்தரி கதாசாரம் என்னும் நூலாசிரியர் ‘கற்றவர் கூட்டம் இருக்கும் இடம் காஞ்சி’ என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அறநெறி ஓம்பிய அறவணவடிகள் இருந்து அருளுபதேசம் செய்த இடம் இக்காஞ்சியே. மேலும் மணிமேகலை சமயக் கணக்கர் பலரைச் சந்தித்த இடமும் இதுவே. இங்கு பல பௌத்தக் கோவில்கள், மடங்கள் இருந்தன. பல்லவர் ஆட்சி சிறப்புற்றிருந்த காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் காஞ்சியிலிருந்துகொண்டு தமிழ் வளர்த்தனர். வேலூர்ப்பாளையம், காசக்குடி கல்வெட்டுகள் கடிகை என்னும் வடமொழிக் கல்லூரி ஒன்று காஞ்சியில் இருந்தது என்றும், இராசசிம்ம பல்லவனால் அக்கல்லூரி புதுப்பிக்கப்பட்டது என்றும், அங்கு வேதம், வியாகரணம், மீமாம்சை என்பன கற்றுக் கொடுக்கப்பட்டன என்றும் கூறுகின்றன.

காஞ்சிக்கல்லூரியில் கடம்ப வல்லரசை நிறுவிய மயூரசர்மனும், நாளந்தாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தருமபாலரும் கலைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தனர் எனவும் அறிகின்றோம். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தென்னகம் வந்து சென்ற யுவான் சுவாங்கு என்னும் சீன யாத்திரிகர், காஞ்சியில் வடமொழிக் கல்லூரி ஒன்று சிறந்து விளங்கியதென்றும், அதற்கும் நாளந்தாக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்றும், காஞ்சியில் அதுகால் புத்த சமயக்கல்வி செழித்திருந்த காரணத்தால் இலங்கையிலிருந்து பல பௌத்த முனிவர் இங்கு வந்து கல்வி பயின்று சிறந்த அறிஞராய் விளங்கினர் என்றும் எழுதி உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி இன்று இந்தியாவின் ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாய்வைத்து எண்ணப்படுகிறது. இங்குள்ள ஏகாம்பரநாதர் கோவிலும், வரதராசப்பெருமாள் கோவிலும் மிகப் புகழ் வாய்ந்தனவாகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்