(தமிழ்நாடும் மொழியும் 21 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 22

பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி

இவற்றோடு சோழப்படை நிற்கவில்லை. கங்கைக் கரைநோக்கிச் சோழப்படை விரைந்தது. இராசேந்திரன் செல்லவில்லை. சென்ற சோழப்படை, வங்கத்தை ஆண்ட மகிபாலன், கோவிந்த சந்திரன் ஆகிய இரு மன்னர்களையும் தோற்கடித்தது. பின்னர் கங்கை நீர் நிரம்பிய குடங்களைத் தோற்ற வட நாட்டு மன்னர்தம் தலை மீது சுமத்திச் சோழப்படை தென்னகம் திரும்பியது. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரம் இந்த வெற்றியின் நினைவாக உண்டாக்கப்பட்டது. கங்கைகொண்டான் என்ற விருதுப் பெயரும் சோழனுக்கு ஏற்பட்டது. இந்த வடநாட்டு வெற்றிக்குப் பின்னர் சோழப்படை கடல்கடந்து, கடாரம், சீவிசயம் (சாவா) முதலிய தீவுகளை வெல்லச்சென்றது; வென்றது. இது நடந்த காலம் கி. பி. 1025. அக்காலக் கடாரத்தைச் சிலர் இக்காலக் கெடாவோடும், மற்றும் சிலர் சுமத்திராவோடும் இணைக்கின்றனர்.

இராசேந்திரனின் 16-ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயங்கள் இராசேந்திரனின் போர்ச்செயல்களைச் செம்மையாகத் தெரிவிக்கின்றன. இராசேந்திரனால் வெல்லப்பட்ட நாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடுவதில் சில தொல்லைகள் இருந்தபோதிலும், வடநாடும், கிழக்கிந்தியத் தீவுகளும் சோழனால் வெல்லப்பட்டன என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை. வங்காளத்திலும், தூரகிழக்கு நாடுகளிலும் தமிழ்க் கலைகளும் தமிழ்ப் பண்பாடும் இன்று தென்படுகின்றனவென்றால் அதற்குக் காரணம் இராசேந்திரனின் வெளிநாட்டுப் படையெடுப்புக்களே. வங்காளத்திலுள்ள சேனைப்பரம்பரை, மிதிலையின்கண் உள்ள கரந்தைப் பரம்பரை, காஞ்சியில் வாழ்கின்ற வடநாட்டுச் சைவக்குருக்கள் பரம்பரை, வங்கத்தில் வாழும் தமிழ்ப் பரம்பரை ஆகிய பரம்பரைகளுக்கு மூலகாரணம் இராசேந்திரனின் வடநாட்டு வெற்றியே.

இராசேந்திரன் கி.பி. 1044 வரை ஆண்டான் எனினும் கி. பி. 1018 லேயே தன் மகனான இராசாதிராசனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு ஆட்சித்துறையில் பழக்கலானான். முடிகொண்டான், பண்டிதன், கங்கைகொண்டான், கடாரம்கொண்டான் என்பன இராசேந்திரனின் பட்டப் பெயர்களாகும். தந்தை காலத்தில் ஏற்பட்ட கீழைச்சாளுக்கியர் உறவை இராசேந்திரன் தன் செல்வியான அம்மங்கை தேவியைக் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனுக்குக் கொடுத்து மேலும் வளர்த்துக் கொண்டான். அலி மசூதி போன்ற அராபிய எழுத்தாளரின் குறிப்புகள், 11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீன எழுத்தாளர்களின் குறிப்புகள் ஆகியவை சோழர்கள் கடல் கடந்து பல நாடுகளை வென்றமைக்குச் சான்று பகருகின்றன. கி. பி. 1033 இல் சோழமன்னன் சீனாவுக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பியதாகத் தெரிகிறது.

இராசேந்திரனின் கப்பற்படைக்கு அந்தமான், நிக்கோபார் ஆகிய தீவுகள் தப்பிப் பிழைக்க முடியவில்லை. கலிங்க நாடு, கடல் வாணிகத்தில் தமிழ் நாட்டோடு போட்டியிட்டது. எனவே சோழன் கலிங்க நாட்டை வெல்லக் கழிபேராசை கொண்டான். இராசேந்திரனால் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் இடைதுறை நாடு என்பது ரெய்ச்சூராகும் ; மான்யகடகம் என்பது இக்கால மால்காடு என்பதாகும். இராதா என்பது (இலாடம்) தென்மேற்கு வங்காளமாகும். தண்டபுத்தி என்பது பீகார் மாநிலமாகும். இலாட நாட்டு அரசனான இரணசூரன், மகிபாலன், தருமபாலன் ஆகியோர் முடிமீதுதான் கங்கைநீர் நிரம்பிய குடங்கள் சுமத்திச் சோழநாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. வரலாற்று ஆசிரியர் சிலர் இராசேந்திரனின் இத்தகைய சீரிய வடநாட்டு வெற்றியை வேங்கி நாட்டுத் திக்குவிசயம் என்றும், கங்கை நோக்கிய புண்ணிய யாத்திரை என்றும், கங்கவாடி வெற்றியென்றும் காரணமில்லாது கூறுவர்.

இராசாதிராசன்

இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசாதிராசன் சோழ நாட்டு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் தந்தை காலத்திலேயே சோழ நாட்டு அரசியலிற் பெரும்பங்கு கொண்டு பயிற்சி பெற்றான். இவன் பட்டம் பெற்றதும் ஈழத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அடக்கி ஒடுக்கினான். கி. பி. 1044-இல் இவன் ஓர் அசுவமேதயாகம் செய்தான். இராசாதிராசன் செய்த போர்களுள் குறிப்பிடத்தகுந்தது கொப்பத்துப் போராகும். கொப்பத்துப்போர் நடந்த ஆண்டு கி. பி.1053 ஆகும். முதலாம் சோமேசுவரன் என்பவன் துங்கபத்திரைப் பேராற்றின்கண் உள்ள சோழநாட்டு எல்லைப்புறத்து நாடுகளைக் கவரலானான். செய்தியறிந்த சோழன் சிங்கமெனப் பொங்கினான். சோழப்படை விரைந்து வடபுலம் நோக்கிச் சென்றது. சோழப்படையும் சாளுக்கியப் படையும் கொப்பம் என்னும் இடத்திலே கலந்தன. கடலொடு கடல் பொருதுவது போலத் தோன்றியது. போரிலே இராசாதிராசன் உயிர் துறந்தான். ஆனால் உடனே களத்திலேயே அவன்றன் இளவல் இராசேந்திர சோழதேவன் முடிபுனைந்து சோழப்படைக்குத் தலைமை தாங்கி நடத்தினான். வெற்றி அவன் பக்கம் வந்து புகுந்தது. இராசாதிராசன் யானைமேல் இருந்து இறந்தமையால், அவன் “யானைமேல் துஞ்சியதேவன்” என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டான்.

இரண்டாம் இராசேந்திரன்

கொப்பத்தில் நடந்த போர்க்களத்தின் கண்ணே முடிபுனைந்து கொண்ட இராசேந்திரன் கோலாப்பூர் நோக்கிச் சென்றான் ; அங்கே வெற்றித்தூண் நாட்டினான். அது மட்டுமல்ல; கீழைச்சாளுக்கிய மன்னனான இராசேந்திரனுக்குத் தன் மகளான மதுராந்தகியைத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் மூலம் சோழ சாளுக்கிய உறவை மேலும் வலுப்படுத்தினான். இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசமகேந்திரன் சில ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிறகு கங்கைகொண்ட சோழனின் (முதல் இராசேந்திரன்) கடைசி மகனான வீரராசேந்திரன் சோழ நாட்டு அரசனானான். 

வீரராசேந்திரன்

வீரராசேந்திரன் கி. பி. 1063-லிருந்து 1070 வரை ஆண்டான். பட்டம் பெற்ற பின்பு இவன் ஈழத்தில் தோன்றிய ஒரு கிளர்ச்சியை நசுக்கினான். கி. பி. 1067 இல் கூடல் சங்கமம் என்ற இடத்தில் வைத்து சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். அதனால் ஆகவமல்ல கோலாகலன், வல்லபவல்லபன் என்ற பட்டப் பெயர்கள் அவனுக்கு ஏற்பட்டன.

வீரராசேந்திரன் தில்லைச் செல்வனுக்குச் சிவப்பு வைரக்கல் ஒன்று பரிசளித்தான். முதலாம் சோமேசுவரனின் இளவலாகிய விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசைப் பெறு வதற்காகச் சோழன் பெரிதும் உதவி செய்தான். அது மட்டுமல்ல ; அச்சாளுக்கியனுக்குத் தன் மகளையும் கொடுத்தான். இதனால் சோழ நாட்டுக்கு யாதொரு பயனும் இல்லை. வீரராசேந்திரன் கி. பி. 1070 இல் காலமானான். அவனுக்குப் பின்பு அவன் மகனான அதிராசேந்திரன் அரசனானான். ஆனால் இவன் பட்டமேறிய சில நாட்களிலே இறந்தனன். எனவே விசயாலயச் சோழன் பரம்பரை முடிவுற்றது என்னலாம்.

அதிராசேந்திரனுக்குப் பின்பு சோழ – சாளுக்கியப் பரம்பரை சோழ நாட்டை ஆளத் தொடங்கிற்று. அவ்வாறு வந்த பரம்பரையின் முதல் அரசன் முதற் குலோத்துங்கன் ஆவான். சில வரலாற்று ஆசிரியர்கள் குலோத்துங்கன் அதிராசேந்திரனைக் கொன்றே சோழநாட்டு அரசுரிமையைக் கைப்பற்றினான் என்பர். ஆனால் வரலாற்று வல்லுநரான சதாசிவப் பண்டாரத்தார் இக்கூற்றை மறுத்து, அதிராசேந்திரன் சில நாள் சோழநாட்டை ஆண்டான் என்றும், இறுதியில் நோய்வாய்ப்பட்டே இறந்தான் என்றும் தக்க சான்றுகளுடன் நிறுவி உள்ளார்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்