தமிழ்நாடும் மொழியும் 26: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 25 தொடர்ச்சி)
தமிழ்நாடும் மொழியும் 26
சோழர் காலத் தமிழகம்
அரசன்
கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய, ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக் காலமாகும். இக் காலத்தினைத் தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறுதல் வேண்டும். தெலுங்கு நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது எனக் கூறலாம். மேலும் சாவா, சுமத்திரா, ஈழம் முதலிய தீவகங்களிலும் சோழர் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்ததைப் பல வரலாற்றாசிரியர்கள் பலபடப் பாராட்டியிருப்பது நாமறிந்ததொன்றே. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களில் சோழப் பேரரசர்களே எல்லா வகையானும் தலைசிறந்து விளங்கினர். பல சிறந்த பட்டங்களைப் பெற்று விளங்கினர். சோழ அரசர்கள் சக்ரவர்த்திகள் என்று மக்களாலும் பிற நாட்டவராலும் வழங்கப்பட்டனர். சோழ அரசியர் அவனி முழுதுடையாள், திரைலோக்கிய மாதேவி போன்ற பட்டங்களைக் கொண் டிருந்தனர். அரசன் நாட்டின் தலைவனாக இருந்தபோதிலும் அவன் மக்களைக் கலந்தே நாட்டை ஆண்டான்; பொதுமக்களது கருத்துப்படியே பணிபுரிந்தான். மேலும் அவன் சட்டம் இயற்றுவதோடு அமையாது அச்சட்டத்தின் துணை கொண்டு நாட்டின் நலத்தையும் அமைதியையும் காக்கும் காவலனாகவும் விளங்கினான். ஆட்சி செம்மையுற நடைபெறுவதற்கு ஆற்றல்மிக்க அமைச்சர்களும், ஏனாதி, மராயன் முதலிய அரசியல் அலுவலர்களும் அரசனுக்குப் பெரிதும் உதவினர். மேலும் அவைக்களப் புலவரும், அரசியல் குருவும் அக்காலத்தில் இருந்தனரெனவும், அமைச்சர் போன்றே அவர்களும் அரசனுக்கு அரசியலில் உதவினரெனவும் தெரிகின்றது. சோழப் பேரரசர்கள் யாகம் செய்வதை அடியோடு நிறுத்திவிட்டனர். ஆனால் கோவில்களுக்கும், வறியவர்க்கும், புலவர்களுக்கும் பல தானங்கள் செய்தனர். வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் சோழப் பேரரசர்கள் அவர்களுக்குப் பெருவிருந்தளித்தனர். இத்தகைய அயல் நாட்டுத் தொடர்பால் தமிழகம் தலைசிறந்து விளங்கியது.
சமுதாயம்
சோழர்தம் ஆட்சித் திறமையால் நம் பெட்டகம் இன்பம் கொழிக்கும் எழிற் சோலையாய் விளங்கியது. ஆனால் சாதி சமய வேறுபாடுகள் வேரூன்ற ஆரம்பித்தன. மக்கள் செய்து வந்த தொழில் பரம்பரைக் குலத்தொழிலாக மாற ஆரம்பித்தது. மேலும் இக்காலத்தில்தான் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தமிழ்நாட்டில் தலைகாட்ட ஆரம்பித்தன. வேளாளர் இக்காலத்தில் மிகச் சிறந்து விளங்கினர். அந்தணப் பெருமக்கள் பிறர் கொடுத்த தானத்தைப் பெற்று வாழ்ந்தனர். பெண்டிரும் சொத்தில் பங்கு பெற்றனர். அடிமைகளும் தேவதாசிகளும் நாடெங்கணும் இருந்தனர்.
விவசாயமும் வாணிகமும்
சோழர் காலத் தமிழகம் விவசாயத்தால் வீறுபெற்றும், வாணிகத்தால் வளம் பெற்றும் இலங்கியது. இவ்விரு தொழில்களையும் செய்வோர் சமுதாயத்தில் சீரும் சிறப்புமாய், செந்தமிழ் நாட்டில் வாழமுடிந்தது. மக்களில் பெரும்பான்மையோர் விவசாயத் தொழிலிலீடுபட்டு நாட்டை வளப்படுத்தினர். நிலங்கள் தனிப்பட்டோர் உடமைகளாகவும், பொது நிலங்களாகவும் இருந்தன. வெற்றி வீரருக்கும், அந்தணருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலம் தேவதான நிலம் என வழங்கப்பட்டது. இக்காலத்தைப்போல் அக்காலத்திலும் மக்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டனர். ‘சோழ நாடு சோறுடைத்து‘ ஆதலால் நாடெங்கணும் இலவச உணவு விடுதிகள் மக்களுக்கு உண்டிகொடுத்து உயர் நிலையில் விளங்கின. உழுதொழிலே நாட்டின் உயிர் நாடி என்பதை மன்னர்கள் உணர்ந்ததால் நீர்ப்பாசன வசதி பல செய்துதரப்பட்டன; கால்நடைகள் போற்றி வளர்க்கப்பட்டன. விவசாயத்தைப் போன்றே சோழர் காலத்தில் வாணிகமும் சிறந்து விளங்கியது. தமிழ்நாட்டு வணிகப் பெருமக்கள் நேர்மையோடு வாணிகம் செய்தனர். தவறு செய்தால் கோவிலுக்குத் தீர்வை கட்டினர். கூட்டுமுறையிலும், தனிப்பட்ட முறையிலும் மக்கள் வாணிகம் செய்தனர். அரசியலார் வரிவிதிப்பும், சுங்கமும் அன்று இருந்தன. வாணிகக்குழுக்கள் இன்றுபோல் அன்று வாணிக வளர்ச்சிக்காகப் பாடுபட்டன. பண்டமாற்று முறையே எங்கும் இருந்ததாகத் தெரிகிறது. நல்ல சாலைகள் இருந்தமையால் உள்நாட்டு வாணிகம் உயர்ந்திருந்தது. இதே போன்று கடல் வாணிகமும் தமிழர் செய்தனர். பாரசீகம், சீனா முதலிய நாடுகளோடு நம்மவர் வணிகத் தொடர்புடையோராய் இருந்தனர். உப்பு, ஆடையணிகளும் அக்காலத்தில் சிறந்த வாணிகப் பொருள்களாகக் கருதப்பட்டன. பத்திரம் எழுதிக் கொண்டு செல்வர்கள் பொருள் கடன் கொடுத்தனர். மக்கள் வட்டியுடன் பொருளைத் திருப்பிக் கொடுத்தனர். சொத்துக்களை விற்பதையும் மாற்றுவதையும் பதிவு செய்ய ‘ஆவணக்களரி’ என்ற அலுவலகம் இருந்தது.
சமயம்
சோழர் காலத்திலே சைவமும் வைணவமும் தமிழ் நாட்டில் தலை தூக்கி நின்றன. அதேநேரத்தில் பௌத்த சமண சமயங்களும் ஓரளவு வாழ்ந்தன என்று கூறவேண்டும். சோழப் பேரரசர்கள் பழுத்த சைவர்களாக விளங்கிய போதிலும், அவர்களிடம் பிற சமயக் காழ்ப்பு இல்லை. எனவே பிற சமயங்களையும் மக்கள் எவ்வித இடையூறுமின்றி பின்பற்றினர். அரசர்கள் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, பிற மதத்தினரையும் ஆதரித்தது போலவே மக்களும் சமயவெறியின்றி ஒற்றுமையாய் வாழ்ந்தனர். ஆனால் சைவ சமயத்தைச் சேர்ந்த காலமுகர், கபாலிகர், பாசுபதர் என்போர் சமயவெறியுடையவர்களாய் இருந்ததாகத் தெரிகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்மக்களிடையே அரும்பிய சமய உணர்ச்சி சோழர் காலத்தில் பெருவெள்ளமாகப் பரந்து நின்றது. மக்கள் எல்லோரும் மனங்குளிர தோத்திரப் பாமாலைகளைப் பாடியும், அடியவர் வரலாறுகளைப் போற்றியும் தம் மனமெலாம் இறை மணம் கமழ வாழ்ந்தனர். சமய குரவர்கள் புகழ்ந்து பாடப்பெற்ற ஊர்கள் தமிழ்மக்களால் பாடல்பெற்ற தலங்கள் எனக் கொண்டாடப்பட்டன; பூசிக்கப்பெற்றன. சோழப் பேரரசர்கள் இத்தலங்களில் எல்லாம் கற்றளி எடுத்தனர். இவ்வாறே பாண்டியரும் பல கோவில்கள் கட்டினர். மேலும் தமிழக வேந்தர்கள் சமயநெறி போற்றி, அந்நெறியிலே நின்று, சிறந்த முறையில் செந்தமிழ் நாட்டை ஆண்டனர். புதிய கோவில்களைக் கட்டியதோடமையாது, பழைய கோவில்களையும் புதுப்பித்தனர். எனவே தமிழகத்தில் கோவில் வழிபாடு சிறக்கலாயிற்று. புலவர் பெருமக்களும் சமய உணர்ச்சி மிக்குடையவர்களாய் பாடல் பெற்ற தலங்களையும், அங்கு உறைகின்ற தெய்வங்களையும் பற்றிப் பலபடப்பாடிப் பரவினர்.
சோழர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோவில்கள், மருத்துவக் கூடமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், பசுக்கூடமாகவும் விளங்கின. ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டன. மேலும் சிவன் கோவில்களிலே அம்மன் சந்நிதிகள் தனியாகக் கட்டப்பட்டன. சிற்பவேலைகள் அமைந்த மாடங்களிலே கணபதி, பிரமன், நாராயணி, தட்சணாமூர்த்தி, (இ)லிங்கோத்துபவ மூர்த்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பல்லவர் காலம் வரையில் திருமால், சிவன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களில் கருவறையும், அதைச் சார்ந்த மண்டபமும் மட்டும் இருந்தன. ஆனால் கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அர்த்தமண்டபத்தைச் சார்ந்தாற்போல் கோவில் முன்புறத்தில் முகமண்டபம் அமைக்கப்பட்டது. கருவறைக்கு வெளிப்புறத்தில் நாயன்மார், அடியார் உருவங்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாய் கருவறையைச் சுற்றிலும் மூன்று பக்கத்திலும் மண்டபங்கள் எழுப்பப்பட்டன. மூலக் கோவிலின் அடிப்புறத்திலும், சுவரிலும் சிற்பவேலைகள் அமையப்பெற்று அவைகள் அழகுடன் விளங்கின. சிவன் கோவிலுக்குள் கணபதி, முருகன் இவர்களுக்குத் தனித்தனியே ஆலயங்களும், பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் போன்ற மண்டபங்களும் அமைக்கப்பட்டன. இவ்வாறே பெருமாள் கோவில்களிலும் வெவ்வேறு ஆலயங்களும் மண்டபங்களும் ஏற்பட்டன.
(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
Leave a Reply