தமிழ்நாடும் மொழியும் 6 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 5 தொடர்ச்சி)
4. சங்கக் காலம்
முன்னுரை
தமிழக வரலாறு என்றவுடனே அறிஞர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் உடனே நெஞ்சத்தில் தோன்றுவது முச்சங்கங்களேயாம். பண்டைக்காலத் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய நாம் அறிய வேண்டுமானால், முச்சங்க வரலாறு, அச்சங்கப் புலவர்கள் யாத்த சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை நாம் நன்கு அறிதல் வேண்டும். முச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் கணக்கிலடங்கா. அவற்றுள்ளே முதற் சங்க நூல்கள் எனப்படுபவை இன்று பெயரளவிலேதான் காட்சி அளிக்கின்றன, இடைச் சங்க நூல்களிலே இன்றும் எஞ்சி நின்று மக்கள் உள்ளத்தையும் அக்காலத் தமிழகத்தையும் காட்டி நம்மைக் களிப்படையச் செய்துகொண்டிருப்பது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும். அடுத்து இடையிலே எழும்பிய நீருக்கும், ஏற்பட்ட போருக்கும், அயலார் மூட்டிய நெருப்புக்கும், நம்மவர் மறதிக்கும், கரையானுக்கும் இரையாகாதவாறு இன்றுவரை நின்று, நொந்த நந்தம் சிந்தையிலே செந்தேன் பொழிந்துகொண்டிருப்பவை கடைச்சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, குறள் என்பனவாம். இன்றும் கூட சங்கக் காலம் என்றாலும், சங்க இலக்கியங்கள் என்றாலும், கடைச்சங்கக் காலத்தையும் அக்கால நூல்களையுமே குறிக்கும். கடைச்சங்க இறுதிக்காலத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் செவ்வி அருமைளையும், தமிழ் வளர்ச்சியையும், அக்காலச் சமய நிலையையும் இன்ன பிறவற்றையும் நாம் நன்கு அறிவதற்குப் பேருதவி புரிகின்றன. இனி இவற்றை முறையே ஆராய்வோம்.
முச்சங்கம்
தமிழ் நாடு பற்றிய எந்த வரலாறாயினும் சரி, அதிலே முதல் அத்தியாயமாக இருப்பது முச்சங்கம் பற்றிய வரலாறாகும். சங்கங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை ஏற்படுத்திய மன்னர்கள் யார்? அவை எத்தனை ஆண்டுகள் உலகில் நிலவின? அவற்றிலிருந்த புலவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இயற்றிய நூல்கள் யாவை? போன்ற வினாக்கள் இன்று முச்சங்கம் பற்றி எழுப்பப்படுகின்றன.
சங்கத் தாய் ஈன்ற செழுங்குழவிகளாகிய பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, குறள் ஆகிய இலக்கிய நூற்களிலே சங்கம் என்ற சொல்லே கிடையாது. சங்கம் பற்றிய குறிப்பும் கிடையாது. கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியலுரையிலே சங்கங்கள் பற்றிய குறிப்புகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன. முதலில் அந்நூல் தரும் குறிப்புகளை நோக்குவோம்.
தலைச் சங்கம்
இதனை முதலில் நிறுவிய பெருந்தகை காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் இருந்தவன் பாண்டியன் கடுங்கோன் என்னும் மன்னனாவான். இது நின்று புகழ் விளக்கிய இடம் தென் மதுரை. இச்சங்கம் நிலவிய ஆண்டுகளின் எண்ணிக்கை 4500. சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள் 4449 பேர். இச்சங்கக் காலத்திலிருந்த அரசர்கள் 89 பேர். இச்சங்கத்திலிருந்த புலவர்களுள் அடையாளங் காணப்பட்டோர் அகத்தியர், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடி நாகராயர் முதலியவராவர். இக்காலத்தெழுந்த நூல்கள் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியனவாம். இச் சங்கத்தின் கடைசி அரசனான கடுங்கோன் காலத்தில் ஒரு பெருங் கடல்கோள் ஏற்பட்டு முதற்சங்கம் அழிந்துவிட்டது.
இடைச் சங்கம்
முதற் சங்கத்தினை முந்நீர் விழுங்கிவிடவே, அடுத்து ஏற்பட்டது இரண்டாம் சங்கமாகும். இச்சங்கம் இருந்த நகரம் கபாடபுரமாகும். இந்நகர் பற்றிய குறிப்பு வான்மீகியின் இராமகாதையில் வருவதாகக் கூறுவர். இதிலே இருந்த இன் தமிழ்ப்பாச் செய்த புலவர்கள் 449 பேராவர். இச்சங்கத்தினைத் தோற்றுவித்தவன் வெண்டேர்ச்செழியனாம். இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் தொல்காப்பியராம். இச்சங்கத்தின் இறுதி அரசன் நிலந்தருதிருவிற் பாண்டியன். இச்சங்கக் காலத்தில் எழுந்த நூற்கள் இசை நுணுக்கம், தொல்காப்பியம், வியாழமாலை அகவல், தொகைநூற் பாடல்களில் சில முதலியவாம். இந்தச் சங்கமிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க்காப்பியனார், சிறு பாண்டரங்கனார் முதலிய பல புலவராவர். இந்த இடைச் சங்கமும் கடல்கோளால் அழிந்தது.
மூன்றாம் சங்கம்
உலக அரங்கிலே நமக்கு ஏற்றத்தையும், இலக்கிய மாளிகையிலே தமிழன்னைக்குத் தனிச் சிறப்பையும், நொந்த நந்தம் சிந்தையிலே செந்தமிழ்த் தேனையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்ற எட்டுத் தொகை முதலிய இலக்கியங்களை ஈன்றெடுத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. இக்காலம் தமிழக வரலாற்றிலே பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படவேண்டிய காலமாகும்.
இடைச் சங்கம் கடல்கோளால் அழிந்த பின்னர், இப்பொழுதுள்ள மதுரையிலே இச்சங்கம் தோன்றியதாம். இதன் தலைவர் நக்கீரர். இச்சங்கத்தே வீற்றிருந்த புலவர் பெருமக்கள் தொகை 49-ஆம். இச்சங்கத்தின் கீழ் எல்லை கி. பி. 200; மேல் எல்லை கி. மு. 300. நெஞ்சையள்ளும் சிலம்பும், மணிமேகலையும், குறளும் பிறவும் தோன்றியது இக்காலத்தை ஒட்டியே தான்.
இந்த மூன்று சங்கம்பற்றிய அறிஞர் கருத்துகளிலே வேற்றுமைகள் பல உள. பொதுவாக அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். ‘இந்த முச்சங்க வரலாறே பொய்; கட்டுக்கதை; மூன்று சங்கங்கள் இருந்தன என்று சொல்லுவது அரபு நாட்டு ஈசாப்பு கதையை ஒத்தது’ என்பது ஒருசாரார் கருத்து. ‘இறையனார் களவியலுரை கூறும் கருத்துகள் அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை; மறுக்க முடியாதவை’ என்பது மற்றொரு சாரார் கருத்து. முதல் வகையினர்க்கும் இரண்டாம் வகையினர்க்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.
முச்சங்கம் பற்றிய வரலாறுகளையும், சங்க இலக்கியங்களில் வருகின்ற கடல்கோள் பற்றிய குறிப்புகளையும், எகேல் போன்ற மேலை நாட்டாரது, குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உரைகளையும் பார்க்குங்கால், களவியல் உரைக் குறிப்புகளிலே ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது.
முச்சங்க வரலாற்றை முதல்வகையார் முழுதும் பொய் என்று முடிவுகட்டுவதற்குக் காரணம், அவற்றில் வருகின்ற புலவர்கள், அவை நடைபெற்ற ஆண்டுகள், ஆதரித்த அரசர்கள் ஆகியோரின் கற்பனைக்கெட்டா எண்ணிக்கை ஆகும்.
களவியலுரை கூறும் கற்பனைகளை ஒதுக்கி வரலாற்றுக் கண்கொண்டு நோக்குவோமாயின், கீழ்வருகின்ற முடிபுக்கே வருவோம். கி.பி. 200க்கு முன்னே பல சங்கங்கள் பல்வேறு காலங்களிலே இருந்து தமிழ்மொழியிலே எண்ணற்ற இலக்கண, இலக்கியங்களை இயற்றிச் செந்தமிழைச் செழுந்தமிழாகச் செய்திருக்கின்றன. பொய்ம்மையும், கற்பனையும், இடைச்செருகலும் நிறைந்த பாரதம், இராமகதை, விட்ணு புராணம், வாயு புராணம், வேதங்கள் ஆகியனவற்றையே வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளும்போது, அவை எவையும் இல்லாத சங்க இலக்கியங்களை வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளல் தவறாமோ?
(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
Leave a Reply