(தமிழ்நாடும்மொழியும் 6 தொடர்ச்சி)

தொல்காப்பியர் காலத் தமிழகம்

அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலே தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களிலே பழமைச் சிறப்புடையது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் ஒரு பல்கலைக் களஞ்சியமாகும். அந்நூல் ஒரு பொன்னூல், அது இலக்கண நூல் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் மக்களின் செவ்விய வாழ்க்கையைக் காட்டும் நன்னூலுமாகும். இதனது பெயரும், இது இடைச் சங்ககால நூல் என்பதும் இந்நூலின் தொன்மையை நன்கு விளக்குகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் விரித்துக்கூறும் சிறப்புடைய ஒரே பழைய நூல் தொல்காப்பியமே! இதனை,

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுது மெழுத்தோடு
சொல்கா மருபொருட் டொகை திகழ்பொருட்டே

என்ற பாடல் இனிது விளக்கும்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் என்ன? கி. மு.வா? கி. பி. யா? கி. மு. என்பது டாக்டர் மு. வ. போன்ற பல புலவர் கருத்து. கி. பி. என்பது வையாபுரியார் போன்ற சிலர் கருத்து. இதில் எதுகொள்ளத்தக்கது? தள்ளத்தக்கது?

மொழிக்கு முதலில் வராத எழுத்துக்களுள் சகரக்கிளவியும் ஒன்று எனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் சங்க இலக்கியங்களிலோ சகர முதன்மொழிச் சொற்கள் பல வருகின்றன. அவ்வாறு வருகின்ற சொற்களும் தமிழ்ச் சொற்களே ஒழிய அயன்மொழிச் சொற்கள் அல்ல. ஆகவே சங்கத் தொகைநூற்கட்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது போதரும். சங்கத் தொகை நாற்களின் கால எல்லை கி. மு. 300 – கி.பி. 200 என்பதாகும். எனவே தொல்காப்பியர் காலம் கி. மு.வுக்கு முந்தியதாகும். இதுமட்டுமல்ல; சங்கத் தொகை நூற்களிலே மோரியர் படையெடுப்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, மோரியர்கள் வலிவும் பொலிவும் அடைந்த காலம் சந்திரகுப்த மௌரியன் காலமாகும். அவன் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும். ஆக, தொல்காப்பியர் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும்.

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பாயிரத்தொடர். ஐந்திரம் என்பது பாணினீயத்துக்கு முந்திய நூலாகும். பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் டாக்டர் பந்தர்க்கார். எனவே கி.மு. 300க்கு முந்தியது ஐந்திரவியாகரணம். அஃது கி.மு. 500-இல் தோன்றியதாக இருக்கலாம். எனவே கி. மு. 500க்கும் – 300க்கும் இடைப்பட்ட காலம் தொல்காப்பியர் காலமாகும் என ஒருவாறு கூறலாம்.

பழந்தமிழர் நாகரிகம்

பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் நமக்குப் பேருதவி செய்கிறது. பண்டை மக்களது வழக்கங்கள், நடை, உடை, பாவனை முதலியவை தொல்காப்பியத்திலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

பொருட்கு விரிவாக இலக்கணம் வகுத்துள்ள தொல்காப்பியர் பொருளை அகப்பொருள், புறப்பொருள் என இருவேறு பெரும்பிரிவு செய்துள்ளார். இவற்றுள் அகப்பொருள் என்பது அகத்து நிகழும் ஒழுக்கத்தைச் சொல்லுவதாகும். புறத்தே நிகழும் ஒழுக்கத்தைக் கூறுவது புறப்பொருளாகும். தலைவன் தலைவியரது அகத்து நிகழும் இன்பம் அகப்பொருளாகும். அறத்தினையும் பொருளையும் வெளிப்படையாகவும், வீட்டினைக் குறிப்பாகவும் உணர்த்துவது புறப்பொருள் ஆகும். புறவொழுக்கங்கள் பலவற்றிற்குக் காரணமானதும், அவற்றுளெல்லாம் சிறந்ததும் ஆகிய அரசரது ஒழுக்கமே புறப்பொருளிற் பெரிதும் பேசப்படுகின்றது.

முதலில் அகம் என்பதன் இலக்கணத்தையும், அதன் பிரிவாகிய ஏழ் திணைகளையும், அவற்றின் முதல், கரு, உரிப் பொருள்களையும் பார்ப்போம்.

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் ”- இது நச்சினார்க்கினியர் அகத்துக்குக் கூறும் இலக்கணமாகும். இவ்வகப்பொருளினை, கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழ் திணைகளாக ஆசிரியர் பிரித்துள்ளார். திணை என்பது ஒழுக்கம். இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். எஞ்சிய ஐந்து திணைகளும் மிகச் சிறப்புடையனவாகும். ஐந்திணை என்பது அன்புடைக் காமம் ஆகும். இதற்குரிய முதற்பொருள் நிலமும் பொழுதும் ஆகும். புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன உரிப் பொருள்களாகும். தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, ஊர், நீர், விலங்கு, மரம், பூ, புள், தொழில் என்ற பதினான்கும் கருப்பொருள் எனப்படும்.

முன்னர்க் கூறியது போன்று நிலம் குறிஞ்சி முதலிய ஐந்துமே. பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஆவணி மாதந் தொடங்கிக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும் பொழுதினை ஆறு வகையாகப் பிரித்தனர். இவ்வாறே நாளினை ஆறு கூறாகப் பிரித்து ஒவ்வொரு கூறுக்குமுரிய பத்து நாளிகை நேரத்திற்கும் ஞாயிறு தோன்றும் வேளை முதலாகத் தொடங்கிக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என சிறுபொழுதையும் ஆறாகப் பகுத்தனர்.

அகவொழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும். அவற்றுள் களவு என்பது ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தால் எதிர்ப்பட்டு, மனம் ஒன்றுபட்டு, தம்முட் கூடிக் கலத்தலாகும். இவர்களது களவொழுக்கத்திற்குத் துணைபுரிவோர் பாங்கன், பாங்கி, செவிலி முதலியோராவர்.

களவொழுக்கத்திற்குப் பின்னர் முறைப்படி திருமணஞ் செய்துகொண்ட தலைவனும் தலைவியும் அறவழியே நின்று இனிய இல்லறம் நடத்துவது கற்பொழுக்கமாகும். இவ்வொழுக்கத்தின்கண், கல்வி கற்றல், நாடு காத்தல், தூது போதல், வேந்தர்க்கு உதவி செய்தல், பொருளீட்டல், பரத்தை விருப்பு ஆகிய இவற்றின் காரணமாய் தலைவன் மனைவியைப் பிரிய நேரிடும். அதுகால் தலைவி பிரிவுத் துன்பத்தை ஆற்றாது ஆற்றி இருப்பாள். ஆடவர் மகளிரொடு கடன்மேற் செல்லுதலும், பாசறைக்கண் அவர்கள் மகளிரொடு இருத்தலும் அன்று கடியப்பட்டன.

தலைவி கருவுற்றிருக்குங்கால் தலைவன் பரத்தையிடம் செல்லுதலும், அதன் காரணமாய்த் தலைவி வருந்தி ஊடுதலும், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களாக, தோழி, இளையர், அறிவர், கூத்தர் முதலியோர் விளங்கினர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. மேலும் காம இன்பத்தினை வேண்டுமளவு நுகர்ந்த பின்னர் தலைவனும் தலைவியும் இறுதியில் வீடு பெறுதற் பொருட்டுத் துறவினை மேற்கொள்ளுவர் எனவும் தொல்காப்பியம் கூறுகின்றது. அடுத்து புறத்திணையைப் பற்றிப் புகலுவாம்.

அகப்பொருளுக்கு ஏழு திணைகள் கூறியதுபோலவே தொல்காப்பியர் புறப்பொருட்கும் ஏழு திணைகள் கூறுகின்றார். அவை யாவன :

1. வெட்சித் திணை – பகைவரது நிரையைக் கவர்தல். நிரை மீட்டலும் இதன் கண்ணே அடங்கப்பெறும்.

2. வஞ்சித் திணை – பகைவரது நாட்டைக் கொள்ள எண்ணி போர்புரியச் செல்லுதல்.

3. உழிஞைத் திணை – பகைவரது மதிலை வளைந்து நின்று பொருதல். மதில் காத்தலும் இதன்கண் அடங்கப்பெறும்.

4. தும்பைத் திணை-பகைவருடன் கலந்து பொருதல்.

5. வாகைத் திணை- வெற்றி கொள்வது.

6. காஞ்சித் திணை-வீட்டின் காரணமாய் செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறுதல்.

7. பாடாண்டிணை – தலைவனது வீரம், கொடை, முதலியவற்றைப் புகழ்ந்து கூறுதல்.

இத் திணைப் பெயர்களிற் பல பூக்களின் பெயராய் இருப்பதால், போர்க் காலத்தில் அவ்வப்பொழுது அறிகுறியாக வேறு வேறு மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வர் எனத் தெரியவருகிறது. மேலும் ஒரு அரசன் மற்றொரு அரசன் மேல் படையெடுப்பதற்கு முன்னர் தனது கருத்தை நிரைகவர்தல் (Cattle lifting) மூலம் தெரிவிப்பான் என்பதும், போருக்குச் செல்வதற்கு முன்னர் நாளும், புள்ளும் பிறவுமாகிய நிமித்தம் பார்த்தனர் என்பதும், வீரத்தோடு கருணையும் உடையவர்களாய் தமிழ் வீரர் விளங்கினர் என்பதும், பகைவரது நாட்டில் ‘எரி பரந்தெடுத்தல்’ (தீக் கொளுத்தல்) நடந்தது என்பதும், நகரத்தைச் சுற்றிலும் மிக்க உரனுடையதும் பொறிகள் பொருத்தப் பெற்றதுமாகிய ‘முழுமுதலரணம்’ இருந்தது என்பதும், அதனைச் சுற்றிலும் முதலைகள் வாழும் பெரிய அகழி இருந்தது என்பதும், யானைப்படை, குதிரைப்படை தமிழ்நாட்டில் இருந்தன என்பதும், போரில் மாண்டவர்களைத் தெய்வமாக வணங்கினர் என்பதும், கொள்ளை கொண்ட பொருள் அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பதும், மகிழ்ச்சியின் காரணமாய் வீரர்கள் மதுவுண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பதும், இன்ன பிறவும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

சுருங்கக்கூறின் தொல்காப்பியர் காலத்திலேயே தண்டமிழ் நாடு சிறக்க வாழ்ந்து வளம்பெற்ற நாடாய் விளங்கியது.

(தொடரும்)
பேரா..திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்