(தமிழ்நாடும் மொழியும் 26 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 27

சோழர் காலத் தமிழகம் தொடர்ச்சி

சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டன. இராசராசன், அவன் அரசி உலகமாதேவி இவர்களது செப்புப் பிரதிமை உருவங்களைத் தஞ்சாவூர் பெரிய கோவிலில் செய்துவைத்த செய்தியை அக்கோவில் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று திருக்காளத்திக் கோவிலில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனது உருவச்சிலை செப்பினால் ஆயது. இவனது மற்றொரு கற்சிலை உருவம் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் காணப்படுகிறது. சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ உருவங்களும், மனிதன், பறவை முதலிய இயற்கை உருவங்களும், கற்பனை உருவங்களும் உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்டன. மேலும் இறைவனது திருவுருவை, நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும், ஆடும் (சிவன்) அல்லது கிடந்த (திருமால்) கோலமாகவும் சிற்பிகள் செய்தனர்.

சோழர் தலைநகர்

சோழப் பேரரசின் தலை நகரங்களாகத் தஞ்சையும், கங்கை கொண்ட சோழபுரமும் விளங்கின. இவற்றுள் கங்கை கொண்ட சோழபுரம் திருச்சி மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் கொள்ளிடக் கரையின் வடபுறமுள்ள சாலையில், மனதைக் கவரும் மாடமாளிகைகளும், குவலயம் புகழும் கூடகோபுரங்களும், அழகுமிக்க மணிமாட வீதிகளும், இன்பந்தரும் இளமரக்காக்களும், வளமிக்க வாவிசூழ் சோலைகளும், சுற்றிலும் புறமதில்களும், அரண்களும், அகழ்களும் கொண்டு சோழர் காலத்தில் விளங்கியது. ஆனால் இன்றோ அந்நகர் சிதைந்த நிலையில் சிற்றூராய்க் காணப்படுகின்றது. சுற்றிலும் மண்மேடுகளும், இடிந்த சுவர்களும் அடர்த்தியாக வளர்ந்த செடிகொடிகளும் உள்ளன. இவற்றின் நடுவே கோபுரங்களுடன் கூடிய பாழடைந்த கோவிலொன்று காணப்படும். கோவிலின் முன்புறத்திலுள்ள கோபுரம் இடிந்துள்ளது. இக்கோவிலினுள்ளே முப்பது அடி உயரமுள்ள, நடுவில் இரண்டு பிளவுள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது. இச்சிவலிங்கம் தஞ்சைக் கோவிலிலுள்ள சிவலிங்கத்தை ஒத்திருக்கின்றது.

சிதைந்துபோன இச்சீரிய ஊரைப்பற்றிப் பரோலாவின் ‘கசட்டீரில்’ பல செய்திகள் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டிய பெருமை முதலாம் , இராசேந்திரனுக்கே உரியது. தென்னாடு முழுவதும் வெற்றி கொண்ட இராசேந்திரன் வடநாடு நோக்கிப் படையெடுத்தான். கங்கை வரைச் சென்று வெற்றிபெற்ற இவன் அதன் அறிகுறியாகக் கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவி, அதனைத் தன் தலைநகராக்கி அங்கிருந்துகொண்டு ஆட்சி செலுத்தலானான். மேலும் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற கோவிலும் இவனால் இங்குக் கட்டப்பட்டது. அளவில் சிறிய இக்கோவில் தோற்றத்தில் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்தே விளங்கியது. இக்கோவில் 582 அடி நீளமும், 372 அடி அகலமும் கொண்டு 174 அடி உயரமுடைய கோபுரத்துடன் விளங்கியது. மேலும் வெளிப்புற மதிலில் ஆறு கோபுரங்களும், நான்கு மூலைகளிலும் கொத்தளங்களும் இருந்தன. இம்மதிலைச் சுற்றி ஆழமான அகழி ஒன்று இருந்ததாகவும் தெரியவருகின்றது. அழிந்துபோன இக்கோவிற் கற்களைப் பிற்காலத்தில் கொள்ளிடத்தில் கட்டப்பட்டிருக்கும் ‘லோயர் சொலரூன்’ அணைக்கட்டிற்குப் பயன்படுத்தியதாகப் பரோலா எழுதியுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கருகில் இராசேந்திரனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற ஏரி அளவில் பெரியதாக விளங்கியதால் இதைச் சுற்றிலும் இருந்த நிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடில்லாது முதல் தரமான பாய்ச்சல் வசதியுள்ளவையாய் விளங்கின. இவ்வேரியானது 16 மைல் நீளமுள்ள வலிமை மிக்க கரையையும், பல மதகுகளையும் கொண்டிலங்கியது. ஆனால் இன்று இவ்வேரி பயனற்றதாய், காடுஞ்செடியும் மண்டிக் காணப்படுகின்றது. இராசேந்திரனால் நிறுவப்பெற்ற இப்பெருநகர் , அவனுக்குப் பின்னும் தொடர்ந்து சோழர் தலைநகராய் விளங்கிய போதிலும் ஏனோ பிற்காலத்தில் சிதைந்து சிற்றூராய் ஆகிவிட்டது.

கங்கைகொண்ட சோழேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது கருவூர்த்தேவர் பதிகம் ஒன்று பாடியுள்ளார். இக்கோவில் சிற்பத் திறத்தில் தஞ்சைக் கோவிலைவிட உயர்ந்தது. இதனது விமானம் தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்று மிக அழகாக உள்ளது. இது 100 அடிச் சதுரமாக அமைந்துள்ளது. மேலும் இது ஒன்பது நிலைகளையும், உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தையும் உடையது. இத்தகைய சிறந்த கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனது பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் ஆகும். இறைவனது நாள் வழிபாட்டிற்கும், பிற செலவுகளுக்கும் பல ஊர்கள் இராசேந்திரனாலும் அவனது வழித் தோன்றல்களாலும் இறையிலியாகக் கொடுக்கப்பட்டிருந்தன.

சோழப் பேரரசின் தலைசிறந்த தலைநகர் தஞ்சை மாநகரே. பிற்காலச் சோழ அரசை நிறுவிய விசயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி தனது தலைநகராக்கிக் கொண்டான் என்பது நாம் அறிந்ததொன்றே. திருவுடைய நகரமாய் தஞ்சை அன்று விளங்கியது. இன்றும் எஞ்ஞா வளம்படைத்த நஞ்சைசூழ் பதிகளை உடையது தஞ்சை மாவட்டமே. மேலும் இங்குதான் சோழர்தம் சிற்பத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும், இராசராசனது பெருமை, புகழ் இவற்றின் சின்னமாகவும் விளங்கும் இராசராசேச்சுரம் ஈடும் இணையுமின்றி வானளாவ நின்று நிலவி நம் நெஞ்சை எல்லாம் குளிர்விக்கின்றது. இம்மாபெரும் கோவில் திருப்பணியை இராசராசன் தனது ஆட்சியில் 19-ஆம் ஆண்டில் தொடங்கி 23-ஆம் ஆண்டில் முடித்தனன். 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடைய இக்கோவிலின்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது. இதன் உச்சியில் 80 டன் எடையுள்ள கருங்கல் போடப்பட்டுள்ளது. விமானத்தின் மேலுள்ள செப்புக் குடத்தின் நிறை 3083 பலம். இதன் மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926 1/2, கழஞ்சு எடையுள்ளது. இக்கோவிலின் வெளிச்சுற்றிலுள்ள நந்தி நம் கண்களுக்கு ஓர் நல்விருந்தாகும். இது ஒரே கல்லில் செய்யப்பட்டது. இதன் உயரம் 12 அடி; நீளம் 191 அடி; அகலம் 84 அடி. இக்கோவிற் சுவர்களில் காணும் ஓவியங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரது வரலாற்றினை விளக்கும் ஓவியங்கள் உயிரோவியங்களாகும். சோழ மன்னனும், அவன்றன் அரசியல் அதிகாரிகளும், வழித்தோன்றல்களும் இப்பெரிய கோவிலுக்குப் பொன்னும் மணியும் வாரிவாரி வழங்கினர். ஊர்கள் பல இறையிலியாகக் கொடுக்கப்பட்டன. எனவே பெருவிழாக்கள் நடந்தன. மக்கள் பக்தி வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். இக்கோவிலைப் பற்றியும் கருவூர்த் தேவர் பதிகம் ஒன்று பாடியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரமும், தஞ்சையும் தவிர பழையாறை என்ற நகர், பல்லவர்க்குச் சோழர் சிற்றரசராயிருந்த காலத்தில் சோழர் உறைந்த பெருநகராகும். மேலும் பிற்காலச் சோழர் காலத்தில் இந்நகர் இரண்டாவது தலை நகராகவும் விளங்கியது.

சோழர் காலக் கல்லூரிகள்

எண்ணாயிரம், திருமுக்கூடல், தஞ்சை, குடந்தை, புன்னைவாயில், திருவொற்றியூர் போன்ற இடங்களில் விளங்கிய கல்லூரிகள் கலையையும், கல்வி நலத்தையும் வளர்த்தன. எண்ணாயிரம் என்னும் ஊர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்தது. இவ்வூர்க் கோவிலில் 11-ஆம் நூற்றாண்டில் வட மொழிக் கல்லூரி ஒன்று சிறந்த நிலையில் விளங்கியது. இக்கல்லூரி மாணவர்கள் அங்கேயே தங்கிப் படித்தனர். இக்கல்லூரி அவ்வூர்ச் சபையாரின் ஆதரவில் நடந்தது. 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். பெருமளவு நிலம் இக்கல்லூரிக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததால், கல்வி, உடை, உணவு இவை இலவசமாகவே மாணவர்க்கு அளிக்கப்பட்டன. வேதம், இலக்கணம், வேதாந்தம் முதலியவை இங்கு கற்பிக்கப்பட்டன. தஞ்சைக் கல்லூரியில் தமிழ், இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளை மக்கள் பயின்றனர். இக்கல்லூரியை நிறுவியவன் இராசராச சோழன் ஆவான். இக்கல்லூரி தஞ்சைப் பெரிய கோவிலில் சீரும் சிறப்புமாய் நடந்தது. வெளியிடங்களிலிருந்து பல கலைஞர்கள் இக்கல்லூரிக்கு வந்து பணிசெய்தனர். கி. பி. 1062-ல் வீரராசேந்திரதேவன் திருமுக்கூடல் வேங்கடேசப் பெருமாள் கோவிலில் கல்லூரி ஒன்றை நிறுவினான். வேதம், வியாகரணம், சிவாகமம் முதலியன இங்கு சொல்லித்தரப்பட்டன. துறவிகளும் இங்கு மாணவராக இருந்தனர். மாணவர்களுக்கு விடுதி வசதியும், மருத்துவ வசதியும் செய்துதரப்பட்டன. திருவொற்றியூர், புன்னைவாயில் இவ்விடங்களிலிருந்த கல்லூரிகளில் இலக்கணம் படிக்க வாய்ப்பிருந்தது. குடந்தைக் கோவில்களில் விளங்கிய கல்லூரிகள் வடமொழி தென்மொழிக் கல்லூரிகளாக விளங்கின. இவ்வாறு சோழப் பேரரசில் கல்லூரிகள் பல இருந்தமையால் மக்கள் நன்கு கற்று, கல்வியிற் சிறந்தோராய் விளங்கினர்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்