(தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி)

8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி

மைசூர் மன்னர்கள்

மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய இடங்கள் மைசூருக்குச் சொந்தமாயின. சிக்கதேவன் என்பவன் அடுத்து அரசனாயினான். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, பழனி, ஆனைமலை, குமாரபாளையம், தவளகிரி, பொள்ளாச்சி முதலிய இடங்கள் இவனுக்குச் சொந்தமாயின, மேலும் சங்கரய்யா. என்பவன் கொங்கு நாட்டில் ஆட்சி நடத்த மன்னனால் அனுப்பப்பட்டான். இது நடந்த காலம் 18-ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாகும். இவன் அவினாசி, பவானி இவ்விடங்களிலுள்ள கோவில்களைப் புதுப்பித்தான்; பேரூரில் குளமொன்று வெட்டினான். இவன் காலத்திலேயே மைசூர் மன்னர்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குறையலாயிற்று. ஆனால் கி. பி. 1765-இல் மைசூர் மன்னனாக முடிபுனைந்து கொண்ட ஐதர் அலி, அவன் மகன் திப்பு இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டின் பெரும்பகுதி. அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

மைசூர் மன்னர்கள் ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்டிருந்த காலத்தில், கன்னட மக்கள் பலர் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர். கொங்கு நாட்டுக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன; பல புதிய கோவில்களும் கட்டப்பட்டன. குளங்கள் பல வெட்டப்பட்டன. கோயம்புத்தூரிலுள்ள சிக்கதேவராயன் குளம் சிக்கதேவனால் வெட்டப்பட்டதாகும். சத்திய மங்கலத்தில் உள்ள குமாரசாமிக் கோவிலைக் கட்டியவனும் இவனே. நிலங்கள் அளக்கப்பட்டன. புகையிலை வரி, ஆட்டு வரி, புல் வரி முதலிய வரிகள் விதிக்கப்பட்டன. ஐதர், திப்பு இவர்கள் காலத்தில் இன்னும் பல வரிகள் வாங்கப்பட்டதால் உழவும், வணிகமும் வளம் குன்றத் தொடங்கின. மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். பொருளாதார நிலை குன்றத் தொடங்கியது. இக்காலத்தில்தான் முகமதிய சமயமும், கிறித்தவ சமயமும் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கின. திப்புவின் காலத்தில் பல இந்துக்கள் முகமதியராயினர். அபேடுபுஆ (Abbe Dubos) என்ற பாதிரியார் தமிழ்நாட்டிற்கு வந்து கிறித்தவ சமயத்தை மக்களிடையே பரப்பினார். இதற்குப் பின்னர் பல பாதிரிமார்கள் தமிழகம் வந்தனர்; சுவார்டச்சு (Schwartz), சீகன்பால்க்சு (Ziegenbalg) போன்ற சமயப் போதகர்களும் வந்தனர்.

திப்புவின் காலத்தில் ஆட்சி முறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நாடு, 1000 சிற்றூர்களைக் கொண்ட பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டங்கள் 40 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அசாவு (Asaf), பாசுதார் (Faujdar) என்பவர்கள் மாகாணத் தலைமை அதிகாரிகள்; அமில்தார் (Amildar), தரபுதார் (Tarafdar) என்பவர்கள் மாவட்ட அதிகாரிகளாவர். இவர்களுக்கு உதவியாகச் செரிச்த்ததார் (Sheristadar) என்ற அதிகாரியும் இருந்தார். கிராம ஆட்சி கிராமப் பஞ்சாயத்தினரால் திறம்பட நடத்தப்பட்டது. சிக்கதேவன் காலத்தில் தொடங்கப்பட்ட, தபால், காவற்படைத் (Police) துறைகள் திப்புவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நல்லமுறையில் பணியாற்றத் தலைப்பட்டன. மேலும் திப்புவின் காலத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

ஐரோப்பியர் வருகை

முன்னுரை

கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலை நாட்டு வாணிப மக்களாகிய போர்த்துக்கீசியர், (இ)டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்போர் தத்தம் செல்வாக்கை நம் நாட்டில் பரப்ப முயன்றனர். இந்தியக் கடலாதிக்கத்தை முதலில் கைக்கொண்டவர்கள் போர்த்துக்கீசியராவர். இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியன் வாசுகோடகாமா ஆவான். இப் போர்த்துக்கீசிய மாலுமி கி. பி. 1498-இல் கள்ளிக்கோட்டைக்கு வந்து சென்றான். இவனது வருகை நம் நாட்டு வரலாற்றையே மாற்றியமைத்துவிட்டது என்று கூறவேண்டும். போர்த்துக்கீசியரது நாகரிகமும், பழக்க வழக்கங்களும் நம் நாட்டில் பரவின. வாணிபம் வளம் பெற்றது. விசய நகர வேந்தர்களுக்குப் பாரசீகத்திலிருந்து புரவிகளை இவர்கள் வரவழைத்துக் கொடுத்துப் பொன்னும் மணியும் பெற்றனர். கோவாவிலும், வேறு சில இடங்களிலும் கத்தோலிக்க சமயம் வேரூன்றியது. முதல்முதல் அச்சகம் நம் நாட்டில் நிறுவப்பெற்றது. சென்னையின் ஒரு பகுதியாகிய சென்தோம் போர்த்துக்கீசியருக்குச் சொந்தமாயிற்று.

போர்த்துக்கீசியருக்குப் பின் (இ)டச்சுக்காரர் நம் தாயகத்திற்கு வந்தனர். பழவேர்க்காடு, (கி. பி. 1160) தரங்கம்பாடி (1620), தூத்துக்குடி (1658) நாகை முதலிய இடங்களில் வாணிக நிலையங்கள் நிறுவப்புட்டன. கி. பி. 1603-இல் (இ)டச்சுக்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் உரிமையாளராக நாளடைவில் ஆங்கிலேயர் ஆயினர். எனவே (இ)டச்சுக்காரருக்கும் ஆங்கி லேயருக்கும் அடிக்கடி போர் நடந்தது. இக்காலத்தில் பிரெஞ்சு நாட்டாரும் நம் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்று கி. பி. 1784-இல் நம் நாட்டின் முழு உரிமையும் பெற்றனர்.

ஆங்கிலேய ஆட்சியின் வளர்ச்சி

பிரான்சிசுடே என்பவன் கி. பி. 1639-இல் இப்பொழுது சார்ச்சு கோட்டையாக விளங்கும் இடத்தை வெங்கடப்ப நாயக்கனிடமிருந்து வாங்கினான். வாணிக அலுவலகமொன்று இங்கு நிறுவப்பட்டது. 1688-இல் இக்கோட்டையில் கோவிலொன்று கட்டப்பட்டது. இது ஆங்கிலேயரால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கிறித்தவக் கோவிலாகும். வாக்சு கிராவுட்டு (Foxeraft), வில்லியம் லேங்கு ஆரன், சுடேரச னாம் மாசுட்டர் என்பவர்கள் முறையே சென்னை ஆளுநர்களாக வந்து, ஆங்கிலேய ஆட்சி முறைகளையும் நாகரிகத் தையும் பரப்பினர். இதே நேரத்தில் நம் தாயகம் வந்த பிரெஞ்சுக்காரர்கள், சென்தோமிலும், புதுச்சேரியிலும் அலுவலகங்களை நிறுவினர். புதுச்சேரியின் ஆளுநர்களாக (இ)லெனு ஆர் (Lenior), தூமாசு (Dumas), தூபுளே (Duple), என்பவர்கள் முறையே பணியாற்றினர். தூமாசு தஞ்சை மன்னன் தன் அரசைப் பெறுவதற்கு உதவிய காரணத்தால், காரைக்கால் நன்கொடையாகப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது. தூப்ளே பிரெஞ்சு ஆட்சியை நம் நாட்டில் நிலை நாட்ட முயன்றதால், ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்றனர். ஆனால் கி. பி. 1756-இல் பிரெஞ்சு இந்திய ஆளுநரான (இ)லாலி என்பவன் சிறந்த வீரன் ஆவான். பல போர்கள் நடத்தி வெற்றியும் பெற்றான். எனினும் கி. பி. 1760-இல் வந்தவாசியில் நடந்த இறுதிப் போரில் மாவீரன் சர். அயர்கூட்டு என்ற ஆங்கிலத் தளபதி யால் பிரெஞ்சுக்காரர் அடியோடு முறியடிக்கப்பட்டனர். எனவே ஆங்கிலேயர் கை உயர்ந்தது. ஆனால் அவர்கள் தம் ஆட்சியை நம் நாட்டில் நிலை நிறுத்துவதற்குத் தடையாக ஐதர் அலியும், திப்புவும் விளங்கினார்கள்.

கி. பி. 1772-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பெற்றது. இதன் காரணமாய் நம் தாயகமாகிய தமிழ் நாட்டின் வரலாறு இந்திய வரலாற்றோடு இணைந்தது. இக்காலத்தில் தான் முதல் தலைமை ஆளுநராக வாரன் ஏசுடிங்குசு பதவியேற்றான். ஆங்கிலேயருக்குச் சொந்தமான நிலப்பகுதி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டத் தலைமை அலுவலராகக் கலெக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்களது பணியை மேற்பார்வையிட ரெவின்யூ போர்டு என்ற குழு கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு வரிப் பணத்தைப் பெற்றுப் பாதுகாப்பதற்குக் கால்சா என்ற ஒரு கசானா நிறுவப்பட்டது. இதற்குத் தலைவராக ஒரு தலைமைக் கணக்கர் (Accountant General) பணியாற்றினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிமை வழக்கு, குற்ற வழக்கு(சிவில், கிரிமினல்) நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இந்துச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன; மொழிபெயர்க்கப்பட்டன. கல்கத்தாவில் பாங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. திருடர்கள் ஒழிக்கப்பட்டனர். இதன் காரணமாய் வாணிபம் வளர லாயிற்று; வளமும் தருவதாயிற்று.

கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. திப்புவின் தோல்வியின் காரணமாய்ச் சேலம், கோயம்புத்தூர், தாராபுரம், பாலக்காடு, தஞ்சை முதலிய இடங்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை, இராம நாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கைப் பகுதிகள் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. இதற்குக் காரணமாக இருந்தவன் பாளையப்பட்டுகளின் தலைவர்களில் தலைமையாய் இருந்த ஆர்க்காடு நவாப்பாவான். ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற கடனுக்காக அவன் தன் கப்பப் பணம் முழுவதையும் வசூலிப்பதற்கு உரிய அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினான். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டபொம்மன், புலித்தேவன் என்ற இரு பாளையக்காரர்களும், சிவகங்கை வீரர்களான மருதிருவரும் ‘வரிகொடோம்’ என்று கூறி வீரமுழக்கம் செய்தனர். ஆனால் எட்டையபுரப் பாளையக்காரரும், புதுக் கோட்டைத் தொண்டைமானும் பதவி ஆசையின் காரணமாய் ஆங்கிலேயரது கைப்பொம்மைகளாக மாறியதால் இவ் வீரர்கள் கொல்லப்பட்டனர். எனவே நாம் அனைவரும் ஆங்கிலேயரது அடிமைகளானோம்.

ஆங்கிலேயர் ஆட்சியினால் விளைந்த நன்மைகள்

சாதிப் பிரிவினைகளும், சமயப் பிணக்கும் நீதிப்பிழையும் நியமப்பிழையும் மலிந்து, அடிமை மோகமும் ஆள்வினையின்மையும் கொண்டு, அறியாமை இருளிலே மூழ்கி நிலை தாழ்ந்து தலைகவிழ்ந்து ஒடுங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு அறிவொளி காட்டியது ஆங்கிலேய ஆட்சியே என்று கூறினால் அது முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற உண்மையாகும்.

சமுதாயச் சீர்திருத்தம்

ஆங்கிலக் கல்வி நாட்டிலே பரவுமுன்னர்த் தமிழ்ச் சமுதாயம் அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. சாதிப்பேய் தமிழ் மக்களைப் பிரித்து அரித்து வந்தது. இந்த நாட்டுக்கே உரிய தமிழ்மக்கள் அயலவரால் நாயினும் கேடாக நடத்தப்பட்டனர். தமிழ்ச் சமுதாயம் உள் வலிவு இன்றிக் கிடந்தது. அத்தகைய சமுதாயத்துக்கு மேலை நாட்டு அறிவியற் கல்வியை அளித்து அறியாமை இருளை அகற்றி அறிவொளி பெறச்செய்து, சாதிப் பிரிவினை களைந்து, தலை நிமிரச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. சமுதாயத்திலே எல்லோரும் சமம்; எல்லோருக்கும் கல்வி என்ற எண்ணம் அரும்பியதற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சியே.

அரசியல் சீர்திருத்தம்

ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக, துருக்கர்கள், ஓய்சாலர்கள் முதலிய அயலவர் படையெடுப்பாலும், அவர்கள் செய்த போர்களாலும் அலைத்துக் குலைத்துக் குழப்பத்திலே மிதந்து வந்த தமிழகத்திலே ஓர் ஒழுங்கான ஆட்சியை நிறுவி அமைதியை ஏற்படுத்தியது ஆங்கிலேய ஆட்சிதான். மேலை நாட்டு முறைப்படி, அழகும் ஒழுங்குமிக்க நல்ல காவற்படையினை நிறுவியும், அதிலே தமிழரைப் பயிற்சி பெறுவித்தும், அப் பயிற்சிக்கான கல்லூரிகளை நிறுவியும், தமிழனைப் படைத்துறையில் சிறந்தோங்கச் செய்த பெருமை ஆங்கிலேய ஆட்சிக்குரியதாகும். நாட்டை மாநிலமாகவும், மண்டலமாகவும், மாவட்டமாகவும், வட்டமாகவும், வட்டாரமாகவும் பிரித்து, நல்லதோர் ஒழுங்கான ஆட்சியை நடத்தியது ஆங்கிலேய அரசே. ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்டக் கழகம் முதலிய ஆட்சி மன்றங்களை ஏற்படுத்திப் பெருஞ்சாலைகளும், சிறு சாலைகளும், இருப்புப் பாதைகளும் அமைத்து, ஊர்களை இணைத்து, கார், புகைவண்டி முதலிய ஊர்திகளையும், வான ஊர்தியையும் ஓடவிட்டது ஆங்கிலேய அரசே. அறியாமை இருளில் கிடந்த தமிழனுக்கு ஆங்கிலக் கல்வி அளித்து, ஆளும் திறனையும் பயிற்சியையும் அளித்தவர் ஆங்கிலேயரே.

கல்வியும் மொழி வளர்ச்சியும்

கல்வி வாடையே அடிக்கப் பெறாத தமிழ் மக்களும் தமிழ்ப் பெண்டிரும் கல்வியளிக்கப் பெற்றனர். இன்று மாநிலத் தலைவர்களாகின்ற அளவுக்குப் பெண்டிர் உயர்ந்தமைக்குக் காரணம் ஆங்கிலேயர் அளித்த கல்வியே. ஆங்கிலேயர் ஆட்சியிலே தமிழ்மொழி பெற்ற ஆக்கம் ஒன்றல்ல; பல; பலப்பல. அச்சுப்பொறி மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களை அச்சிட்டு எல்லாரும் படிக்க வாய்ப்பளித்தவர் ஆங்கிலேயரே. மேலும் தமிழிலே சிறு கதை, நெடுங்கதை, கட்டுரைகள் முதலிய பல புதிய துறை நூல்களும், செய்தித்தாள்களும், வார, மாத வெளியீடுகளும் தோன்றின. தமிழ் நூல்களை ஆங்கில மொழியிலே பெயர்த்தெழுதி உலகமெலாம் அறியச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆங்கிலத்தோடு தமிழும் கற்பிக்க வழிவகை செய்தவர் ஆங்கிலேயரே. தமிழ் தனித்தியங்கும் ஆற்றலுடையது என்று நிறுவியவர் ஆங்கிலேயரே.

பிற நலன்கள்

தமிழ் நாட்டிலே, நூல் நூற்றல், நெய்தல் போன்ற தொழில்களுக்குரிய இயந்திரங்களைக் கொண்டு வந்து நாட்டின் பல்வேறு இடங்களிலே பெரும் பெரும் தொழிற் சாலைகளை ஏற்படுத்தியமைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலேயரே. பெரும் அணைக்கட்டுகளைக் கட்டி, நாட்டிலே நீர்ப்பாசனம் நன்கு நடைபெறுமாறும், மின்சாரம் கிடைக்கு மாறும் செய்து நாடு நலமுறச் செய்தவர்கள் ஆங்கிலேயர்களே.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்