(தமிழ்நாடும் மொழியும் 35: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி)

2. செந்தமிழும் கொடுந்தமிழும்

செந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம்.

இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனால் முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகிறது.

செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில்” என்பது சிலப்பதிகார வரியாகும். இது தவிர வேறு நூற்களிலே இப்பிரிவு கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பிரிவை வளர்த்துப் பெரிதாக்கி வாதமிட்டவர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களே.

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” என்ற நூற் பாவிற்கு உரையாசிரியர்கள் கூறிய உரைப்பகுதி வருமாறு :

“செந்தமிழ் ஒன்று; அதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று’கூறிக் கொடுந்தமிழ் நாடுகளை,

“தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன் வடக்கு-நன்றாய
சீத மலாடு புன்னா செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்”

என்ற வெண்பாவால் காட்டியுள்ளார் நச்சினார்க்கினியர். சேனாவரையர் ஆகிய பிற உரையாசிரியர்கள் புனல்நாட்டுக்குப் பதிலாக ஒளி நாட்டையும் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் தெய்வச்சிலையார் என்ற மற்ருெரு தொல்காப்பிய உரையாசிரியர் இவர்களைப்போலக் கூறவில்லை. அதுமட்டுமல்ல; இவர்களை மறுத்தும் உரை கூறியுள்ளார்.

“செந்தமிழ் மொழி வழங்கும் தமிழ் நாட்டின் கூறுகளாம் பன்னிரு நிலம் என்னும் பொருள் சிறக்கவில்லையோ? செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடு எனத் தமிழ்நாடு பண்டு பிரிவுண்டு கிடந்ததுண்டோ? இல்லையே !” என்பது தெய்வச்சிலையார் முழக்கமாகும். பேராசிரியர் அரசன் சண்முகம் அவர்களும் தெய்வச்சிலையார் கருத்தையே வலியுறுத்தி, முன்னைய உரையாசிரியர் கூற்றைத் தக்க சான்றுகளோடு மறுத்துக் கூறியுள்ளார். முரண்பாடுகள் இப்பிரிவில் மட்டுமல்ல; இவை வழங்கும் நாடு எது என்பதிலும் காணப்படுகின்றது. ஒருசிலர் பாண்டிய நாட்டைக் கூறுவர். மற்ருெரு சிலர் சோழநாட்டைக் கூறுவர்.

செந்தமிழ் நிலமாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் ஆகும்” என்பது காரிகை உரையாசிரியர் போன்ற சிலர் கூற்றாகும். இது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. சங்கப் புலவர் உட்பட எல்லாப் புலவர்களும் பாண்டிய நாட்டையே செந்தமிழ்நாடு எனக் கூறிப்போந்தனர். “பாண்டிய நாடே சேர சோழ நாடுகளைவிடச் செந்தமிழ் ஆராய்ச்சிக்குரியது” என்பர் திராவிடப்பிரகாசிகை ஆசிரியர். “தென்னன் உறை செந்தமிழ்க் கன்னிநாடு” என்று பாண்டிய நாட்டையே பின்னால் வந்த நாயன்மாரும் ஆழ்வார்களும் கூறிச் சென்றனர். இவர்கள் மட்டுமல்ல; நன்னுால் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர்,

செந்தமிழ் நாடே, சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும்
சவுந்திர பாண்டியன் எனுந் தமிழ்நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநாடென்ப”

எனக் கூறிச் சென்றுள்ளார். இப்பிரிவு பற்றிப் பேராசிரியர் பி. டி. சீனிவாசனார் அவர்கள் கருத்தாவது:-

“செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு, நாம் வழக்கமாக எண்ணுவதுபோல, பாண்டிய நாட்டில் வழங்கும் மொழி ஏனைய பன்னிரு நிலமொழிகளிலும் உயர்ந்தது என்னும் கருத்திலன்று. ஒன்றின் உயர்வும் தாழ்வும் மற்றொன்றுக்கும் உண்டு. ஆனால் பாண்டிய நாட்டில்தான் முதன் முதலில் எழுத்துமொழி செம்மைப்படுத்தப்பட்டது. அக்காலை இதே எழுத்து மொழி பிற நாடுகளிலும் கையாளப்படும் பொழுது அந்நாட்டவர்கள் எழுத்து மொழியிலே பேச்சு மொழிகள் பலவற்றைச் சேர்த்துக்கொண்டனர்.”

இதுகாறும் கூறியவற்றுல் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு பண்டைக்காலத்தில் இல்லை என்பதும், அப் பிரிவு இடைக்காலத்தில் உரையாசிரியர் சிலரால் கற்பிக்கப்பட்டது என்பதும், செந்தமிழ் நாடு என்பது பாண்டி நாடே என்பதும் நன்கு விளங்கும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்