(தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ்

கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது; இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கருனாடக இசை பிறந்தது. ஆரிய மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக்குச் சிறிது ஏற்பட்ட இசையே ஆரிய இசையாம். இன்றுள்ள கருனாடக இசையின் கூறுகட்குள்ள-பண்கட்கு உள்ள பெயர்களையும் பண்களையும் தமிழ் முறைப்படி மாற்றியமைத்து விட்டால் அது தமிழிசையாகிவிடும். கருனாடக இசையின் உயிரும் கருவும் இரத்தமும் சதையும் எலும்பும் தமிழ் – தமிழிசையே; அதன் தோலும் ஆடையுமே பிற மொழி இசை.

முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், கவிக்குஞ்சர பாரதியார் முதலியோர் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இசைப் புலவர்களாவர். இராமாயண நாடகம் அருணாசலக் கவிராயரால் எழுதப்பட்டது. இதிலே கீர்த்தனைகள் உள. இராமசாமிசிவன், ஆனை ஐயா கனம் கிருட்டின ஐயர், கோபாலகிருட்டின பாரதியார், இராமலிங்க அடிகள், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் 19-ஆம் நூற்றாண்டு இசைப் புலவர்களாவார்கள். இக்கால இசை நூல்களில் தலைசிறந்தவை இராமலிங்கர் பாடிய அருட்பா, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து முதலியவையாம். இருபதாம் நூற்றாண்டு இசைப் புலவரில் தலைசிறந்தவர் பாரதிதாசனாவார், மற்றும் நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதியார் முதலியோரும் இசைத் தமிழில் பாக்கள் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவன், கண்ணதாசன், கா. மு. செரிப் போன்றவர்கள் திரைப்படக் கதைகளுக்கு இசைப் பாடல்கள் எழுதி வருகின்றனர்.

நாடகத் தமிழ்

படிக்காத பாமரர்க்கும் நேரமில்லாத படித்தவர்க்கும் நல்லறிவும் இன்பமும் பயத்தற்பொருட்டுப் பயன்படுவது நாடகத்தமிழாகும். இசையும் இயலும் செவிக்குத்தான் இன்பந் தருவனவாகும். நாடகமோ கண்ணுக்கும் இன்பத் தரும் வன்மை படைத்ததாகும். தமிழ் மொழியிலே நாடக நூற்கள் முதலில் மதவிடயமாகத் தோன்றியிருக்கவேண்டும் என்று கருதுவது அவ்வளவு சரியன்று. இக்கருத்து இடைக் கால நாடகவளர்ச்சிக்குப் பொருத்தமாகும். இடைக் காலத்திலே நாடகத் தமிழைச் சமயமே வளர்த்தது என்னலாம். அதிலும் சைவமும் வைணவமுமே ஆடல் பாடல்களையும் கூத்தையும் நன்கு வளர்த்தன என்னலாம். முதன்முதலில் ஆடல் பாடல்களே நாடகத் தமிழின்கண் விளங்கின. பின்னர் கதைகள் பல நுழைந்தன. கதை கூறும் உரையாடல்களும் காலப்போக்கில் நுழைந்தன. அதன் பிறகு நாடகம் வேத்தியல் பொதுவியல் என இரண்டாகப் பிரிந்தது. தொடக்கக் காலத்திலே சீரும் செழிப்புமாக விளங்கிய நாடகத் தமிழ் பிற்காலத்தில் ஆரியராலும் சமணராலும் வீழ்ச்சி அடைந்தது. நாடகம் பாமரர் கையகப்பட்டுச் சீரழிந்தது. பரத நாட்டியம் காமக் கணிகையர் வயப்பட்டுச் சீர்குலைந்தது. சுருங்க உரைப்பின் இவர்கள் தங்கள் வயிற்றை வளர்க்கக் கலையைப் பயன்படுத்தினர். கலை கொலையுண்டது.

வடமொழித் தொடர்பாலேயே தமிழில் நாடக நூல்கள் தோன்றின என்பர் ஒருசிலர். இக்கூற்றுக்கு இக்காலத்தில் யாரும் செவி கொடுப்பதில்லை. ஏன்? இக்கூற்றிலே உண்மை வறட்சி மிக்கு இருத்தலால் என்க. வட மொழித் தொடர்பின்றியே தமிழிலே நாடகம் தோன்றி வளர்ந்தது என்பதைத் தொல்காப்பியரும் சிலம்பிற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் விளக்கி நிற்கின்றனர். ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்பது தொல்காப்பியச் சொற்றொடர். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை உரையிலே அடியார்க்கு நல்லார், நாடகத் தமிழின் இலக்கணம், நாடகத் தமிழின் இலக்கணத்தைச் செவ்வனே விரித்துக் கூறுகின்ற இலக்கண நூல்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல; அவர் காலத்து நாடகத் தமிழ் நூல்களிலிருந்து அந்தந்த இடங்களுக்கேற்ற சில நாடகத் தமிழ் நூற்பாக்களையும் இடையிடையே எடுத்துக்காட்டியுள்ளார். தொல்காப்பியர் காலத்திலே வள்ளிக் கூத்து வழக்கத்தில் இருந்ததாக அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையின் மூலம் அவர் காலத்தில் நாடகம் மிகச் சீரிய முறையில் விளங்கியது என்பதையும் நாடகத் தமிழ் நன்கு வளர்க்கப்பட்டது என்பதையும் நாம் உணரலாம்.

அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புராணம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் ஆகியன பண்டைக் காலத்தில் விளங்கிய நாடகத் தமிழ் நூல்களாம். அடியார்க்கு நல்லார் நாடகத் தமிழ் இலக்கண நூல்களைக் குறித்துள்ளாரே தவிர நாடகத் தமிழ் இலக்கிய நூல்களைக் குறிக்கவில்லை. இதனால் அவர் காலத்திலோ அன்றி, சங்கக் காலத்திலோ நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் இல்லை என்பது பொருளல்ல. இருந்து அவர் காலத்திலே இறந்திருக்கலாம். அவர் காலத்தில் கூட மேலே குறித்த அத்தனை இலக்கண நூல்களும் இருந்திருக்கவில்லை. அவரே அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புரணம் முதலிய நூல்கள் தன் காலத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் நூல்வடிவிற் கிடைத்தவை மதிவாணர் நாடகத் தமிழ் நூல், பரத சேனாபதீயம் என்னும் இரண்டு நூல்களே. ஆனால் இவையும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. இந்நூல்களில் மிகப் பழமையானது என்று கருதப்படுவது முத்தமிழ் இலக்கணம் கூறும் அகத்தியமாகும். இது அகத்தியரால் இயற்றப்பட்டது என்பர். பரதமும் முறுவலும் அடியார்க்கு நல்லார் காலத்திலே கேள்வி அளவாய் நின்ற பழைய நூல்களாகும். சயந்தமும் குணநூலும் இவரால் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. குண நூல் நாடக உறுப்பாகிய அகச்சுவையைப் பற்றி விரிவாகக் கூறிய நூலென்று கருதப்படுகின்றது. செயிற்றியம் என்னும் நூல் சூத்திர யாப்பில் செயிற்றியனாரால் செய்யப்பட்டது. இந்த நூலிலிருந்து அடியார்க்கு நல்லாரும் இளம்பூரணரும் சில சூத்திரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். பரத சேனாபதீயம் என்னும் நூலைச் செய்தவர் ஆதிவாயிலார் என்னும் ஆசிரியர் ஆவார். இது வெண்பாவாற் செய்யப்பட்டது; அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் நூலாகக் கொள்ளப்பட்டது. மதிவாணர் நாடகத்தமிழ் நூல் செந்தமிழ்ப் புலவரும் நாடகாசிரியரும் கடைச்சங்கத்துப் பாண்டிய மன்னருமாகிய மதிவாணரால் செய்யப்பட்டது என்பர். இந்நூல் சூத்திரப் பாவாலும் வெண்பாவாலும் செய்யப்பட்டது. இந்நாடக நூலின் சில சூத்திரங்களை சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கையாண்டிராவிட்டால் இன்று தமிழர் நாடகக் கலையற்றவர் என்று கூற இடம் ஏற்பட்டிருக்கும். கருவூலங்கள் போன்ற இத்தகைய நூல்கள் காலவெள்ளத்தால் அழிந்துபோயின. எனினும் நாடகம் தமிழ் மொழியின் வீடகத்திற்குப் பழமையான ஏடகமாய் இலங்கியது என்பது தெற்றென விளங்கும்.

சங்கக் காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் செழிப்போடு வளர்ந்துவந்த நாடகத் தமிழ் இடைக்காலத்திலே நலிந்து ஒழிந்தது. இதற்குக் காரணம் சமணம் போன்ற பிற சமயங்களே. சமணர்கள் நாடகத்தையும் இசையையும் வெறுத்தனர். நச்சினார்க்கினியர்கூட இசை, நாடகம் காமத்தை விளைவிக்கும் என்றார். இக் கருத்துகள் மக்களிடையே பரவப் பரவ நாடகத் தமிழை வளர்ப்பவர்கள் கூத்தாடிகள் என்றும் இழிசினர் என்றும் ஒதுக்கப்பட்டனர். இதனால் இடைக்காலத்திலே நாடகத்தமிழ் வளர்ச்சி குன்றித் தேயலாயிற்று.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்