(தமிழ்நாடும் மொழியும் 39 : நாடகத்தமிழ்– தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

4. தமிழ் இலக்கண வளர்ச்சி

மிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி இலக்கண நூல்களும், அகப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என ஒவ்வொரு துறையிலும் இலக்கண நூல்களும் உள. ஆனல் தொடக்கத்தில், அஃதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இல்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஓர் இலக்கண நூல் இருந்தது. தொல்காப்பியம் அதற்குச் சான்று தரும். சின்னஞ்சிறு ஆல வித்திலிருந்து ஏராளமான கிளைகள் கிளைப்பதைப்போலத் தொல்காப்பியத்திலிருந்து பல இலக்கண நூல்கள் கிளைத்துள்ளன.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றிற்கும் இலக்கணம் கூறும் நூலாகும். இந்நூலாசிரியராகிய தொல்காப்பியர் தொல்காப்பியக் குடியிற் பிறந்தவர். இவரது காலம் கி. மு. 500 க்கும் 300 க்கும் இடைப்பட்ட காலமாக இருத்தல் வேண்டும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன. மேலும் பொருளதிகாரத்தின் மூலம் பழந் தமிழ் மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியவற்றை நன்கு அறியலாம். நச்சினர்க்கினியர், சேனாவரையர், இளம்பூரணர், பேராசிரியர்,தெய்வச்சிலையார், கல்லாடனார் என்போர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இந்நூல் இடைச்சங்கக் காலத்தைச் சேர்ந்தது.

தொல்காப்பியருக்குப் பின்னால் பொருள் பிரியலாயிற்று. பிற்காலத்தில் பொருளியல் நான்காக வளரலாயிற்று. தொல்காப்பியர் சில நூற்பாக்களினுல் கூறிய யாப்பும், அணியும் தனித்தனி இலக்கணங்களாக வளரலாயின. அகத்திணையியலும் புறத்திணையியலும் இவ்வாறே தனித் தனியாகப் பிரிந்து வளரலாயின. எனவே அவற்றிற்கு எல்லாம் தனித்தனி நூல்கள் உண்டாயின.

அகப்பொருள் இலக்கண நூல்கள்

அகப்பொருள் இலக்கண நூல்கள் பல. அவற்றுட் சிறந்தது நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலே. இது தொல்காப்பியத்தைப் பின்பற்றியதாகும். இந்நூலாசிரியர் காலம் பாண்டியன் குலசேகரன் காலமாகும். இவன் காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டாகும். இந்நூல் 252 சூத்திரங்களைக் கொண்டது. இந்நூலின் துணை கொண்டு ஐந்திணைகளைப் பற்றிய செய்திகளையும், காதல், கற்பு இவற்றைப் பற்றியும், மக்களது ஒழுகலாற்றையும் நன்கு தெரிந்துகொள்ளலாம். மாறனகப் பொருள் என்பது மற்றொரு அகப்பொருள் நூலாகும். இதன் ஆசிரியர் குருகைப் பெருமாள் கவிராயர் ஆவார்.

புறப்பொருள் இலக்கண நூல்கள்

தொல்காப்பியத்திற்குப் பின்பு புறப்பொருளுக்கு எனத் தோன்றிச் சிறந்து விளங்கும் நூல் புறப்பொருள் வெண்பா மாலையாகும். இந்நூல் வெட்சி, கரந்தை, வஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலிய புறப் பொருள்களைப் பற்றி வெண்பாவால் பாடப்பட்டதாகும். இந்நூலாசிரியர் ஐயனாரிதனார் ஆவார். இவரது காலம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டாகும். சாமுண்டி தேவனார் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்நாட்டுப் போர் முறைகளை இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்நூலுக்கு அடிப்படை தொல்காப்பியமும், பன்னிரு படலமுமாகும். தொல்காப்பியத்தில் புறப்பொருள் ஏழு திணைகளை உடையது. ஆளுல் புறப்பொருள் வெண்பாமாலையோ பன்னிரண்டு திணைகளையுடையது.

யாப்பிலக்கண நூல்கள்

தொல்காப்பியர் உவம இயல் ஒன்றே கூறினர். ஆனல் பிற்காலத்திலோ யாப்பிலக்கணங்கள் எனத் தனிப் பெரு நூல்கள் பல உண்டாயின. அவற்றுள் ஆன்றோராலும் சான்றோராலும் நன்கு போற்றப்படுபவை யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையுமாகும். இவற்றை யாத்தவர் அமிர்த சாகரர் ஆவார். இவர் வேளாளர்; சமண சமயத்தினர்; கி. பி. 11-ஆம் நூற்றாண்டினர். இவர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகை யாப்பிலக்கணத்தைக் கட்டளைக் கலித்துறை என்னும் பாவால் கூறுகின்றது. இதற்குக் குணசாகரர் என்பவர் உரை எழுதி உள்ளார். மற்றொரு நூலாகிய யாப்பருங்கலவிருத்தி சூத்திரப்பாவால் ஆனது.

அணி இலக்கண நூல்கள்

அணியை மட்டும் பெரிதும் விரித்துக் கூறும் நூல்கள் இரண்டு. ஒன்று தண்டியலங்காரம்: மற்றொன்று மாறன.லங்காரம். தண்டியலங்காரம் என்பது மகாகவி தண்டியாசிரியர் எழுதிய காவியாதரிசம் என்னும் வடநூலின் மொழி பெயர்ப்பு ஆகும். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 125 சூத்திரங்களை உடையது. இந்நூலாசிரியர் வரலாறு தெளிவாகத் தெரிவதற்கில்லை. இந்நூலில் கவி வகைகளும், கவிகளினுள்ளே நின்று அழகு செய்வனவாகிய குண வகைகளும், பொருளணி வகைகளும், மடக்கு, சித்திர கவி இவற்றின் வகைகளும், செய்யுளுக்கு ஆகாத வழுக்களும் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மாறனலங்காரம் என்ற அணி நூல் குருகைப் பெருமாள் கவிராயரால் எழுதப்பட்டதாகும். தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை உதாரணங்காட்டி விரிவாக இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்நூல் சூத்திர யாப்பால் அமைந்தது.

இவை போக, எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் நூல் நன்னூல் என்னும் பொன்னூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார். இவர் தொண்டை நாட்டுச் சனகாதிபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை சன்மதி முனிவர் ஆவார். இவரது சமயம் சைன சமயமாகும். சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளின்படி இவர் நன்னூலை இயற்றினார். இவரது காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டு ஆகும். மயிலை நாதர், சங்கர நமச்சிவாயர், விசாகப்பெருமாள் ஐயர், இராமானுசக் கவிராயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் என்போர் நன்னூலுக்கு உரை எழுதி உள்ளனர். இவற்றுள் சங்கர நமச்சிவாயர் உரை விருத்தி உரை எனப்படும்.

தொல்காப்பியத்திற்குப் பின்பு ஐந்திலக்கணமும் கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் என்பனவாம். வீரசோழியத்தின் ஆசிரியர் புத்தமித்தரனார் ஆவார். இவர் தஞ்சையைச் சேர்ந்த பொன்பற்றி என்னும் ஊரினர். இவரது காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டாகும். இவர் வீரசோழன் பெயரால் இந்நூலை இயற்றினர். இந் நூலின் மூலம் வடமொழிப் புணர்ச்சி இலக்கணங்கள் முதலியவற்றை நன்கு அறியலாம். இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகராவார். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்பர். இதில் ஐந்திலக்கணங்களும் நன்கு கூறப்பட்டுள்ளன. ஆனால் எழுத்து, சொல், பொருள் என்றே இந்நூல் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அணியிலக்கணம், யாப்பிலக்கணம், பாட்டியல் இம்மூன்றும் பொருளதிகாரத்தில் அடங்கியுள்ளன. தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், அகப்பொருள், வெண்பா மாலை போன்ற நூற்கருத்துகளைத் தழுவி இதனை இந் நூலாசிரியர் எழுதி உள்ளார். மேலும் இந்நூலுக்கு உரையும் இவரே எழுதியுள்ளார். இவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். படிக்காசுப் புலவர் இவரது மாணவர் ஆவார். திருவாரூர்ப் பன்மணிமாலை, மயிலம்மை பிள்ளைத் தமிழ் முதலியன இவரது பிறநூல்களாகும். இவர் சைவ சமயத்தினர். தொன்னூல் என்பது மற்ருெரு நூலாகும். இதன் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைச் சுருக்கிக் கூறும் வசன நூலாகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்