தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நெறிக்காவலர் அறவாணர்
நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்!
தமிழ்ப்பகைவர்களே! வெளியேறுங்கள்!
தாய்மொழியில் இறைவனை வணங்குபவர்களுக்குத்தான் இறையருள் முழுமையாகக் கிட்டும். தமிழர்கள் பிற மொழியில் தம் சார்பாக யாரோ கடவுளை வாழ்த்த, அதைப்புரியாமல் செவிகொடுத்துக் கேட்டுத் தீவினை புரிந்து வருகின்றனர். எனவேதான், இறையருள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர்.
இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைநெறி பரப்பியவர்களுள் ஒருவர் நம்பியாரூரன்; சுந்தரமூர்த்தி நாயனார் என்று அழைக்கப் பெறுகிறார். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரன் சிவபெருமானைப்பற்றி 38,000 பாடல்கள் தமிழில் பாடியவர்.
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் தமிழ் என்றும் தமிழால், தமிழோடு, தமிழான், தமிழை என்பன போன்றும் ‘தமிழ்’ என ஐம்பது இடங்களுக்கு மேல் குறித்துப் பாடியுள்ளார். சுந்தரர் தமிழால்தான் பாடினார். அது மட்டுமல்ல
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் (தேவா-சுந்:701/4)
எனப் “பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள் செய்வாய்” என்றும் இறைவனை வேண்டுகிறார். பல நலச் சிறப்புகளை உடைய தமிழால் பாடினால் அருள் கிடைக்கும் என்று பாடிய சுந்தரரின் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்வதே முறை. (அங்கு மட்டுமல்ல. தமிழர்கள் கோயிலகள் எங்கும் தமிழ் வழிபாடும் பிற விழாக்களும் நடைபெறுவதே அறம்.) அதனைப் பின்பற்றி இறையன்பர்கள் தமிழில் குட முழுக்கு செய்வதற்கு வரவேற்புப் பா பாடி வாழ்த்த வேண்டியவர்கள் எதிர்க்கிறார்கள். மானமற்று வழக்கு தொடுக்கின்றார்கள்.
தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்(தேவாரம்,சுந்தரர், 899/3)
எனச் சுந்தரர் இறைவன் தமிழ்ப்பாடல் பாடுநருக்கு நாளும் பொற்காசு நல்கியதாகக் கூறுகிறார். நாளும் பணம் தந்தால் நாள்தோறும் பாடுவார்கள் அல்லவா? அப்படியானால் இறைவன் விரும்புவது தமிழ்ப்பாடல்தானே. அதனால்தானே சுந்தரர், திருஞானசம்பந்தரைக் குறிப்பிடும் பொழுது,
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் (தேவாரம்,சுந்தரர், 642/1)
அதுமட்டுமல்ல!
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே (தேவாரம்,சுந்தரர், 912/4)
என்று தம் தமிழ்ப்பாடல்களைப் பாடும் திறமையாளரைத் தீ வினைகள் வந்து சேரா என்கிறார்.
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினை கட்டு அறுமே(தேவாரம்,சுந்தரர், 177/3,4)
என்று தம் தமிழ்ப்பாடல்களை விரும்பிக் கற்றுக் கேட்பவர் தீவினைகள் நீங்கும் என்கிறார்.
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே (தேவாரம்,சுந்தரர், 434/4)
தம் தமிழ்ப்பாடல் தொகுப்பைப் பாடுவோர், தம் தலைமேல் எப்பொழுதும் இருப்பதற்கு உரியராவர் என்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாவலூரில் இவர் நினைவில் நம்பி ஆரூரான் கோயில் கட்டியுள்ளனர். அதற்கான குடமுழுக்கு, தமிழ்முறையில் நடைபெற ஏற்பாடு செய்த பொழுது பிராமணியத்தில் ஊறிய சிவாச்சாரியார்கள் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்பெற வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.
வழக்கை உசாவிய அறவாணர் நீதிபதி மகாதேவன் நீதிமன்றத்திலேயே,
“பித்தா பிறைசூடி பெருமானே” எனத்தொடங்கும் சுந்தரர் எழுதிய தேவாரப் பாடலைப் பாடிக்காட்டி யுள்ளார். அத்துடன், “தமிழில் தேவாரம் பாடிய சுந்தரர் நினைவாக அமைக்கப்படும் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தாமல் வேறு எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த முடியும்” என்று கேட்டுள்ளார். இறுதியில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, அந்தக் கோயில் குடமுழுக்கு தமிழிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
வழக்கில் வெற்றி பெற திருநாவலூர் இறைவனைத்தான் வழிபடுவர். சமற்கிருத்த்தில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுததவர்கள் வழக்கில் தோற்றுள்ளனர். ஆக திருநாவலூரில் குடி கொண்டுள்ள இறைவனே சமற்கிருத குடமுழுக்கை விரும்பவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
தமிழ்க் குடமுழுக்காளர்களின் இறைநெறித்தொண்டு போற்றற்குரியது. அவர்கள் பணி சிறக்கட்டும்! அவர்கள் நீடூழி வாழ்க!
நீதிபதி தீர்ப்பாணைக்கிணங்க இன்று காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு அழைப்பிதழுக்கிணங்க அமைச்சர் பெருமக்கள் பங்கேற்க குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
எனினும் இதற்கிடையில், பிராமணியத்தை நிலைநிறுத்த விரும்பும் பிாமணர்கள் வழக்கு போட்டும் வெற்றி பெற முடியாமல் போனதால் பிராமணியக் காவலர்களான திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் ஆகிய ஆதினங்கள் தமிழ்க்குடமுழுக்கிற்கு எதிராக அறிக்கை விட்டனர். எப்பொழுது அவர்கள் தமிழ்நெறியை ஏற்றனர். இப்பொழுது ஏற்பதற்கு எப்படி அவர்களால் இயலும்? பிராமணிய அடிவருடிகள். தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் வழிபாடுகளுக்கே வழி விட மாட்டார்களே! வேறு என்ன கூறுவர்?
ஆரிய அடிமைகளான மூன்று மடாதிபதிகளையும் கண்டிக்க வேண்டும் எனக் கரூர் தமிழ் சங்கத்தின் தலைவர் கரூர் கன்னல், செயலாளர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் அறிக்கை விட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, தமிழ்க் குடமுழுக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் அனைவருமே கண்டிக்கத்தக்கவர்கள். தாம் சார்ந்த சமூகம், அமைப்பு, இனம் முதலியவற்றிற்கும் அவப்பெயர் உண்டாக்கும் இத்தமிழ்ப்பகைவர்கள் தமிழ் வேண்டா என்றால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறித் தமிழ்நாட்டில் வஞ்சகர்கள் இல்லா நிலையை உருவாக்கட்டும்!
இத்தகையோர்களுடன் இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் உடையவர்கள் யாரும் தொடர்பு கொள்ளாமல் அடியோடு புறக்கணிக்க வேண்டும்!
இத்தகையோரால் ஒற்றுமையாக வாழும் இனத்தவரிடையே கசப்பும் வெறுப்பும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் இவர்கள்மீது அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரம் தமிழ்நெறிக்காவலராகத் திகழ்ந்து உண்மையின் பக்கம் நின்று அறம் வழங்கிய நீதிபதி மகாதேவன் பெரிதும் பாராட்டிற்குரியவர். குற்றங்களைக் குறைக்கத் திருக்குறளைப் படிப்பிக்கச் சொன்ன தீந்தமிழன்பர் அவர். அவரது தீர்ப்புகளாலும் தமிழ்ப்பேச்சுகள், தமிழ்க்கட்டுரைகளாலும் தமிழன்பர்களால் மதிக்கப்படுபவர். இப்பொழுது நடுநிலைமையுடன் ஆராய்ந்து தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி இறையன்பர்கள் உள்ளத்திலும் உயர்ந்து விட்டார்.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 112)
நடுவுநிலமையாளரின் ஆக்கம் அவர் வழிமுறையினருக்கும் நன்மை தரும்.
வாழ்க அறவாணர் நீதிபதி மகாதேவன்/
வெல்க அவர்தம் முயற்சிகள்/
அவரும் சுற்றத்தினரும் நலமும் வளமும் தமிழும் நிறைந்து நீடு வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
மகாதேவன் மட்டுமல்ல, நீதிபதி ஆதிகேசவலுவும் இவ்வழக்கை உசாவியவர்,
தமிழர்க்குப் பல சமயங்கள் உள்ளன.
நீதிபதி ஆதிகேசவலுவிற்கும் பாராட்டுகள். செய்தியைத் தெரிவிததமைக்கு நன்றி. செய்தியிதழ்கள் அடிப்படையிலும் முன்னவர் திருக்குறள் தொடர்பான தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையிலும் இக்கட்டுரை எழுதப்பெற்றது. தமிழுக்காகக் குரல் கொடுக்கும் நீதிபதி யாராயினும் அவருக்கு நம் பாராட்டுகள்.
அன்புடன்
ஆசிரியர், அகரமுதல