தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு
தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்
கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார்.
06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
நேற்று (24.08.2022) மாண்புமிகு முதல்வரால் தமிழ்ப்பரப்பரைக்கழகம் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழ்ப்பரப்புரைக் கழகம் தொடங்க வேண்டும் என்பது தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் அவர்களின் கனவு.
பரப்புரைப்பணியைப் பேராசிரியர் சி.இலக்குவனார் தம் மாணவப் பருவத்திலேயே தொடங்கி விட்டார். புலவர் பட்டத்திற்குப் பயிலும் பொழுதே விடுமுறை தோறும் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள்தோறும் சென்று தமிழ்மொழியின் சிறப்புகளையும தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலான இலக்கியங்களின் சிறப்புகளையும் மக்களிடையே பரப்பி வந்தார். தமிழ்ப்புலவர்களே தொல்காப்பியம் குறித்து மிகுதியும் படிக்காத காலத்தில் சங்கத்தமிழைத் தமிழ்ப்புலவர்கள் மக்களிடையே கொண்டு செல்லாக் காலத்தில், திருக்குறளை வாழ்வியல் நூலாக மக்களிடையே பரப்பாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்போராளி இலக்குவனார் அவற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வந்தார்.
மாணவப்பருவத்தில் தொடங்கிய பரப்புரைப்பணிகளைத் தம் வாணாள்இறுதி வரை, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி, குறள்நெறிப் பரப்புரைப்பணி, தமிழ்மொழிச்சிறப்பு பரப்புரைப்பணி, தமிழ்க்காப்புப் பரப்புரைப் பணி தனித்தமிழ்ப் பரப்புரைப்பணி எனப் பரப்புரையில் ஈடுபட்டுப் பிறரையும் அவ்வாறு ஈடுபடச் செய்தார்.
தாம் பணியாற்றிய ஊர்கள் தோறும்தமிழ் அமைப்புகள் தொடங்கி இலக்கியப்பணிகளை ஆற்றி வந்த தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மதுரையில் பணியாற்றும் பொழுது 1960 இல், 1965 இல் அரியணையில் ஏறி நம்மை நசுக்கத்திட்டமிட்டு இருந்த இந்தியை விரட்ட, தமிழ்க்காப்புக் கழகம் தோற்றுவித்தார்.இதனை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தம் தொடக்கவிழா உரையில் “ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார் அவர்கள் தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் தொடங்கினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்க்காப்புக் கழகத்தின் அயராத பணியால், மக்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வு கனன்று எரிந்தது. அதன் விளைவே நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போர்; இந்தித் திணிப்பிற்குத் தடுப்பு; பேராயக்கட்சியான காங்கிரசு ஆட்சியலிருந்து விரட்டியடிப்பு; தமிழ்நாட்டில் தி.மு.க.வெற்றிக் கொடி பறந்தது.
பேரா.சி.இலக்குவனார் தமிழ்ப் பரப்பு அயலகப் பயணம் மேற்கொண்ட பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக 10.9.71 இல் பாராட்டி வழியனுப்பும் விழா நடைபெற்றது. அதில் நிறைவாகப் பேராசிரியர் நன்றி உரையாற்றினார். அப்பொழுது அவர், தமிழ்ப் பரப்புக்கழகம் நிறுவி உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். “தமிழ்க்காப்புப் பணியை இனித் திமுக அரசு மேற்கொள்ளும். நாம் தமிழ் பரப்புப்பணியை மேற்கொள்வோம்” என்றார். ஆனால், அவரது வாணாள் அதற்கு இடம் கொடுக்க வில்லை. இப்பணிகளைத் தொடங்கி முடிக்கும் முன்னரே அவரை நாம் இழந்து விட்டோம்.
எனினும் நாம் முன்னர்ப் பல நேர்வுகளில் தமிழ்ப்பரப்புரைக் கழகம் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் அறிவுறுத்திய வழியில் “தமிழ்பரப்புக்கழகம் நிறுவித் தமிழின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்க்காப்பு என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது என்று பேராசிரியர் இலக்குவனார் அறிவுறுத்தியதை அனைத்துக் கட்சியினரும் ஏற்று அன்னைத் தமிழைக் காப்பதை அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும்.” (இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி, நட்பு : 03/09/2012)
“தமிழின் சிறப்புகளை அவரவர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்ற வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.” (மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்25.06.2017) என மு.க.தாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் பொழுதே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
“மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!” என்னும் அகரமுதல இதழுரையிலும்(26.05.2019) தமிழின் சிறப்பை உணர்த்தும் பரப்புரையை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆட்சிக்கு வரும் முன்னரே தாம் ஆற்றவேண்டிய பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொண்டு அவற்றைப் படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.தாலின். அந்த வகையில் தாம் திட்டமிட்டவாறு தமிழ் வளர்சசிக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் உலக அளவிலான தமிழ் வளர்ச்சிக்கான திட்டமான தமிழ்ப்பரப்புக் கழகத்தைத் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழ் அமைப்பு என்றாலே தமிழ்ப்பகைவர்களுக்குத் தலைமையிடமும் முதன்மை யிடங்களும் கொடுப்பதே வழக்கம். அவ்வாறில்லாமல் உண்மையான தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில் என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 1071).
இன்றைக்கு அன்பரே போல்வர் பகைவர் எனத் தமிழன்பர்களாக நடிக்கும் தமிழ்ப்பகைவர்களைக் குறிக்கலாம்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 274).
இதுபோல் நடுநிலைவேடத்தில் மறைந்து வஞ்சகராகச் செயல்பட்டுத் தமிழுக்குத் தீங்கு செய்வோர் உள்ளனர்.
எனவே, மாண்புமிகு முதல்வரும் மாண்புமிகு அமைச்சரும் தமிழக அரசும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தமிழ்ப்பரப்புரைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் கொச்சை வழக்குளைப் பயன்படுத்தினாலோ தமிழ் இலக்கியக் காலங்களை வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளிக் கற்பித்தாலோ அவர்களைப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதுடன் தண்டனையும் வழங்க வேண்டும். அவர்களின் கருத்துரிமை என்றால் அதைச் சொந்தச் செலவில் பரப்பிக் கொள்ளட்டும்.
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் நிதியுதவி பெற்றுக்கருத்தரங்குகள் நடத்துவோர்களிலும் அவற்றில் பங்கேற்போர்களிலும் ஒரு பகுதியினர் செந்தமிழ் இலக்கியக் காலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உரையாற்றியுள்ளனர். இதனை இந்நிறுவன அறிஞர்களே வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். எனவேதான் இப்பரப்புரைக் கழத்தில் இவை போன்ற தவறுகள் நிகழக்கூடாது என்பதற்காக இதனைக் கூறுகிறோம்.
கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துப் பயிற்றுவிக்கக்கூடாது. கிரந்தம் தவிர்த்தே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
வேறு எந்த மொழியிலும் பிற மொழி ஒலி எழுத்துகளைக் கலந்து எழுதுவதோ பேசுவதோ இல்லை. தமிழ் இலக்கணமும் அவ்வாறுதான் கூறுகிறது. ஆனால், கிரந்தம் கலப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழைச் சிதைப்போர் பெருகி உள்ளனர். இதன் மூலமாகவாவது இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
‘காலந்தோறும் வரிவடிவம்’ என அட்டவணையிட்டுத் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இவ்வாறு எழுதினார், திருவள்ளுவர் திருக்குறளை இவ்வாறு எழுதினார் என்றெல்லாம் கற்பனைச் சிறகை விரித்துப் பறக்கின்றனர் சிலர். இவையெல்லாம் அரசு நூல்களிலேயே உள்ளன. மிகச்சில மாற்றங்கள் தவிர, நம் தமிழ் மொழியின் வடிவங்களில் எவ்வகை மாற்றமுமில்லை. எனவேதான் இலக்கண நூலார், “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” (நன்னூல் : எழுத்ததிகாரம்: 5 உருவம்: நூற்பா 95 – இலக்கண விளக்கம் எழுத்தியல்: நூற்பா 23) என்றனர். அஃதாவது தமிழ் வரிவடிவங்கள் தொன்றுதொட்டு ஒரே வடிவமுறையில் இருக்கின்றன. ஓலைச்சுவடி எழுத்துகளில் மாற்றமில்லை.கல்லாறரால் எழுதப்பெற்ற கல்வெட்டுகளில்தான் மாற்றங்கள் நேர்ந்துள்ளன. எனவே, தமிழ்வரிவ வரலாறு என்ற பெயரில் பொய்தலைவிரித்தாட இடம் தரக்கூடாது.
இவை போன்ற தீங்குகள் தமிழ்ப்பரப்புரைக்கழகம் மூலம் பரவாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்ப்பரப்புரைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் கனவை நனவாக்கிய முதல்வர் மு.க.தாலினுக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அகரமுதல ஆகியவற்றின் சார்பில் பாராட்டுகள். தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவக் கனவுகண்ட பாரதி இன்றிருந்தால் மனமுவந்த முதல்வரை வாழ்த்தியிருப்பார். நாமும் வாழ்த்துவோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல-இதழுரை
புரட்டாசி 08, 2053 / 25.09.2022
Leave a Reply