(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை‌] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி)

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙொ] 3. தமிழ்நலப் போராளி

  புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச்  சிறப்பித்தார்.தொல்காப்பியருக்கு மட்டும் அல்லாமல், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஔவையார், எனப் புலவர்கள் புகழ் போற்றும் விழாக்கள் நடத்துவதைத் தம் கடமையாகக் கொண்டு ஒழுகினார்.

 பேராசிரியர் இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்வி நிலையங்களில் புலவர் விழாக்களுடன் ஆண்டுதோறும் தமிழ் மறுமலர்ச்சி விழா என இயல், இசை, கூத்து என வகுத்து மூன்று நாட்கள் நடத்தினார். இது குறித்துப் பேராசிரியர்,

 தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமான புலவர்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படும். இருபதாம் நூற்றாண்டுப் புலவர்கள் பற்றி இவ்விழாவில் உரைகள் நிகழும். இவ் விழாக்கள் மாணர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்கப் பயன்பட்டன. தமிழ்ப் பற்றுடையோர் உள்ளங்கள் தழைத்தன

 எனக் குறிப்பிட்டுள்ளார்(என் வாழ்க்கைப் போர்). இவ்வாறு விழாக்கள் மூலம், தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ் எழுச்சி உணர்வையும் ஊட்டினார். விழாக்களுக்குப் பெற்றோர்களையும் வரவழைத்துப் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். அக்காலத்திலேயே பெற்றோர் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளை மிகுதியாக நிகழ்த்திய முன்னோடிக் கல்வியாளராகவும் திகழ்ந்தார்.

  “மக்களை வருத்தும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும் தமிழை மாய்க்கும் வேற்றுமொழிச் சோற்களின் நுழைவைத் தடுத்தலும் தமிழ் மறுமலர்ச்சியைத் தழைக்கச் செய்தலும் தமிழ் ஆசிரியர்களின் தவிர்க்கலாகாக் கடன்” (என் வாழ்க்கைப் போர்: கையெழுத்துப்படி) என முழங்கும் பேராசிரியர் தாம் அவ்வாறே முன் எடுத்துக்காட்டாகப் பணியாற்றி வந்தார். ஆதலின் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்ட தன்மதிப்பியக்கத் தொண்டராகப் பலர் கருதினர். இதனாலேயே சீர்திருத்தக் கருத்துகளையும் தனித்தமிழையும் விரும்பா மறு சாராருக்கு இவர் வேண்டாதவரானார். இது குறித்துப் பொருட்படுத்தாத பேராசிரியர், இலக்கியப் பரப்புரையுடன் “தமிழ்ச் சொற்களிருக்க வேற்றுச் சொற்களை விரும்புவதேன்?” எனக் கேட்டுத் “தமிழிலே உரையாடுக! தமிழிலே எழுதுக! தமிழிலே பெயர்களிடுக! தமிழ் தமிழ் என்று  முழங்குக!” என மக்களிடையே வலியுறுத்தித் தமிழராய் வாழ உணர்த்தினார்.

 தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின்

  பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்.

  ஏங்கவைக்கும் வடமொழியை, இந்தியினை

  எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டா.

  …            …         …                                

  கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல்

  கழறிடுக தமிழ்வாழ் கென்று!

  கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம்

   தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!

 (பாவேந்தர் பாரதிதாசன்: தமிழியக்கம்)

 என அறிவுறுத்தி வந்தார்; தாமும் தமிழ் காக்கும் கேடயமாகத் திகழ்ந்தார்.

 நன்னிலத்தில் பணியாற்றும்போது, ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என இக்காலத்திற்கேற்றவாறு மரபார்ந்த தமிழைக் கற்கும் முறை குறித்துப் பேராசிரியர் நூல் எழுதினார். இது குறித்து அவரது கருத்து வருமாறு:

  “மாணவர்கள் சிறந்தோராக உருவாதல் ஆசிரியர்களையே சார்ந்துள்ளது. நல்ல தமிழ்ப்பற்றாளராக மாணவர்கள் வெளிவருதல் தமிழாசிரியர்களையே சார்ந்துள்ளது. தமிழாசிரியர்களில் பலர் மாணவர்கள் உள்ளங்களில் தமிழ்ப்பற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தில்லாதவராகவே காலம் கழித்தனர். மாணவர்க்கும் தமிழார்வம் உண்டாகும் வகையில் தமிழைக் கற்பிக்கும் வழிமுறையை மேற்கொள்ளாது இருந்தனர். அப்பொழுது  தோன்றிய இந்தியெதிர்ப்பு இயக்கத்தால் மாணவர்களிடையே தமிழ்ப்பற்று கனல்போல் பரவத் தொடங்கியது. மாணவர்கள் தமிழாசிரியர்களை மதிக்கத் தலைப்பட்டனர்.

  தமிழ் மறுமலர்ச்சி கொள்ளத் தொடங்கியது. சூழ்நிலைக்கு ஏற்பத் தமிழாசிரியரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி தமிழாசிரியரின் பொறுப்பினை வலியுறுத்திக் கூறும் நோக்குடன் ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என்ற நூலொன்றினை எழுதி வெளியிட்டேன். கற்பிக்கும் முறை பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கில நாட்டில் ஆங்கில மொழியின் நிலையை அறிந்து, தமிழ்நாட்டில் தமிழ் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று எழுதினேன். இந்நூலுக்கு அணிந்துரை தருமாறு தலைமையாசிரியர் சாமிநாத(ப்பிள்ளையைக்) கேட்டபோது, இதனைப் படித்து விட்டுத் தமிழாசிரியர்களில் பலர் உங்கள்மீது கல் வீசுவார்கள் என்று கூறி, அதன் புரட்சித்தன்மையை வெளியிட்டார். இந்நூலுக்கு ‘ இந்து’வில் நல்ல மதிப்புரை வெளிவந்திருந்தது. அதன் பின்னர் நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல கல்வி நிலையங்கள் அஞ்சல் வழியாகப் பெற்றன.”

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்