(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ]  தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ]

3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)

 அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு):

மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும்   ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார்.

  மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர் என்ற முறையில் பொறுமை மிக்கவர்; வகுப்பறையில் மட்டுமின்றி மற்றபடியும் நல்ல மாணவர்க்கு உதவும் பண்பு அவர்பால் மிகுதியும் இருந்தது.

  மாறுபட்ட அரசியல் கருத்தினராகவும் சமுதாயக் கொள்கை யினராகவும் இருப்பினும் நன்மாணாக்கரை மதித்து நடத்திய பான்மை பாராட்டத்தக்கது. தம் கொள்கையில் மிக்க உறுதியுடையவர். தனித்தமிழ்ப் பற்று மிக்கவர் – வருணாசிரமத் தருமம் போன்றவற்றை வெறுப்பவர்.

 இத்தகைய தமிழ்நல நற்கொள்கைகளில் மாறாமல் வாணாள் முழுவதும் பேராசிரியர் இலக்குவனார் உறுதிப்பாட்டுடன் வாழ்ந்தார்.

 பேராசிரியர் இலக்குவனார் திருவையாற்று அரசர் கல்லூரியைத் தொடர்ந்து இராமநாதர் கல்விக்கூடம், குலசேகரப் பட்டினம்(16.04.44-30.10.19), ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி(01.11.44-08.08.47), வி.இ.நா.செந்திற்குமார கல்லூரி, விருதுநகர்(10.08.47-மே1952), முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளி, திருவெறும்பூர்(30.11.52-30.09.53),  சிக்கயநாயக்கர் கல்லூரி, ஈரோடு (01.07.1954-07.06.1956), தெ.தி.இந்துக்கல்லூரி, நாகர்கோயில் (11.06.56-30.04.59),  தியாகராசர் கல்லூரி, மதுரை (05.07.59-01.06.1965), மாநிலக்கல்லூரி, சென்னை (19.06.67-18.04.68), உசுமானியப் பல்கலைக்கழகம், ஐதராபாத்து (சூன் 1968-மே 1970), தெ.தி.இந்துக்கல்லூரி, நாகர்கோயில் (01.06.70-25.12.1970)  எனப் பல இடங்களில் பணியாற்றினார்.

 பேராசிரியர் இலக்குவனார், தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வகுப்புகள் நடத்தினார்; இவை தவிர, தமிழ் இலக்கியச்  சிறப்புகளை உணரவும் அறியவும் காக்கவும் தமிழ்த்தேசியரே நாம் என்பதை வலியுறுத்தவும் இந்தித் திணிப்பை எதிர்க்கவும் எல்லாத் துறைகளிலும் தமிழே தலைமை நிலையில் இருக்கவும் சொற்பொழிவுத் திட்டத்தை வாழ்நாளெல்லாம் மேற்கொண்டார். வார விடுமுறை நாட்களில் வெளியூர்களிலும் வாரநாட்களில் புறநகர்களிலும் தம் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.  இது குறித்துத் திருவாட்டி து.சுசீலா அவர்கள், தம் நிறைகலைஞர் ஆய்வேட்டில் (எம்.ஃபில்) பின்வருமாறு குறித்துள்ளார்:

  அக்காலத்தில் சங்க இலக்கியங்களைப் புலவர்களிற் பெரும் பான்மையானவர்கள் முழுமையாக அறியாதிருந்தனர் எனில் பொதுமக்கள் நிலைபற்றிக் கூற வேண்டியதில்லை. இந்நிலையில் சங்க இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தித் தமிழர் தலைநிமிர்ந்து தன்னுரிமை பெற்றுத் தன்னாண்மையுடன் வாழ்ந்த அப்பொற்காலத்தை எடுத்துரைத்துத் தமிழ் மறுமலர்ச்சிக்கு வழி கோலினார். அந்நாட்களில் வேறு எந்தப் பேராசிரியரும் இத்தகைய தொண்டினை ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியச் சொற்பொழிவுகளைப் பட்டிதொட்டி எங்கும் சென்று நிகழ்த்தித் தமிழின் தொன்மையையும் சங்க இலக்கியச் சால்பினையும் தமிழர் பண்பாட்டுச் சிறப்பையும் தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் பரப்பிய தனிப் பெருமை தமிழ்ப் பேராசிரியர்களுள் இலக்குவனார் ஒருவருக்கே உரியது.

  எடுத்துக்காட்டாக 1.1.1949 ஆம் நாளிட்ட குடியரசு இதழைக் காண்போம். பதினைந்தாம் பக்கத்தில் பின்வரும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

  சங்க இலக்கியப் பேச்சுகள்

 தோழர் சி.இலக்குவனாரின் தனி முயற்சியால் கீழ்க்காணும் இடங்களில் கீழ்க்காணும் நாட்களில் நடைபெற்றன.

    26.12.48          திருநெல்வேலி

    27.12.48          வீரவநல்லூர்

    28.12.48          கல்லிடைக்குறிச்சி

    29.12.48          கீழ்ப்பாவூர்

    30.12.48          தென்காசி

    31.12.48          விக்கிரசிங்கபுரம்

      இனி நடக்க இருப்பவை

    1.1.49      சிவகிரி

    2.1.49      மம்சாபுரம்

    3.1.49      சிவகாசி

    4.1.49      விருதுநகர்

    5.1.49      ஆலங்குளம்(சாத்தூர்)

    7.1.49      புதுவயல்

    8.1.49      இராங்கியம்

    10.1.49           பெரியகுளம்

 (தொடரும்)

 

இலக்குவனார் திருவள்ளுவன்