(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ)  தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ)

  பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தந்தை (ஈ.வெ.இராமசாமிப்) பெரியார் அவர்களுடனும் இணைந்து சொற்பொழிவுகள் மேற்கொண்டார். தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் பேராசிரியரைத் தனி ஊர்தியில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்து சிறப்பித்தார்; எத்தகைய இடர் வந்தாலும் எதிர்கொண்டு தமிழுக்காகப் போராடும் ஒரே தலைவர் எனக் குறிப்பிட்டுப் பேராசிரியர் இலக்குவனாருக்குத் ‘தமிழர் தளபதி’ என்னும் பட்டத்தையும் அளித்தார். தந்தை பெரியார் அவர்களின் வேண்டுதலால் அவர் உறவினர் ஈரோட்டில் நடத்தி வந்த சிக்கையா நாயக்கர் மாசனக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகச் சூலை, 1954 இல் பேராசிரியர் இலக்குவனார் பணியில் சேர்ந்தார்.

  ஆனால், முதல்வரின் காழ்ப்புணர்ச்சியும் தமிழ்ப்பகை உணர்வும் வல்லாண்மையும் அங்கே ஈராண்டுகளுக்கு மேல் பணி தொடர இடம் தரவில்லை. தமிழ்ப் பேராசிரியர் ஆங்கிலப் பேராசிரியர் போல் உடை உடுத்துவதா? ஆங்கிலப் புலமை கொண்டிருப்பதா? பூப்பந்தாட்டம் முதலான விளையாட்டுகளை விளையாடுவதா? பொறிஉருளை (மோட்டார் பைக்)-ஐப் பயன்படுத்துவதா? (தமிழ்ப் பேராசிரியர்களில் முதன் முதலில் பொறி உருளை ஓட்டியதைக்கூடப் புரட்சியாக அக்காலத்தில் கருதினார்கள்) என்றெல்லாம் தன் படிப்பிற்கும் பதவிக்கும் பொருந்தாத எண்ணம் கொண்டிருந்த முதல்வர் பிறரை அடக்கி வைத்ததுபோல் பேராசிரியர் இலக்குவனாரையும் அடக்க முயன்றார். விடுமுறை நாள்களில் சொற்பொழிவு ஆற்றச் செல்லக் கூடாது என்றார். வகுப்புகளில் தமிழின் தொன்மை, நுண்மை, பெருமை, சீர்மை பற்றி யெல்லாம் பேசக்கூடாது; தமிழ்ப்பற்று ஏற்படும் வண்ணம் பாடம் நடத்தக் கூடாது என்றெல்லாம் வலியுறுத்தினார். ஆசிரியர்கள் தனியாகத்தான் போக வேண்டும்; இருவராகச் செல்வதும் தவறு என்றும் கட்டுப்பாடு விதித்தார். தந்தை பெரியார் இவற்றை யெல்லாம் அறிந்து வருந்திக் கண்ணீர் விட்டுக் கல்லூரியின் தொடர்பை நீக்கிக் கொண்டார். பேராசிரியரின் பெருமையை உணர்ந்து ஆட்சிக்குழுவினர் அவருக்குத் துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க வலியுறுத்திய பொழுது முதல்வர் மறுத்துத், தான் விடுப்பில் செல்லும் பொழுது மட்டும் முதல்வர் பொறுப்பாகச் செயல்படட்டும் என்றார். பேராசிரியர் ஓய்வு நேரத்தில் மாலைப்பொழுதில் தமிழ்ப் பேராசிரியர் அத்தியப்பன், கணக்குப்பேராசிரியர் கருப்பண்ணன் ஆகியோருடன் பூப்பந்து விளையாடியதால்  மூவரும் தனக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி முதல்வர் முதலில் இம்மூவருக்கும் பணிநீக்க ஆணை வழங்கச் செய்தார்.

   நாடு விடுதலை அடைந்ததாகக் கூறுகிறோமே தவிரச் செல்வாக்குள்ள தனி மனிதர் எண்ணினால் யாருடைய அடிப்படை உரிமைகளையும் பறிக்க முடிகின்ற துயரம் இன்றும் இருக்கத்தான் செய்கின்றது. இதனால் அன்று பேராசிரியர் பணியிழந்தார். நாட்டு மொழியை அம்மொழி ஆசிரியர் மொழிமாணாக்கருக்கு அம்மொழி மீது பற்று ஏற்படும் வகையில் கற்பிப்பதும் குற்றம்  என்று சொல்லும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. ஒரு வேளை அவர் பாடம் நடத்தாமல் வாசித்து விட்டு விட்டு அவரவர்களே படித்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால் பணி இழப்பு இருந்திருக்காது.

 “தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்

 துறைதோறும் துறைதோறும்

 துடித்தெ ழுந்தே!

 புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய்

 புத்துணர்வைக் கொணர்வா இங்கே

 அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும்

 துறைதோறும் அழகு காப்பாய்!

 இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும்

 முதற்பணியாம் எழுக நன்றே ”          (பாவேந்தர் பாரதிதாசன்)

 என்னும் உணர்வினை ஊட்டுபவராக மட்டும் அல்லாமல் தாமும் முன் எடுத்துக்காட்டாக விளங்குவதால் பேராசிரியர் இலக்குவனாரால் எப்படி அடங்கிப் போக முடியும்? தமிழ்ப்பணி ஆற்றாமல் அமைதி  காக்க முடியும்? அவரது கல்விப்பணிக்கும் தமிழ்ப்பணிக்கும் கிடைத்த பரிசு மீண்டும் பணிநீக்கம்.

  தமிழ்நாட்டில் பிற மொழியினர் முதன்மையும் செல்வாக்கும் பெற்று உள்ளமையால் தமிழ் உணர்வு தங்களை வீழச் செய்து விடும் என்ற உணர்வால் அவர்கள், தமிழ் உணர்வை மழுங்கச் செய்ய முயன்று வருகின்றனர். எனவே, தாய்மொழியாம் தமிழைத் தாய்நாடாம் தமிழ்நாட்டில் உண்மையான உயர்வை உணர்த்தும் வகையில் கற்பிப்பதும் பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.  போற்றி வணங்கிப் பாராட்டப்பட வேண்டியவருக்குப் பரிசுகளாகப் பணிநீக்கங்களே தரப்பட்டுள்ளன. உலகில் எங்கும் இல்லாக் கொடுமை இதுவன்றோ? தன்னலம் கருதாப் பேராசிரியரின் துணிவான முயற்சிகளால் அந்த நிலை ஓரளவு நீங்கி உள்ளது. ஆனால், இந்நிலை முழுமையும் நீங்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இருக்கும் நாள் விரைவில் வர  வேண்டும். அத்தகைய சூழலை நாம் உருவாக்குவதே பேராசிரியர் இலக்குவனாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.

(தொடரும்)

 – இலக்குவனார் திருவள்ளுவன்