[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) தொடர்ச்சி]

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ)

  இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர்  இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி முதல்வர் பொறுப்பு வழங்கினர். வழக்கம்போல் விழாக்களும் தமிழ்எழுச்சி உரைகளும்  பொதுமக்களுக்கான இலக்கிய விளக்கங்களும் இங்கும் தொடர்ந்தன. திருவள்ளுவர் விழாவை மாபெரும் ஊர்வலத்துடன், யானையின்மீது திருவள்ளுவர் படத்தை ஏற்றி, மக்களிடையே நடத்தினார்.

  கல்லூரியில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கொணர்ந்தார். ஆனால் கல்லூரி ஆட்சிக் குழுவினருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. தாங்கள் இழுத்த இழுப்பிற்கு வருவார் என எதிர்பார்த்தால் இவரோ நேர்மைப் பாதையில்தான் செல்வேன் என்கிறாரே. மாணவர்களுக்குத் தர  வேண்டிய உதவித் தொகைகளை ஆண்டு இறுதியில் தந்தால் போதுமானது; அதுவரைக்கும் அதனை  வேறு  வகையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஆட்சிக்குழுவினர் கூற்று. யாரும் செய்யாததைச் செய்யச் சொல்லவில்லை என்பது அவர்கள் வாதம். பேராசிரியரோ பல்வேறு இடர்ப்பாடுகளுடனும் வறுமைச் சூழலிலும் பயிலும் மாணவர்களுக்கு அவர்களுக்கு எனத் தரும் அரசு நிதியை விரைவில் வாங்கி உடனுக்குடன் தருவதே முறை என அவ்வாறே செய்து வந்தார். முறைகேட்டிற்கு ஒத்துழைக்காத முதல்வர் நமக்கு எதற்கு என எண்ணிய ஆட்சிக்குழுவினர் வேறொரு தமிழ்ப்பேராசிரியரை வரவழைத்து முதல்வராக்க எண்ணினர். துணைவேந்தரோ தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பேராசிரியர் சி.இலக்குவனார் இருக்கும் பொழுது இன்னொரு பேராசிரியர் எதற்கு? அவரே முதல்வராக இருக்கட்டும் என்றார். ஆனால் முறைகேட்டிற்கு ஒத்துழைக்காதவரை நீக்குவதில் பிடிவாதமாக இருந்த ஆட்சிக் குழுவினர் பதின்நிலைப்பள்ளியின் முதல்வர் ஒருவரை இங்கே முதல்வராகக் கொணர்ந்தனர்.

 இதற்கிடையில் நேர்மைக்குக் குறுக்கே இருக்கும் இக்கல்லூரியை விட்டு நீங்கப் பேராசிரியரும் முடிவெடுத்தார். அப்போதைய தமிழக  முதல்வர் பெருந்தலைவர் காமராசர், பேராசிரியர் இலக்குவனார் தலைநகரில் பணியாற்ற       வேண்டியவர் என்னும் கருத்தினைப் பேராசிரியரிடமே வெளிப்படுத்தி உள்ளார்; ஆதலின் “சென்னைக்கு வாருங்கள் சீரிய பணியில் அமர்த்துகிறேன்” என்று முன்பு கூறியிருந்தார். எனவே, சென்னை சென்று முதல்வரைச் சந்தித்தார். எந்தப்பணியில் அமர்த்த வாய்ப்புகள் உள்ளன எனப் பெருந்தலைவர் கேட்டதற்குப் பேராசிரியர், மாநிலக்கல்லூரியின் தலைமைப் பேராசிரியர் பதவியும் தமிழ்வளர்ச்சித்துறையில் இரு பதவிகளும் ஆளின்றி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், செயலகத் துறையினர் பேராசிரியர் இலக்குவனாரின் புலமைக்கும் நேர்மைக்கும் ஏற்ற பணியைத் தேடுவதாகத் தட்டிக் கழித்ததால் முதல்வர் மீண்டும் வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினார். அவ்வாறு வாரம் ஒரு முறை சந்தித்து ஒரு திங்கள் ஆன பின்பும் பயனில்லை. எனவே, இனியும் காத்திருந்து மீண்டும் மீண்டும் சந்திப்பதில் பேராசிரியருக்கு விருப்பம் இல்லை.  இது குறித்துப் பேராசிரியர் இலக்குவனாரிடம், “காமராசர் கூறிவிட்டால் செய்யாமல் இருக்க மாட்டார். அவருடன் பலநாள் சுற்ற வேண்டும். அவருடனேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிட்டும் என்றனர்.  அவ்விதம் இருக்க இயலாது என்று ஊர் திரும்பி விட்டேன்”  என்று தம் வாழ்க்கையேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 சில நாட்கள் கழித்துக் கூட்டம் ஒன்றிற்காகப் புதுச்சேரி வந்த பேராசிரியர் சென்னை சென்றார். நேர்மைப் பாதையில் பணிநீக்கப் படுகுழிகள் அவரைத் துன்பத்தில் தள்ளியும் மன உறுதியுடனும் எதிர்காலக் கவலையுடனும் பணிக்காக அலைந்துள்ளார். இது குறித்துப் பேராசிரியர் பின் வருமாறு தெரிவிக்கின்றார்.

 “சென்னையிலேயே தங்கி என்ன பணி புரியலாம் எனத் திட்டமிட்டுப் பல்வேறு துறைகள் பற்றி ஆய்ந்தேன். புத்தகங்கள் எழுதிக் கொடுத்துப் பொருள் ஈட்டலாம் என்று கருதிப் பதிப்பகங்கள்தோறும் சென்றேன். பயிற்சிக் கல்லூரிகளில் பணிபுரியலாம் என்று பயிற்சிக் கல்லூரிகளை நாடினேன். செய்தி இதழ்களில் பணி தேடலாம் என்று செய்தி இதழ் நடத்துவோரைக் கண்டேன். காலையில் சிற்றுண்டி அருந்தி விட்டுப் பகலெல்லாம் பல இடங்கட்குச் சென்று அலைவதையே தொழிலாகக் கொண்டேன். எதிர்காலம் இருள் சூழ்ந்தது போல் தோன்றினும் யான் உள்ளம் தளரவில்லை. நேர்மையாக ஒழுகுபவர்க்கு இன்னல்தானே செல்வம் என்று அறிந்திருந்தேன்.

இன்பம் விழையான் இடும்மைஇயல்பு என்பான்

துன்பம் உறுதல் இலன்

 என்னும் வள்ளுவர் வாய்மொழி நினைவுக்கு வரும்.

 தனிமுறையில் நடத்தும் கல்லூரியாளர்கள் அறநெறிகோடி ஆசிரியர்களை வேலைவிட்டு நீக்குவதைத் தடுத்து நிறுத்தும் வழி முறை உண்டாகவில்லை. அறம்கூறவையம் சென்று முறையிடுவது என்றால் பெரும் பொருள் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே என்ற   அச்சத்தால் பெரும்பாலோர் அங்கும் செல்வதில்லை. தொடக்கக்கல்விக் கூட ஆசிரியர்க்கும்  உயர்நிலைக் கல்விக்கூட ஆசிரியர்க்கும் ஓரளவு காப்பு உண்டெனிலும் கல்லூரி ஆசிரியர்கட்கு எவ்விதக்காப்பும் இல்லை. எல்லாக் கல்வி நிலையங்களையும் அரசு ஏற்று நடத்தும் நாள்தான் ஆசிரியர் காப்பு பெற்ற நாளாகும். இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.”

 இதன்மூலம் தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்கள் பணிக்காப்பின்மை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம். இதை விட நேர்மைச் செயலாலும் தமிழ்த் தொண்டுகளாலும் தம் வாழ்க்கையைப் போர்க்களமாக மாற்றிக் கொண்ட பேராசிரியர் இலக்குவனாரின் ஈக உணர்வையும் செம்மாப்பையும் புரிந்து கொள்ளலாம். சாதிகள் அடிப்படையில் கல்விக்கூடங்கள் உருவாவதால் ஏற்படும் மன்பதை அவலம் குறித்தும் கவலைப்படும் பேராசிரியர், அதனைப்பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

 “சாதிகள் கூடாது என்று மேடைகள் தோறும் முழங்குகின்றனர். சாதிகளை அரசு ஆவணங்களில் குறித்தல் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால், சாதிகளின் பேரால் கல்வி  நிலையங்கள் தோன்ற உதவுகின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தத்தம் சாதிகள் பேரால் கல்லூரிகளை அமைத்துக்கொண்டு தத்தம் சாதி ஆசிரியர்களையே பணிக்கு அமர்த்துகின்றனர். தத்தம் சாதி மாணவர்களையே பொறுக்குகின்றனர். இவ்வகையில் அரசும் குறுக்கிடுவதில்லை. உதவியும் புரிகின்றது. இவ்விரங்கத்தக்க சூழ்நிலை என்றுதான் நீங்குமோ?”

 இன்றைக்குச் சிறுபான்மையர் உரிமை என்ற அடிப்படையில் கல்விநிலையங்கள் பெரும்பான்மை தோன்றித் தமிழரைச் சிறுபான்மையர் ஆக்கிக் கொண்டு வருகின்றன. பேராசிரியர் இலக்குவனார் கூறுவதுபோல், அரசே கல்வி நிலையங்களை நடத்தும் நிலை வர வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் அனைத்து வகையினருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தி உள்ளார். அத்தகு நிலை வரவேண்டும். அந்நாள் எந்நாளோ!

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்