[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு)

  தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க   வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார்.

தமிழ் உரிமைப்பெருநடை அணி

 குறிக்கோள்கள்

கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல்.

மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப் படித்தலின் நன்மையை எடுத்துக் கூறல்.

பேச்சிலும் எழுத்திலும் செந்தமிழையே பயன்படுத்துமாறு பொது மக்களை வேண்டுதல்.

தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கே முதன்மையிடம் அளிக்குமாறு எடுத்துரைத்தல்.

எந்த இடத்திலும் தமிழின் சமநிலைக்குத் தாழ்வு வாராது பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுதல்.

தமிழ் மறையாம் திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்து அதன்வழி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இந்திய ஒற்றுமைக்கும் உலகக் கூட்டுறவுக்கும் ஊறு நேரா வண்ணம் உயர்ந்த பண்பாட்டுடன் வாழுமாறு அறிவுறுத்தல்.

  இப் பெருநடையணி இக் குறிக்கோள்களைத்தவிர வேறு குறிக்கோளை உடையதன்று; எக்கட்சியையும் சார்ந்த தன்று. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது.

குறள்நெறி(மலர் 2 இதழ் 8): சித்திரை 1996: 1.5.65

  தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களில் இருந்தும் தங்கள் ஊர் வழியாக நடைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்புகள் வந்தன. அதற்கேற்ப முதன்மை ஊர்களை இணைக்கும் வண்ணம் நடைப்பயணப்பாதையை வகுத்து அறிவித்தார். மே 9 அன்று தொடங்கி  ஒரு திங்களில் சென்னையில் நிறைவுறும் என்றும் தெரிவித்தார். ஆளும் பேராயக் கட்சிக்கு(காங்கிரசிற்கு)ப் பெரும் அதிர்ச்சி வந்தது. தமிழ்நாடெங்கும் அறியப்பட்ட பேராசிரியராகவும் தமிழினத் தலைவராகவும் உள்ளமையாலும் இந்திஎதிர்ப்புப் போரைத் தலைமை தாங்கி நடத்திய அவர் வழிகாட்டுதலைப் பின்பற்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் உள்ளமையாலும், ‘ஆட்சியை மாற்றுவோம் வாரீர்’ என்னும் அவரின் அழைப்பால் பேராயக்கட்சி (காங்கிரசு)க்கு  எதிர்ப்பு பெருகுவதாலும் நடைப்பயணத்தைத் தடைசெய்யத் திட்டமிட்டது. முன்பு கைது செய்தும் பேராசிரியருக்கு எதிராக யாரும் சான்றுரைக்க முன்வராமையால் விசாரணையின்றி அடைத்து வைக்க எண்ணியது. எனவே, இந்தியப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ்க் கைது செய்யத் திட்டமிட்டது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்