(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)

   இவை மட்டுமல்ல, அனைத்து இதழ்களும் ஊடகங்களும் நல்ல தமிழே மக்களுக்கானது என்பதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளைத் தமிழ் அமைப்புகள் மேலும் முனைப்பாக ஆற்றி வெற்றி பெற வேண்டும். அன்று பேராசிரியர் இலக்குவனார் விதைத்த தமிழ்உணர்வு இன்றும் மங்காமல் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. அவர்கள் இப்பணியில் வெற்றி பெறுவதே நாம்  பேராசிரியருக்குப் படைக்கும் காணிக்கையாகும் என்பதை உணரவேண்டும்.

  குறள்நெறி ஆங்கில இதழுக்கு இருந்த வரவேற்பாலும் தமிழ்நாட்டில் இருந்துவெளிவரும் ஆங்கில நாளிதழ்கள்கூடத் தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை அளிக்காததாலும், பின்னர்க் ‘குறள்நெறி’/‘Kuralneri’ ஆங்கில நாளிதழ் நடத்த முடிவெடுத்தார். சில முன்முறை இதழ்களையும் வெளியிட்டார். ஆனால், எண்ணம் ஈடேறவில்லை.

 1967 பொதுத்தேர்தல் வந்தது. பேராசிரியர் இலக்குவனாரின் தமிழன்பர்கள், மாணாக்கர்கள் விருப்பத்திற்கிணங்கவும் தமிழ்ப்புலவர்கள் அரசியலில் ஈடுபட்டு மொழி இனக் காப்பில் அரசைச் செலுத்த வேண்டும் என்ற தம் விழைவிற்கேற்பவும், தேர்தலில் போட்டியிட விரும்பினார். கட்சிப்பின்னணியே வெற்றியை எளிதாக்கும் என்பதால் தி.மு.க.சார்பில் போட்டியிடலாம் எனக் கருதினார். பேராசிரியர் தி.மு.க.வில்  சேர்ந்தால் தி.மு.க. முத்திரையால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது என்றும் அதே நேரம் அவர் இப்பொழுதுபோல் கட்சி சார்பற்று இருந்தால் அவரது இயக்கப் பணிகளால் நடுநிலை  வாக்காளர்கள் ஆதரவும் தமிழன்பர்கள் ஆதரவும் பேராயக்கட்சிக்கு (காங்கிரசிற்கு) எதிர்ப்பாகச் செயல்பட்டுத் தங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் தி.மு.க. தலைவர்கள் நம்பினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க.வில் சேர்ந்தால் அவர் வெற்றி உறுதியானாலும் பிற தொகுதிகளில் பிறரின் வெற்றி இல்லாமல் போகும்; பொதுவான நிலையில் இருந்து பேராசிரியர் இலக்குவனார் பரப்புரை மேற்கொண்டால் தி.மு.க.வின் வெற்றி எளிதாகும் என்று கணித்தனர். இது குறித்துப் பேராசிரியர் இலக்குவனார் பின்வருமாறு குறள்நெறியில் எழுதினார்:

தேர்தலில் நிற்கவில்லையா?

உள்ளூரிலும் வெளியூரிலும் உள்ள நண்பர்கள் நேரிலும் கடித வாயிலாகவும் “வரும் 67ஆம் ஆண்டுத் தேர்தலில் நிற்கவில்லையா? தவறாது நின்று வெற்றி பெறவேண்டும். அதற்குரிய செயல்முறைகளில் இன்னும் ஈடுபடக்காணோமே!” என உசாவிய வண்ணம் உள்ளனர்.

 தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள யாம் சட்ட மன்றத்திற்குச் சென்றும் தமிழைக் காக்கும் ஆக்கப் பணிகளை உருவாக்கப் பெரு விருப்புடையோம். இந்தி முதன்மை இன்னும் நீங்கியபாடில்லை. இந்தி முதன்மையை அகற்றப் பெரும் அறப்போரைத் தொடங்க வேண்டியிருக்கும்போல் உள்ளது. சட்ட மன்றத்தையும் அதற்குரிய களனாகக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழ்க்காப்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள எம்மைத் தி.மு.கழகத்தைச் சார்ந்தவனென்றே கருதியுள்ளனர். தி.மு.கழகம் இந்தியை எதிர்த்துத் தமிழ்க்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளமையால் அதனை வலுப்படுத்தும் முயற்சியில் உழைத்து வருவதனால், அவ்வாறு மக்களும் அரசும் கருதுவதில் வியப்பில்லை. ஆயினும் யாம் இன்னும் தி.மு.க.வில் உறுப்பினராகவில்லை. ஏனெனில் தி.மு.க. மேலிடத் தலைவர்கள் நீங்கள் தனியே இருந்து தொண்டாற்றுவதுதான் எங்கட்கு வலிவு. எம் கட்சியில் உறுப்பினராகச் சேரவேண்டியதின்று என்று கூறினர். இக் காலத்தில் எக் கட்சியையும் சாராது தனித்து நிற்பதால் அரசியல் தொண்டு ஆற்ற முடியாது என்பதை யாவரும் அறிவர். ஆகவே தமிழ்க்காப்பு இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்துத் தொண்டாற்றிவரும் நான், அதன் சார்பிலேயே தேர்தலுக்கு நிற்க முடிவு செய்துள்ளேன். சிலர் பாராளுமன்றத்திற்கு நிற்குமாறு அறிவுரை கூறுகின்றனர்.

 பாராளுமன்றத்தில் தமிழுக்கு உரிமையில்லை. தமிழுக்கு உரிமையில்லாவிடத்தில் தமிழர்க்கு வேலையில்லை என்பது என் கொள்கை. ஆதலின் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகத்தில் இருந்து யாருமே போட்டியிடுதல் கூடாது.  தமிழுக்கு அங்கு உரிமை கிடைத்த பின்னரே தமிழர்கள் செல்ல வேண்டும். தமிழர்கள் அதனைப் புறக்கணிப்பதன் வாயிலாகத் தமிழுரிமையைப் பெறுதல் வேண்டும் எனும் கடப்பாட்டை உடையோம். ஆகவே, பாராளுமன்றத் தேர்வுக்குப் போட்டியிடாது சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட எண்ணியுள்ளோம்.

   அதுவும் யாம் தங்கியிருந்து அலுவல் புரியும் திருப்பரங்குன்றத் தொகுதியிலிருந்தே போட்டியிட  எண்ணியுள்ளோம்.

   தேர்தல் என்பது இக்காலத்தில் நம் நாட்டில், பல ஆயிர உரூபாய்களைச் செலவழிக்க வைப்பது. பொருளில்லார்க்குத் தேர்தலில் இடமே இல்லை. ஆகவே அன்பர்கள் அவரவர்களால் இயன்ற பொருளுதவியைச் செய்து எல்லா வகையாலும் உதவுமாறு தமிழின் பேரால் வேண்டுகின்றோம்.

   தனிப்பட்ட முறையிலும் கட்சிச் சார்பிலும் தமிழுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் உதவி வரும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் வெல்க! வணக்கம்.

குறள்நெறி நாளிதழ் : கார்த்திகை 1, 1997: 16.11.66 புதன்

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்