(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)  – தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங)

 

  பேராசிரியர் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்பதாக அறிவித்ததால், வாக்குகள் பிரிந்து ஓரிடத்தை இழக்க வேண்டி வரும் எனத் தி.மு.க.தலைவர்கள் அஞ்சினர். பிற இடங்களிலும் பேராசிரியர் ஆதரவின்றி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். எனவே, போட்டியிடும் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறும் தம் பரப்புரையால் நாடு தழுவிய வெற்றியைத் தி.மு.க.விற்கு ஈட்டித் தருமாறும் வேண்டினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க. தன்னை ஆதரிக்கட்டும் என்றார். தேர்தல் இல்லாமலேயே பேராசிரியரை நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினர் ஆக்குவதாகவும் அவர் போட்டியிடக்கூடாது என்றும் வேண்டினர். “தமிழுக்குச் சமஉரிமை தராத இந்தியஅரசின் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது தம் கொள்கை என்பதால், மாநிலங்களவை உறுப்பினராக உடன்படவில்லை” எனப் பேராசிரியர் இலக்குவனார் தெரிவித்து விட்டார். (பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பேரவைத்தலைவராகவும் அமைச்சராகவும் திகழ்ந்த) சேலம் க.இராசாராம் அவர்களே மூன்றுமுறையேனும் வந்து இது குறித்துப் பேசியிருப்பார். எனினும் தி.முக.தலைவர்களின் தொடர் வேண்டுகோள்களால் பேராசிரியர் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தைக் கை விட்டார். தம் சொந்தச் செலவில் வந்து பரப்புரை மேற்கொள்வதாகப் பலர் தெரிவித்த பொழுதும் மாபெரும் வெற்றி பெறலாம் என மாணவர்கள் நம்பிக்கையுடன் வேண்டிய பொழுதும் பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நலன் கருதித் தேர்தலில் போட்டியிடவில்லை என உறுதியாகத் தெரிவித்தார். இது குறித்துப் பேராசிரியர்,

“தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்க விரும்பவில்லை. அவ்வாறு நிற்பதற்குப் பலர் தூண்டியதுண்டு. தி.மு.க.வின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று அதனை வெறுக்க இடம் கொடுத்திலது. தி.மு.க.வின் வெற்றிதான் தமிழின் வெற்றி என்று கருதிப் பல  தொகுதிகட்குச் சென்று தி.மு.க.வுக்கும் கூட்டணிக்கும் சார்பாகச் சொற்பொழிவாற்றினேன்.”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

  தி.மு.க.தலைவர்களுக்கு எதிர்பாராப் பரிசாக ஆனால், உணர்வாளர்களும் மாணவர்களும் எதிர்பார்த்தபடியும் பேராசிரியர் இலக்குவனார் அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க. என்று அடிக்கடி குறித்தவாறும் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ‘ஆட்சியை மாற்றுவோம் வாரீர்’  என அழைத்துப் பாட்டரங்கம் வெளிவந்து கொண்டிருந்ததற்கு ஏற்ப, தமிழ்ப் பகையாட்சி மாற்றப்பட்டுத் தமிழ்க்  காப்பு ஆட்சி அமைந்து விட்டது. (குறள்நெறியும் ஓவு பெற்றது.)  ஆனால், அவர் உழைப்பால் அறுவடை செய்த ஆட்சிப் பரிசைப் பெற்றிருந்தும் அவருக்கு உயர்வான பதவிகள் தரவேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வினருக்கு எழவில்லை; பதவி பறிக்கப்பட்ட பேராசிரியருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள்     வேண்டினர்; தமிழ்நாட்டின் வெவ்வேறு கல்வி நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் கூட்டிப் பேராசிரியருக்கு உடனே பதவி தரவேண்டும் எனத் தீர்மானம்  இயற்றி அரசிற்குத் தெரிவித்தனர். முந்தைய பதவியைத் தருவதே சிறப்பு என எண்ணிய மூத்த தலைவர்கள் மீண்டும் தியாகராசர் கல்லூரியிலேயே அவரைப் பணிமர்த்தம் செய்ய வேண்டும் எனக் கூறினர்.  பேரறிஞர் அண்ணா, அரசிடம் பல பதவிகள்  இருக்கும் பொழுது தனியாரை ஏன் நாட வேண்டும் என்றார்.  துணைவேந்தராகவேனும் அவரை அமர்த்தி யிருந்தால் தமிழ்வழிக் கல்வியை எப் பொழுதோ நடைமுறைப் படுத்தி இருப்பார்; தமிழன்னை அகம் குளிர்ந்திருப்பாள். ஆனால்,  ஆட்சிக்குப் புதுமுகங்கள் என்பதால் எதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பட்டறிவின்மையால், தக்கன செய்யத் தடுமாறினர்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்