[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

(ஙீ‌ஙோ)

  தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார்.  பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர்  நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார். தம் மரண வாக்கு மூலம்போல் தமிழ் விடுதலை குறித்து அறிக்கை விட எண்ணினார். தாம் கூறும் அறிக்கையை எழுதுமாறு வேண்டியபொழுது அருகிலிருந்தோர் அவர் நலம் அடைந்து வருவார், ஆதலில் இப்பொழுது அறிக்கைவேண்டா என மறுத்தனர். பின்னர் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுபடவேண்டும் என அறிக்கை விட்டால் சிறையில் அடைப்பர் என்றனர். தாம் நோயாளியாக இருப்பதால் இங்கே காவலுடன் இருக்கப்போகிறேன்.  வேறு வேறுபாடு இருக்காது என்றார்.  சிறையில் அடைத்தாலும் சிறையில் உயிர் போவதால் பிறருக்கு எழுச்சியாவது ஏற்படும் என்றார். ஆனால், அவரது அறிக்கையைப் பின்னர் எழுதலாம் என ஒத்திப் போட்டதால் அவர் கருதிய கருத்துகள் வெளிவராமல் போயிற்று.

  இதற்கிடையில் பேராசிரியர் இலக்குவனாரின் உடல்நலக்கேடு அறிந்து கலைஞரும் இனமானப் பேராசிரியரும் சென்னைக்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டினர். அதற்கான ஏற்பாடுகளுக்கு அவர்கள் முன் வந்தாலும் மதுரை மருத்துவர், மதுரையிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். பேராசிரியர் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனை இயங்கும் தெருவில் முதல்வர் கலைஞர் உரையாற்ற வந்தார். அப்பொழுது தம்மைக் காண அவர் வருவார் எனப் பெரிதும் பேராசிரியர் இலக்குவனார் நம்பினார். ஆனால், அவர் வரவில்லை. அப்படி வராமல் போனது பெரிதும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பேராசிரியர்  இலக்குவனாருக்கு அளித்தது. இந்த அதிர்ச்சி அவர் உடல்நிலையில் சீர் கேட்டை உண்டாக்கிற்று. இதுவரை அவர் உடலில் உறங்கிக் கொண்டிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக விழித்து எழுந்து அவரை வாட்டின. ஒரு நோய்க்குரிய மருந்து மற்றொரு நோய்க்கு ஒவ்வாமையாக மாறியது. வாழ்க்கை முழுவதும் போராடிய பேராசிரியர் வாழ்வின் இறுதியில்கூட நோயுடன் போராடியே உலக வாழ்வை (ஆவணி 18, தி.பி.2004 / செட்டம்பர் 03, 1973 அன்று) நீத்தார். ஓயாத உழைத்த உலகப் போராளி மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். தமிழுலகம் அழுதது.

“இந்தியை எதிர்க்கு முன்பே ஏனைய மொழிக்க லப்பைச்

 சிந்திய தமிழ்வ ளர்ப்புச் செயலிலக் குவனார்க் காணோம்

 .. ..  ..

 பல்கலைக் கழக ஆட்சிப் பதவியின் தகுதி யெல்லாம்

 மல்கிய புலவ ரேனும் மதுரையில் ஏமாறுண்டார்

 .. ..  ..

 இந்தியை எதிர்த்து வீழ்த்தி இருந்தமிழ் மீட்டுக் காக்கும்

 செந்தமிழ்ப் படையின் மானச் செம்மலை இழந்தோம் என்போம்

..                   ..                    .. ”

என மொழி ஞாயிறு பாவாணர் அழுது அரற்றினார்.

  பேராசிரியர் இலக்குவனார் கனவு கண்ட ஆட்சி அமைந்தும்கூட அவரின் தமிழ்க்கனவுகள் நனவாகாமலேயே கனவுருவாய் மாறிவிட்டார். தமிழர்களின் நீடுதுயிலை நீக்கப் போராடிய உலகப் போராளியை நீடுதுயில் தழுவிக் கொண்டது. ஆரிய நோயைப் போக்கிய மன்பதை மருத்துவர் தம் நோயைக் கவனிக்காமையால் நோய்க்கிரையானார். தமிழ்த்தாய் தன் தவமகனை அழைத்துக் கொண்டாள்.

இந்நிலை ஒருவர் உண்டோ இலக்குவ னாரை ஒப்பார்

 இன்னலே தமிழ்க்கு நேரில் இன்னுடல் ஈய வல்லார்

என்னும் பாவாணரின் வரிகளே, பாரில் உள்ளோரின் அவலக்குரல் ஆனது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்