தமிழ்ப் புலவர்கள் வடசொற்கலப்பைத் தடுத்தனர் – பரிதிமாற்கலைஞர்
பௌத்தர் தலையெடுத்த பொழுது தமிழ்ப் புலவர்கள் வடசொற்களைத் தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர்.
பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கடினமாய் விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்திலே தான் செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந்தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம்
பரிதிமாற் கலைஞர் : தமிழ் மொழியின் வரலாறு
Leave a Reply