(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும் – தொடர்ச்சி)

3. வள்ளலாரும் சீர்திருத்தமும்


[இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை. திருவொற்றியூர்]

சகோதரிகளே! சகோதரர்களே!!  


யான் இப்பொழுது பல அழைப்புகளை மறுத்து வருகிறேன். ஆனால் இந்த இராமலிங்க சுவாமிகள் சமாசத்தார் அழைப்புக்கு மட்டும் இணங்கினேன். இச் சமாசம் காலஞ்சென்ற தலைவர் கா. இரா. நமச்சிவாய முதலியாரின் உடன் பிறந்தார் திரு. கா. இரா. மாணிக்க முதலியார் தலைமையில் நடைபெறுவது. இத்தலைமை என்னை இணங்கச் செய்தது. திரு. சாமராச முதலியார் புதல்வர் இராமலிங்கம், திரு. கந்தசாமி முதலியார் புதல்வர் இராமலிங்கம் ஆகிய இரண்டு இராமலிங்கங்களின் இளமை என்னை இத்தொண்டாற்ற ஒருப்படச் செய்தது. இளமையில் எனக்குத் தணியாக் காதல் உண்டு. இராமலிங்க அடிகளின் நற்செய்தியை (Gospel – சுவிசேசம்) பரப்பும் பொறுப்பு இளைஞரிடத்தில் இருக்கிறது என்பது எனது நம்பிக்கை. இரண்டு இராமலிங்கங்கள், இருபது இராமலிங்கங்களாய், இரு நூறு இராமலிங்கங்களாய், இரண்டாயிரம்  இராமலிங் கங்களாய் பெருகின் வள்ளலாரது அருட்டிறம் நன்முறையில் வளர்வதாகும்.சில வாரங்கட்கு முன்னர், திரு. சுந்தரனார் என் தலைமையில் ஓர் அரிய சொற்பொழிவு சென்னையில் நிகழ்த்தியது உங்களுக்குத் தெரியும். அக் கூட்டத்தை நடாத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கும் மூல காரணமாக நின்றது முன் இராமலிங்கத்தின் இளமையே. இவ்விளைஞர் முதன் முதல் என்னைக் கண்டபோது “காற்றாலே புவியாலே” என்னும் அருட்பாவுக்கு உரை கேட்டனர். இருள் சூழ்ந்த இக் காலத்தில் ஒரு மாணாக்கர் அதிலும் ஒரு கல்லூரி மாணாக்கர் ஆழ்ந்த பொருளுடைய ஒரு பாட்டுக்கு உரை கேட்கின்றாரே என்று என் உள்ளம் இன்பக் கடலாடிற்று. பின்னே உரையாட உரையாட அவர் அருட்பா மயமாக விளங்கியதைக் கண்டேன். அவர் தம் பேச்சு அவர் தம் தந்தையாரைக் காண என்னை உந்தியது. தந்தை சாமராசு முதலியாரைக் கண்டு பேசித் தோழர்களாயினேம்.
 
சில ஆண்டுகட்கு முன்னர் யான் பேசிய முறைக்கும் இப்போது பேசுகின்ற முறைக்கும் வேற்றுமை உண்டு. பழைய பேச்சு ஒலிபரப்பியை விழைந்ததில்லை; இப்போது விழைகிறது. மெலிந்த உடல்; நலிந்த குரல்; முதுமைத் தோற்றம். என் செய்வேன்?
சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இராசாசி மண்டபத்தில் ஒரு கூட்டம் கூடியது. அதில் சீர்திருத்தப் பெரியார் வீரேசலிங்கம் பந்துலுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அவ்விழாக் கூட்டத்தைத் திறந்து வைத்தவர் சர்.சி. இராமலிங்க ரெட்டியார். அவர் தமது பேச்சில் உலகப் பெரியார் சிலரையும் வட இந்தியப் பெரியார் சிலரையும் குறிப்பிட்டனர். ஆனால் நம் வள்ளலாரைக் குறிப்பிட்டாரில்லை. என்ன? இராமலிங்கம் இராமலிங்கத்தை மறந்தனர் என்பது என் நெஞ்சம் நினைந்தது. தவறு திரு. ரெட்டியார் மீது இல்லை; தமிழராகிய நம்மீதே உண்டு. தமிழராகிய நாம் இராமலிங்க அடிகளை அணித்தே உள்ள ஆந்திரத்திற்கும் அனுப்பினோமில்லை. குறை யாருடையது?உலக வரலாற்றை நோக்கினால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல பெரியோர்கள் தோற்றம் புலப்படும். அவருள் குறிக்கத்தக்கவர் பிளாவட்சுகி அம்மையார், தால்சுடாய், காரல்மார்க்குசு, இராசாராம் மோகன் இராய், தயானந்தர், இராமகிருட்டிணர் முதலியோர். இதே காலத்தில் வாழ்ந் தவர் நம் இராமலிங்க அடிகளாரும்.

இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவில் அவர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. வள்ளலார் அருட்பா அவ்வளவில் கட்டுப்பட்டு நிற்க வில்லை. பண்டைக் காலச் சான்றோர் உள்ளக் கிடக்கைகளும் அருட்பாவில் உண்டு.


வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யானொருவனன்றே


என்பது, வள்ளலார் திருவாக்கு. வள்ளலார் ஞானியார் என்பது மட்டுமல்ல அவர் குரு-தீர்க்கதரிசி-நபி, சித்தர். “தொல்காப்பியர் முதல் இராமலிங்கம் வரை” என்னும் தலைப்பு வேய்ந்து ஒரு நூல் எழுத வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்த காலம் உண்டு. இப்பொழுது அத் தொண்டுக்கு உரிய தகுதியை எனது உடல்நிலை தகைந்திருக்கிறது. மறுபிறப்பிலாதல் அத் தொண்டாற்றும் பேறு எனக்குக் கிடைக்க ஆண்டவன் அருள் புரிவானாக! இந்நாளில் இத் தொண்டாற்றும் ஆற்றல் வாய்த்தவர் ஒரு சிலர் தமிழ் நாட்டில் வதிகின்றனர். அவருள் ஒருவரைச் சிறப்பாக இங்கே குறிக்கின்றேன். அவர் எனது கெழுதகை நண்பரும் உழுவ லன் பரும் ஆன ஆ. பாலகிருட்டிணப் பிள்ளை என்பவர். அவர் ஆராய்ச்சியாளர் மட்டுமல்லர்; அன்பர் திருவருட்பாவின் உட்கிடக்கையை உணரும் அன்பும் ஆராய்ச்சியும் பெற்றவர்.


வள்ளலார் ‘வாழையடி வாழையென’ அருளியதை ஊன்றி ஆய்தல் வேண்டும். அத்திருவாக்கிலே ஒருவித மரபு தொன்றுதொட்டு இடையீடின்றி வளர்ந்து வருதல் காணலாம். அம்மரபு எது? அது அகிம்சா தரும மரபு. இதற்குக் கால் கொண்டவர் விருசபதேவர். அவரது காலம் தெரியவில்லை. அது சரித்திர காலம் கடந்தது. பதினாயிரம் ஆண்டு கட்கு முன்னரே அவர் தோன்றியவர் என்பது நன்கு தெரிகிறது. அவரே முதன் முதல் உலகத்திற்கு அஹிம்ஸையை அறிவுறுத்தியவர். இவ் அகிம்சை காலதேச வருத்தமானத்துக்கு ஏற்றவாறு பல பெரியோர்களால் வளர்க்கப் பெற்றது. இந்நாளில் மக்கள் கூட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவ்விழுமிய அறத்தை ஓம்பினர். அருட்பா என்னும் கனியினின்று வடியும் சாறு கொல்லாமை என்னும் பேரறமே யாகும்.

இக்கால உலகம் அரசியலைப் பெரிதும் குறிக் கொண்டு நிற்கிறது. அருட்பாவில் அரசியல் உண்டா? உண்டு என்றே அறுதியிட்டுக் கூறுவேன். சில திங்கட்கு முன்னர் இம்மேடையிலேயே என்னால் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அது அருட்பாவிலுள்ள ‘மழவுக்கு மொருபிடி சோறளிப்பதன்றி’ என்ற பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தது. அதில் மார்க்குசி யத்தைப் புகுத்தி விரிவுரை பகன்றேன்.

மார்க்குசியத்திற்கும் நமது இராமலிங்கீயத்திற்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? என்று சிலர் ஐயுறலாம். ஒற்றுமை உண்டு என்பது யான் கண்ட உண்மை. மார்க்குசியம் இராமலிங்கீயத்திற்குள் அடங்கும். இராமலிங்கீயம் மார்க்குசியத்தைக் கடந்து, விஞ்சி நிற்கும். இதை விரித்துப் பேசின் உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை கொண்டவன் ஆவேன். மூன்று சொற்பொழிவுகள் நிகழ்தல் வேண்டும்; என் செய்வேன் ; மன்னிக்க!


மார்க்குசு, காவல்துறை அற்ற-சேனைகள் அற்ற அரசற்ற ஓர் உலகைக் காணவே முயன்றார். வள்ளலாரும் அத்தகைய உலகைக்காணவே உருகி உருகி நின்றனர். அச் சீரிய உலகைப் படைக்கும் முறையில் இருவர்க்கும் வேற்றுமை உண்டு, வள்ளலார் அகிம்சையை அருளை- கொல்லா மையை அடிப்படையாகக் கொண்டு அன்பு உலகைப் படைக்க ஆண்டவனை வேண்டினர். இது மார்க்குசியத்தில் இல்லை.

கருணையிலா ஆட்சி கடுகி யொழிக
அருணயந்த நன்மார்க்க ராள்கதெருணயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று
நினைத்து, எல்லோரும் வாழ்க இசைந்து.”


இத் திருவாக்கை எண்ணுக; நினைக்க; உன்னுக; முன்னுக!

” கருணையில்லா ஆட்சி கடுகி யொழிக” என்பதன் கருத்து என்னை? அருளாட்சி மலர்தல் வேண்டும் என்பதன்றோ? அருளாட்சி என்பது யாது? கொலையற்ற ஒன்று என்று சொல்லவும் வேண்டுமோ? அதுவே காவல்துறைசேனைஅரச அங்கம் முதலியன இல்லா ஒரு பெரும் நல்லாட்சி அற ஆட்சி!


அருளாட்சி வேண்டும். அந்த அருளாட்சியை ஒருவர் பெற்றார். அருளாட்சி உலகத்திலேயே பரவ வேண்டும். அருளாட்சி வந்தே தீரும். இரண்டு வாரத்துக்கு முன் ஒரு அமெரிக்க பத்திரிகையைப் படித்தேன். அதிலே ஒரு புதிய ‘Bomb’ கண்டு பிடித்திருப்பதைக் கண்டேன். எனக்கு அது பாசு பதாத்திரத்தை நினைவூட்டியது. பாசுபதாத்திரம் செலுத்தியவர் கைக்கே மீளுமென்பது புராணம்.

(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்