(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும் – தொடர்ச்சி)

இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர்

[இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை, தொடர்ச்சி, திருவொற்றியூர்]

இந்தக் குண்டு (பாம்) வெம்மையற்ற ஓர் இடத்திலே வைக்கப்பெறும். அது ஏவப்பெறின் கூட்டம் கட்டமாகச் செல்லும். சூடுள்ள இடமெல்லாம் சென்று அழிக்கும். அது தண்மை ஊட்டினாலன்றி ஒழியாது. அது வைக்கப்பெறுமிடம் தண்மை உள்ள இடம். அத்தகைய குண்டுகளில் ஒரு நூறு ஏவப்பெறின் உலகம் அழியும். மனிதனிடம் உள்ள சூட்டையும் அந்தக் குண்டு பயன்படுத்திக் கொள்ளுமாயின் மனித வருக்கமே அழிவது ஒருதலை. இது நாகரிகமா? அல்லது அநாகரிகமா? அமைதிக்கும், ஒழுங்குக்கும் வழிகோலியவர் எத்துணை பேர்? மக்கள் மனத்தை மாற்றி அருள் நெறியில் செலுத்த ஆண்டவன் அவ்வப்பொழுது அன்பினால் கருணையினால் அடியார்களை அனுப்பி வைக்கிறார், அவர்கள் ஆற்றிய போதனையும் சாதனையும் விட்டு விட்டோம். மீண்டும் கருணையில்லா ஆட்சிக்குக் கடிது செல்லுவோம். முதல் வரியிலேயே அடிகளார் “ஒழிக” என்றார். அது அப்பாட்டின்-Destructive Element ஆகும். அடுத்த வரியில் ஆக்கவேலைக்குரிய குறிப்பைக் காண்கிறோம். (Constructive aspect).

சரித்திரக் காலத்திற்கு முன்னர் மக்கள் ஆளப் பட்டதாகத் தெரியவில்லை. அரசாங்கமே இருந்ததில்லை. மக்களின் சிறப்பியல்பு சாந்தம். இன்று கோபத்தை மனிதன் அடக்கவேண்டும். நாகரிகம் — கலை அரசாங்கம் முதலியன மக்களின் மன நிலையைக் கெடுத்து விட்டன. மறியல் குணத்தை உடலாக, கூடாக வைத்துக் கொண்டு அருளால் அதனை உயிர்த்து நம் நாட்டிற்கு வேண்டிய வகையை அமைத்துக் கொள்ளவேண்டும். அங்ஙனம் அமைத்துத் தந்தார் நம் – வள்ளலார். அருட்பா-மருட்பா வாதம் நிகழ்ந்த காலத்தில் அருளைப் பற்றியில் பாடிய பாடல்கள் எனவும் அருளைப்பெற விரும்பிய பாடல்கள் எனவும் வெவ்வேறு வகைகளில் பொருள் கண்டனர். அருளை இறைஞ்சிப் பாடப் பெற்ற பாக்கள் எனின் பொருந்தும்.

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு பாடல்களே. இக்குறிப்பைப் பாட்டியல் தமிழ் உணர்த்துகின்றது. படைப்பையெல்லாம் பாடல்களாகப் பாடியவன் தமிழன். பாடியவர்களெல்லாம் வாழந்தனரா? அவர் பாக்கள் வாழின் அவர்கள் வாழ் கின்றனர். (Shelly lives) செல்லி வாழ்கின்றான். பாட்டியல் சிறப்பைத் தேவாரத்திலே காணலாம் ; திருவாசகத்திலே காணலாம் ; தாயுமானாரிலும் காணலாம்.

தமிழர் இயல்பு பாட்டுப் பாடுவது. தமிழர் கவிதையில் திளைத்தனர். வள்ளலார் திருவொற்றியூரில் கண்டகாட்சியை அழகாக அமைக்கின்றார். அடியார் கூட்டத்தை வருணிக்கும் ஓர் வருணனை உய்த்து உணரற்பாலது. கவிதைபோல் சாந்தம், என்று சொல்வது போதாதென்றெண்ணி “தண்டமிழ்க் கவிதை போல் சாந்தம்” என்றார்.

பாட்டால் பணிசெய்வது தொண்டில் மிகச் சிறந்தது. சாந்தத்தின் தனிப் பெருமையைக் காந்தி அடிகளின் வாழ்க்கையிலிருந்து ஒரு குறிப்பின் வாயிலாகக் காண்போம். அகிம்சா மூர்த்தி காங்கிரசு மாநாட்டின் தலைவராக வீற்றிருக்கிறார். மோதிலால் நேருபோன்ற தலைவர்கள் அங்குக் குழுமியிருந்தனர். கூட்டத்தினரிடையே குழப்பம் நேரிட்டது. குழப்பம் சண்டையாக முற்றியது. அவரவர் கைக்குக் கிடைத்த நாற்காலியை எடுத்து ஒருவர் மேல் ஒருவர் வீசலானார்.

இக்காட்சியைக் காந்தியார் கண்டார். உடனே இராமபச னை செய்யத் தொடங்கினார். கைபிடித்த நாற்காலிகள் விடுபட்டுப் பசனை செய்யக் கூம்பின. எந்தவிதத்தில் நிலைமை சமாளிக்கப்பட்டது என்பதை நோக்கின் சாந்தத்தின் தனிச்சிறப்பும் பாட்டின் பண்பும் விளங்கா நிற்கும்.

சீர்த்திருத்தம் நிரம்பவேண்டும். நான் மரணத்திற்கு அஞ்சவில்லை!

தந்தையார் போயினர் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியா லேழை நெஞ்சே
அந்தணாரூர் தொழு துய்யலா மையல் கொண் டஞ்சல் நெஞ்சே'”

அருணகிரியாரும் அந்தகனைவென்ற குறிப்பும் திருப்புகழில் காணக்கிடக்கிறது.

மரணபயம் தவிர்க்க தவிர்க்க!” எனவும், ” என் மார்க்கம் சிறப்பொழிக்கும் சன்மார்க்கம் தோழீ” எனவும் பாடி மரணபயம் தவிர்தலுமாம் என்பதை பரக்கப் பேசினவர் நம் இராமலிங்கர். இதுவே வள்ளலாரின் சுவிசேஷம்.

எத்தகைய மாற்றமும் ஒரு புரட்சியால் தான் ஆகும். புரட்சியெனின் சரித்திர மாணவர்களுக்கு (Bloody Revolution) இன்னோரன்ன இரத்தக் களரிகள் தான் நினைவிற்கு வரும். இங்கு நான் கொள்ளும் பொருள் இரத்தக்களரி அன்று. மாற்றம் காணவேண்டுவனவற்றின் நடுவே நின்று மெல்ல மாற்றம் காணுதலே புரட்சியெனக் கொள்ளலாம். இஃது, அறப்புரட்சி. இந்தக் களரியின் வாயிலாக மாற்றம் கொணர்வது மறப்புரட்சியாகும். அது வேண்டுவதில்லை! அத்தகைய அறப்புரட்சிக்கு அடி கோலியவர். பல பாக்கள் – அம்முறையில் மாற்றம் வரவேண்டிப் பாடியவர் நம் வள்ளலார் ஆவர். நம்முடைய இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர்.

மறநெறி நின்றவரை-அறத்தாற்றில் அறவழியில் -அருள்நெறியில் உய்த்தவர் இராமலிங்கர். அறப்புரட்சி – அருட்புரட்சி – அன்பால் – அறிவால்-கருணையால் அமைதல் வேண்டும்.

சாதிப்பித்தை, சமயப்பிணக்கை எவ்வாறு ஒழித்தல் வேண்டுமெனின் மதப்பித்தரிடை–சமயிகள் இடைசென்று வள்ளலார் கூறியபடி புறச் சமயத்தலைவர் பெயர்களைக் கூறி எம்மதமும் சம்மதம் என்பதைப் புலப்படுத்தி வேற்றுமையிடையில் ஒற்றுமைக்கு வழிகோல வேண்டும். வள்ளலார் இக்கருத்தினைக் கூறியது குறிப்பிடத்தக்கது.

“அருகர் புத்தராதி யென்பேன் அயனென்பேன் நாரா
யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவனென்பேன்
பருகு சதாசிவ மென்பேன் சத்திசிவ மென்பேன்
பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரமமென்பேன்”

அடுத்து வள்ளலாரின் தொண்டு உள்ளத்தைக் காண்பேன்.

“எத்துணையும் பேதமுறாதெவ்வுயிருந் தம்முயிர்போ லெண்ணியுள்ளே
ஒத்துரிமை யுடையவரா யுவக்கின்றார் யாவரவருள்ளந் தான்சுத்த
சித்துருவாயெம் பெருமானடம் புரியுமிடமென நான் தெரிந்தேனந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்ததாலோ.”

இந்தப் பாட்டில் எல்லாம் உண்டு. வள்ளலார் ஒரு புத்துலகச் சிற்பி. ஏனையோரும் புத்துலகங்களைக் கண்டுள்ளனர். அவர்கள் கண்ட வகைக்கும் வள்ளலார் வகுத்த முறைக்கும் வேறுபாடு உண்டு. அத்தகைய வள்ளலார் கண்ட புதுமை உலகத்தைப் பத்து ஆண்டுகளில் தோற்றுவித்துவிடலாம். இது காறும் உலகவனாய் நின்று பேசினேன். இனித் தென்னாட்டானாய் நின்று பேசுகிறேன். ஆசியாவிற்கு-ஏன்? உலகத்திற்கே தமிழகம் வழிகாட்டியாய் நிற்கும். அந்நிலையில் இந்தியாவுக்கு வழிகாட்டி தமிழ்நாடு.

திரு. சி.ஆர்.ரெட்டி அவர்கள் இராமலிங்கா ரெட்டி என்ற பெயர் பூண்டிருந்தாலும் இராமலிங்கரை அறியாத குறை நம் குறையே. உலகத்தாருக்கு இராமலிங்கரின் பெருமையை எடுத்துரைக்க வேண்டிய கடமை இளைஞர்களாகிய உங்களுக்கே உரியது. இராமலிங்கர் கண்ட புத்துலகத்தை அருட்பாவில் காணலாம். இராமலிங்கரே அருட்பா. தமிழனது செந்நீர், தமிழனின் தமிழ்க் குருதி, தமிழ்ரத்தம் ஒவ்வொரு பாடலிலும் ஊடுருவி நிற்கின்றது.

இத்துறையில் தமிழர் ஆற்ற வேண்டிய பணி மிகப்பெரிது. தோன்றியிருக்கும் சங்கங்கள் யாவும் இணைக்கப்பட வேண்டும். இணைந்தாலன்றிச் சக்தி பிறக்காது.

ஒன்று படுக-அருட்பா சாதி மதமற்ற ஒரு நூல். அதைப் பரப்புதல் வேண்டும். இதைச் சங்கங்கள் சிறந்த குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். உழைப்பால் பண்டைய நிலை எய்துவோம். வள்ளலார் அருளாட்சி பெற்றேன் என்று கூறி அவர் பெற்ற இன்பத்தை வையகம் பெறுதல் வேண்டும் என்னும் பேரவாவினால் அதனை அறையப்பா முரசு என்றார். தமிழர்கள் எல்லாரும் ஒற்றுமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பொறாமை யொழியின் தமிழர் ஒன்றுபடுதல் ஒரு தலை. வள்ளலார் காட்டிய வழிநின்று உய்ய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்போம்.

வள்ளலார் கண்ட சத்திய ஞானசபையும் சத்திய தருமச் சாலையும் தாம் கண்ட கனவைச் செயலில் கொண்டுவர முயன்றதின் சின்னங்களாகும்.

எல்லாரும் ஒன்று படுங்கள். நான் இது காறும் சொல்லிய வற்றில் கருத்து வேற்றுமை இருக்கலாம். கொள்ளத் தக்கனவற்றைக் கொண்டு தள்ளத்தக்கன தள்ளுமின்.

(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்