தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன்.
(மாசி 24, 2046 / மார்ச்சு 08,2015 தொடர்ச்சி)
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]
பெயர்ப் பலகை:-
பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்; அல்லது முதலில் தமிழில் 5 பங்கு, அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு, தேவையெனில் பிற மொழியில் 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என அரசாணை உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால் பேரளவிலான விளம்பரப் பலகைகளில்(Hoardings) 95% கற்கும் மேலாகத் தமிழ் இல்லை. ஒளி விளம்பரங்களிலும் தமிழ் இல்லை. (இங்கு நாம் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். வாங்குவோரில் பெரும்பான்மையர் தமிழராக இருக்கின்ற காரணத்தால் அயல் மாநிலப் பரிசுச் சீட்டுகளிலும், அயல் மாநிலக்கள்ளுக்கடை, மதுவகை விற்பனையகங்களிலும் தமிழ் இடம் பெறுகின்றது. ஆனால் தமிழ்நாட்டு விளம்பரப் பலகைகளில் தமிழ் இல்லையென்றால் வாங்குதிறன் கொண்டோர் தமிழர்களில் குறைவாகவே இருக்கின்றார்கள் போலும்.)
அரசாணை பிறப்பிக்கப்பட்ட பொழுது சில முன்னேற்றம் இருந்தாலும் பின்பு பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் இல்லை. இன்னும் சிலர் சிறிய அளவில் தமிழில் மேலே எழுதி வந்துள்ளனர். மற்றும் சிலர் சமமாக எழுதி வைத்துள்ளனர். ஒரே பலகையில் இல்லாமல் தனித்தனியே தமிழ், ஆங்கிலப் பலகைகள் உள்ள நிலையும் மிகுதியாக உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையினர், தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள் உட்படப்பெரும்பாலோர் வீடுகளில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் இல்லை. (காரணம் கேட்டால் சொந்தப் பணத்தில் எழுதி மாட்டியது என்கிறார்கள். அரசுச் செலவாயின் ஆணையைப் பின்பற்றி விடுகிறார்களாம்.) திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் போன்றவற்றில் ஒருபுறம் தமிழும், மறுபுறம் ஆங்கிலத்திலும் உள்ளன. பாண்டியன், சேரன், சோழன், முதலான நல்ல பெயர்கள் சூட்டப்பட்டிருப்பினும் முகப்பில் ஆங்கிலச் சுருக்கங்களே இடம் பெறுகின்றன. தனியார் பேருந்துகளிலும் கல்விக்கூடப் பேருந்துகளிலும் பெரும்பான்மை தமிழில் இல்லை. பள்ளிப்பேருந்து, கல்லூரிப்பேருந்து என்பனகூடத் தமிழில் இல்லை. பெரும்பாலான கல்விக்கூடப் பெயர்ப் பலகைகள் தமிழில் இல்லை. ’நில், கவனி, புறப்படு’ முதலான பல காவல் அறிவிப்புகள், முழக்கங்கள் தமிழில் இல்லை. போக்குவரத்து விதிகள் பல இடங்களில் தமிழில் எழுதி வைக்காததற்குக் காரணம். தமிழறிந்தோர், போக்குவரத்து விதிகளை நன்கு அறிந்திருப்பர் என்ற எண்ணமா? ஆங்கிலம் அறியாதோர் இருந்தென்ன? இறந்தென்ன? என்ற அலட்சியமா? தெரியவில்லை. போக்குவரத்துத் தடுப்பு விளம்பரதாரர் பெயர்கள், அல்லது பொதுவிடங்களில் அமையும் நிழற்குடை, மணிக்கூண்டு முதலிய விளம்பரதாரர் பெயர்கள் தமிழில் இல்லை. திறப்புவிழா தொடர்பான பொறிப்புகள் தமிழில் இல்லை. திருமணவிழா, பிற விழா நிகழ்ச்சிகளில் மின்னொளி வரவேற்பு, வாழ்த்து, மணமக்கள், பெயர்கள் மேடையிலுள்ள பதாகை, முதலிய எவற்றிலும் தமிழ் இல்லை. இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் அகழ்வாராய்ச்சி மூலம் இவை கிடைக்கப் பெற்றால், தமிழ் நாட்டில் தமிழே இக்காலத்தில் இல்லை என்னும் முடிவிற்குத்தான் வர இயலும் எண்ணுமளவிற்கு ஆங்கிலமே நீக்கமற நிறைந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் அரசாணை தேவைதானா? அரசாணை இருந்தும் செயல்படாது, உணர்வும் இல்லாது நம் மக்கள் இருக்கும் பொழுது, ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்துக் கனவு காண்பது கூடத்தவறல்லவா?
பெயர் சூட்டல்:-
தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்கள், முதலியனவற்றிற்குப் பெயர் சூட்டும் பொழுது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் தமிழ் வளர்ச்சித்துறையினர் ஒப்புதலைப் பெறுவதில்லை. அவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையை மாற்றித் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆணைபிறப்பிக்கப்பட்டும் பின்பற்றுவதில்லை. எனவே, எல்லாம் அயல் மொழியாய் மாறிவருகிறது. ஊர்தோறும் பதவிப் பெயர்களைக்கொண்டு நகர்களுக்குச் சூட்டுகின்றனர். எனவே, ‘என்.சீ.ஒ. காலனி’, ‘டி.ஆர்.ஒ. காலனி’ ‘தாசில்தார் காலனி’, ‘சர்வேயர் காலனி’, ‘எஞ்சினியர் காலனி’ போன்று அயல்மொழிப் பெயர்கள் இடம் பெற்றுவிடுகின்றன. இருக்கின்ற தமிழ்ப் பெயர்களையும் திருத்தமாக எழுதுவதில்லை. பிற மாநிலங்கள், நாடுகளில் பெயர்களை அவரவர் மொழிக்கேற்பத் திருத்தமாக எழுத வேண்டும் என்னும் எண்ணம், மக்களின் இயல்பான உணர்வாய் அமைந்து தொடர்பான ஆணைகள் உடனடியாக நிறைவேற்றப் படுகின்றன. தமிழ்நாட்டில்தான் ஆணைகள் பெயரளவு ஆணைகளாக இருக்கின்றன. எதிர்ப்புக் குரல்கள் பெரிதுப்படுத்தப் படுகின்றன. பிற மாநிலங்களில் ‘இவ்வாறு கூறுவோர் விரட்டப்படுவார்கள்’ என்ற அச்சத்திலும், ‘மண்ணிற்கேற்ப ஒத்துப்போவோம்’ என்ற உணர்விலும், அமைதியாக இருக்கின்றனர். இங்கு பெயர் மாற்றத்தால் தமிழ் வளர்ந்து விடுமா என்ற குரல்தான் ஒலிக்கிறதே தவிர தமிழ் வளர்ச்சியில் பெயர் மாற்றமும், தமிழ்ப் பெயர் சூட்டலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. பெயர் மாற்றுவது தொடர்பான முழு உரிமையும் நம் அரசிற்கு வேண்டும். தகவல் மட்டும் நடுவணரசிற்குத் தொடர் நடவடிக்கைக்காகத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்ப் பெயர் சூட்டப்படும் பொது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்பது ‘பீடி பல்கலைக்கழகம்’ எனச் சுருக்கப்படுவது போல் சுருக்கப்படக்கூடாது என்னும் நிலை வரவேண்டும். பேரறிஞர் அண்ணா, தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது ‘செகரட்டரியேட்டை’ மட்டும்தான் என்று கூறி இன்று வரை ‘செயிண்ட் சியார்சு கோட்டை’ எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்கள் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிப்பிடுவதை நாம் காணலாம். தலமைச் செயலகம் தவிர நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன் அவர்கள் தலைமைச் செயலக வளாகம் என்று குறித்திருக்கக் கூடாதா? இத்தகைய போக்கைப்போக்க தமிழருக்கே உரிய ஐந்நிலப்பாகுப்பாட்டின் சிறப்பை உணர்த்த, ’ஐந்திணைக் கோட்டை’ என்று பெயர் சூட்டக் கூடாது? அல்லது ‘தமிழ்க்கோட்டை’ என்று அழைக்கக்கூடாதா? பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ’கீரீன்வேய்சு சாலை’ என்று ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா? பைந்தமிழ்ச்சாலை என்றுபெயர் மாற்றக் கூடாதா? ‘வெள்ளையர் தெரு(Whites road) , கருப்பர் தெரு(Blacks road) என்ற பாகுபாடு தேவைதானா? வெள்ளிவீதியார் தெரு, வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே! இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் உள்ளன. ‘காவல் ஆணையர் அலுவலகத் தெரு’வில் அவ்வலுவலகமே இப்பொழுது இல்லை. சங்கப்புலவர் காவற்பெண்டு பெயரைச் சூட்டலாமே.
மேலும் இவ்வாறான பெயர்கள் பல தமிழில் அமையாததால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அஞ்சலகங்கள் முதலியனவும் அயல்மொழிப்பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துச் காட்டாக ‘முன்சிபல் காலனி, மதுரையில் உள்ளது. அதனால் இந்தப் பெயரில் அஞ்சலகம் அமைந்துள்ளது. (மதுரை மாநகராட்சியான பின்பும் இப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் ‘மெயின்கார்டுகேட்’ உள்ளது. (மேலவாயில், கீழவாயில்போலத்) தலைவாயில் அல்லது தலைவாசல் எனலாமே! இருக்கின்ற பெயர்களை மொழி பெயர்த்துக் கொண்டிராமல் ஒத்துவரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய பெயர்களைச் சூட்டவேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்?
(இனியும் காண்போம்)
Leave a Reply