தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : இலக்குவனார் திருவள்ளுவன்
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]
இந்தியா என்றால் ‘இந்தி’ யா?
நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள் வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பைக் கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவு விரைவில் நாம் அடங்கி விடுவோம். சான்றாகச் ‘சடுகுடு’ இடத்தைக் ‘கபடி’ பிடிக்க முயன்றபொழுது எழுந்த எதிர்ப்பு சடுகுடு தொலைக்கப்பட்டது போல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவணரசின் திட்டங்கள் – ஊரக வளர்ச்சியாகட்டும், சிறுசேமிப்பாகட்டும், காப்பிடாகட்டும், வங்கியாகட்டும் எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளதுபோல், ‘இந்தியா முழுமைக்குமான’ எதுவாயினும் இந்தியே இடம் பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக்கூறி இடம் பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்தி கால்பதித்து வருகிறது. தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர், நடத்துநர் பதவி உயர்வுக்கான தேர்வை ஆங்கிலத்தில்தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ‘ஒரே நாடு ஒரே முறையான பயிற்சி’ என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது. தொழிலாளர் காப்பீடு மருத்துவமனையிருக்கான நோய்கள் பெயர்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு, சிறுதொழில், குறுந்தொழில், பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிளான அனைத்துத் தொகுப்புகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. நடுவணரசு, நடுவணரசு சார் அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களையும், முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தம் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ தமிழ்வளர்ச்சித்துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள். ‘பயனற்ற தமிழை’ யார் படிப்பார்கள்? ’இமயமலை போல் உயர்ந்த எந்நாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்’ என்று பாவேந்தர் பாரதிதாசன் எச்சரித்ததை மறக்கின்றோமே!
இந்தி(ய) மயம்
மேலும் தமிழ் உள்ள இடத்தையெல்லாம் இந்தி(ய) மயமாக்குவதே இந்திய அரசின் கொள்கை என்பதை அயலகத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் நம்நாட்டில் கூட தமிழ் மருத்துவம் இருக்கும் முறையின் பெயர் ‘இந்திய முறை மருத்துவம் – ஓமியோபதி மருத்துவத்துறை என்பதுதான். இவ்வாறு எங்கும் எதிலும் தமிழ் விலக்கப்படுகையில் தமிழ்நாட்டில் தமிழ் எங்கே வாழும்?
ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி
அதுபோல் ஆங்கிலம் இருக்குமிடத்தில் இந்தியை அமர்த்துவதே இந்திய அரசின் கொள்கை. இதனால் உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் இருக்கும் இடத்தில் மெல்ல மெல்ல இந்திதான் அமரும். உச்சநீதிமன்றத்தின் பிரிவு தமிழ்நாட்டில் அமைந்து, இங்கு முழுமையும் தமிழே ஆட்சி மொழியாக இருந்தாலன்றி, விதிவிலக்கு என்ற பெயரில், சட்டத் தொடர்புடைய அனைத்தும் ஆங்கிலத்திலும் அடுத்து இந்தியிலும்தான் அமையும்.
இவ்வாறு கூறுவதன் காரணம் என்ன?
‘பெரும்பான்மை என்ற பொய்’
இந்தி பெரும்பான்மைப்போர்வையில் நம்மைச் சுருட்டுவதை நாமறிவோம். 1951ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பஞ்சாப்பில் பஞ்சாபி, உருது முதலான மொழியினரையும் இந்தி மொழியினராகக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளனர். இராசசுதானில், இராசசுதானி, உருது, பிரசுபாசா, பிலி, செய்புரி, மார்வாரி, மேவாரி முதலிய பல மொழியினரையும் இந்திபேசுவோராகக் கணக்கில் எடுத்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் இந்துசுதானி, உருது, பீகாரி, மைதிலி, இராசசுதானி, மேவாரி, தேவநாகரி முதலிய 81 மொழி பேசும் மக்களையும் இந்தி பேசும் மக்களாகக் கணக்குக்காட்டியுள்ளனர். இதைபோல், பீகாரில், பீகாரி, மகதி, மைதிலி, போசுபுரி முதலிய பல மொழியினரும் இந்தி மொழியினராகக் குறிப்பிட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் 1931இல் 100க்கு 99பேர் இந்துசுதானி பேசுபவர்கள் எனக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால் 1951இல் 100க்கு 99பேர் இந்தி பேசுநராகக் காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறான பொய்யான புள்ளி விவரங்களுக்குப் பின்னரும் இந்தி பெரும்பான்மையாக இல்லை. இருப்பினும் தாம் உண்மையைக் கூறும் கருத்துப் புரட்சியைப் பரப்பத் தவறிய காரணத்தால் ‘இந்தி’ முதன்மையான, தலைமையான இடத்தைப் பிடித்துள்ளது. இச்சுழலில் செல்வாக்கிற்க்குப் பயனில்லாத தமிழைக் கற்பதைவிட இந்தியைக் கற்பது மேல் என்ற எண்ணம் பலரிடம் தோன்றியுள்ளது வியப்பில்லை. நாளை, தமிழ்நாட்டில் ‘இந்தி அறிந்தவர்கள்’ எனத் தவறான புள்ளி விவரம் காட்டப்பட்டு இந்தி ஒன்றே நின்று நிலவும். இத்தகைய புறச்சிக்கல்களைக் களையாமல் ஆட்சிமொழி சட்டத்தால் எந்த பயனும் இல்லை.
திட்ட உதவிகளும் தமிழ் விலக்கமும்
‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ எனச் செயல்படும் நடுவணசின் உதவித் திட்டங்கள் பல தமிழக அரசிற்குக் கிடைக்கின்றன. இவை தொடர்பான செயற்குறிப்புகள் அறிக்கைக்கு இந்தியும் தற்சமயத்திற்கு ஆங்கிலமுமே வலியுறுத்தப்படுகின்றன. விதிவிலக்கு என்ற பெயரில் தமிழை விலக்கிவிட்டனர். பன்னாட்டு நிறுவன உதவி பெறும் திட்டங்களிலும் ஆங்கிலமும் இந்தியுமே ஆட்சி செய்கின்றன. தற்போது உருவாகும் ‘ஊராட்சி அரசு’ முறையிலும் இந்தி காலூன்றத் தொடங்கியுள்ளது. இவ்வாறு ஆங்கிலமும் இந்தியிலும் தொடர்பு கொள்ளவேண்டிய முறையில் நலத்திட்டங்கள் அமையும் பொழுது ஆட்சி மொழித்திட்டம் எப்படி முழுமையடையும்.
இந்தி விதைப்பு
‘வங்காளியர்’ எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர்’ எனில் மலையாள மொழி பேசுநர்; ‘பஞ்சாபியர்’ எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர்’ எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர்’ எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் ‘இந்தியர்’ எனில் ‘இந்தி மொழி பேசுநர்’ ; பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நாட்டில் மட்டுமல்ல; உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமையை இழுக்கு எனக்கருதி, இந்தியில் உரையாற்றுகிறார். ‘இந்தியா’ என்றால், இந்தி நாடு, இந்துநாடு என்ற எண்ணம் மாற முதலில் நம்நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.
தமிழ் இந்தியா
உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய, வாழ்ந்த, வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம் ‘தமிழ்க் கண்டம்’ என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’ என்பது தமிழ்த் துணைக்கண்ட கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது, ‘தமிழ் இந்தியா’ என்றாவது அழைக்கப்பட வேண்டும்.
நம் பணத்தில் கொழுக்கும் இந்தியை எதிர்ப்போம்
‘இந்தியை எதிர்க்கவில்லை ; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம்’ என்று கூறுவதையும் ‘நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்’ என்று கூறுவதையும் நிறுத்தவேண்டும். நேருவின் உறுதிமொழி என்பது இந்தி முழுமையும் நம்மீது ஏறுவதை ஒத்திப்போடுவதுதானே தவிர நம் மொழிக்குத் தலைமை வாய்ப்பு தருவதல்ல. அதுபோல் இந்தி மொழி இந்தியைத் தாய் மொழியாய் கொண்ட மாநிலத்தில் அவர்களின் பணத்தில் வளர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாம் யார்? ஆனால் அனைத்து மொழிபேசுவோரின் செல்வத்தைச் சுரண்டிக் ‘காட்டாயமில்லை’ என்ற பெயரில் இந்தி பரப்பப்படுவதும் வளர்க்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் இருந்து இந்தியை விரட்டிவிட்டோம் எனக் கூறித் தனியார் பள்ளிகளிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தி வளர்ச்சிக்குப் பெருஞ்செலவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தி வளர்ச்சிக்காக ‘தட்சிணபாரத இந்தி பிரச்சார சபை’ மூலம் நமது செல்வம் செலவிடப்படுவதையும் நிறுத்த வேண்டும். இந்தியைப் படிப்போருக்கும் படிப்பிப்போருக்கும் தரப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இவை மூலமும் நடுவணரசின் பிற துறையின் அமைப்புகள் மூலமும் இந்திக்குச் செலவழித்த தொகையை இழப்பீடுபோல் தமிழ் வளர்ச்சிக்குச் செலவழிக்க நடுவணரசு தர வேண்டும். தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பிற்கு இதுவரை செலவழித்த தொகையும் தமிழுக்குத் தரப்பட வேண்டும். மேலும் இந்தியை மட்டும் தேசிய மொழி என்றும் பிறவற்றை வட்டார மொழிகள் என்றும் கூறுவதை எல்லா இடங்களிலும் நிறுத்த வேண்டும்; ‘தேசிய ஒளிபரப்பை ’ ‘நடுவண் ஒளிபரப்பு’ என்றும் மண்டல ஒளிபரப்பை ‘தமிழ்நாட்டு ஒளிபரப்பு’ என்றும் குறிக்க வேண்டும். நடுவன் ஒளிபரப்பில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டும் இடம்பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில் இவை அமைய வேண்டும்.
(இனியும் காண்போம்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply