தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]
வாழும் மூத்த மொழித் தகுதி
வாழ்விழந்த மொழிக்குத்தான் செம்மொழித் தகுதி தருவோம் எனக்கூறி உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு அத்தகுதி மறுக்கப்படுவதால், ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதியைத் தமிழுக்குத் தந்து தமிழ்க்கண்டத்திலும் ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிலும் பன்னாட்டுத் தூதரகங்களிலும் தமிழுக்குத் தக்க இடம்தர வேண்டும். இச்சிறப்பிற்க்காக நடுவணரசும், பன்னாட்டு அமைப்புகளும் பொருளுதவி வழங்க வேண்டும்.
வரலாற்றிலும் இருட்டடிப்பிற்கு முற்றுப்புள்ளி
தமிழ்மொழி வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அண்டைநாட்டு மலையாள இலக்கிய வரலாற்று நூலில் கூடச் சேரநாட்டுச் செந்தமிழ்ப் பெருமையெல்லாம் கேரளநாட்டிற்கே உரிய பெருமையாகக் காட்டப்படுகிறது. இத்தகியைப் போக்கையகற்ற எல்லா மொழியிலும் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றுச் சிறப்பை அறியும் வகையில் நூல்களின் துணை கொண்டு தேர்வு எழுதும் முறையைக் கொண்டுவரவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் தமிழ்வழி மட்டுமே அஞ்சல்கல்வி நடத்த வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அஞ்சல்வழியில் குறிப்பிட்ட சில மொழிகள் வாயிலாகத் தமிழ் கற்பிக்க வகை செய்யவேண்டும். நடுவணரசின் திட்டங்கள் அனைத்திற்கும் தமிழ்ப்பெயர்களும் சூட்ட வேண்டும்.
தூதரகங்களில் தமிழ்
எல்லா நாட்டுத் தூதரகங்களிலும் தமிழ் தெரிந்தோர் ஒருவராவது பணியாற்ற வேண்டும். அனைத்துத் துதரகப் பணியாளர்களும் தமிழ்மொழி, இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகளைத் தெரிந்திருக்க வகைச்செய்ய வெண்டும்.
ஈழ மலர்ச்சி
கிழக்குப் பாகிசுதானில் இருந்து வந்தவர்களை வரவேற்ற நாம் ‘ஈழத்தில் இருந்து வருவோருக்கு அடைக்கலம் கொடுத்தாலே தவறு’ என்னும் நிலைமையும் ‘தமிழ்’ என்றாலேயே ‘வன்முறை, முனைப்பு வாதம்’ என்ற நோக்கில் பார்ப்பதும், இளைய தலைமுறையினரில் ஒரு சாரரைத் தமிழுக்கு எதிராகத் திருப்பி விடுகிறது; மற்றொரு சாரார் தமிழ்க்கண்ட ஒற்றுமைக்கு எதிராக எண்ணுகின்றனர். உலகின் முதல் மனிதன் பிறந்த ஈழத்தில் தமிழாட்சி இருந்தாலாவது தமிழ்மீது நம்பிக்கை வைக்கலாம். என்றுமே காலூன்றாத் தமிழைப் படிப்பதால் என்ன பயன் என்று பலர் எண்ணுகின்றனர். எனவே நாட்டு ஒற்றுமை கருதியும் தமிழர் ஒற்றுமை கருதியும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்புப் பொறுப்பை நடுவணரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழர் எங்கும் விரட்டியடிக்கப்படும் நிலையை ஆட்சிமொழிச் செயலாக்க முனைப்பு கூர்மழுங்கவே செய்யும்.
தமிழ்த்தேவை மதிப்பை உயர்த்துதல்
அறிவிற்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகக் கல்வி என்று வந்ததால் பெரும்பாலும் எதுவும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களே தமிழ் படிக்க வருகிறார்கள். வந்தபின் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோரும் குறைவு. இவர்கள் ஆசிரியராக மாறும் பொழுது உருவாக்கப்படும் தமிழ் உணர்வும் குறைவு. எனவே தமிழுக்கான தேவை மதிப்பை உயர்த்த மேற்குறித்த செய்ற்பாடுகளுடன் தமிழ் நாட்டில் அமையக்கூடிய நடுவணரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் சார்பு அமைப்புக்ளுக்கும் ஆட்சித்துறைப் பணிகளுக்கும் தமிழில் உயர்பட்டம் பெறுவதைத் தகுதியாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்க்கணியன்களை(சாப்ட்வேர்கள்) மிகுதியாக உருவாக்கிக் கணினி வழி தமிழ்ப் பயன்பாட்டைப் பெருக்குதல், எழுத்துச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் தமிழைச் சிதைக்க வரும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியிடுதல், ‘தமிழ்நாடு’ என்று வேண்டுமென்றே கூறாமல் ‘தமிழ்மாநிலம்’ என்று பயன்படுத்துவதையும், ‘அர்த்தால்’, ‘பந்த்’ போன்ற அயல்மொழிச் சொற்களை வேண்டுமென்றே கலப்பதற்கும் தடைவிதித்தல், கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் இலங்கையில் உள்ளதுபோல் வரிவடிவையே பயனபடுத்தச் செய்தல். கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுகளைத் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டும் வழங்குதல் தமிழ வழிப்பயில்வோருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகைகள் அளித்தல் முதலான பல்வேறு நடவடிக்கைகளும் தமிழின் தேவை மதிப்பை உயர்த்தும்.
தமிழ்நாடு முழுமைக்குமான சட்டம்
தம்ழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழ்நாட்டின் அரசுப் பணியாளர்களுக்கும் அரசு சார் பணியாளர்களுக்கும் மட்டும் உள்ளதன்று; தமிழ்நாடு முழுமைக்கும் உரியது. எனவே தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பிறமாநில அலுவலகங்கள், தன்னாட்சி அலுவலகங்கள் அனைத்திலுமே அலுவல் மொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும். வணிகவியல் படிக்கவே தமிழ் தேவையில்லை; இந்தி அல்லது சமசுகிருதம் கட்டாயம் படிக்கவேண்டும் என்று உள்ள கல்வித்திட்டம் மாற்றப்பட்டாக வேண்டும். தமிழில் எழுதப்படா வணிகக்கணக்குகள் கள்ளக் கணக்காக் கருதப்படும் என்று அறிவித்து வணிகர்களின் செயற்பாடுகள் தமிழில் இருக்க வகைச் செய்யவேண்டும்.
திசை திரும்பவில்லை
கட்டுரைத்தலைப்பு திசை திரும்பிப் போனதாகக் கருதினால் தவறு.
அ. தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படும் ஆணைகள், அறிவிப்புகள், அறிவிக்கைகள் ஆகியவை தமிழில் இருந்தால் மட்டுமே செல்லத்தக்கவை.
அ. தமிழில் உள்ள படியல்கள் மட்டுமே ஏற்கத்தக்கவை.
இ. தமிழில் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் மட்டுமே ஏற்புடையன.
என்னும் நிலை தமிழ்நாட்டில் வருவது அரசாணைகளால் மட்டுமே நிகழக்கூடியது அல்ல என்பதைக் கடந்த காலம் உணர்த்தியுள்ளது.
அரசுப்பணியென குறுகிய வட்டத்தில் இல்லாமல் தமிழ்நாடெங்கும் தமிழ் இருக்கவும் இந்தியாவின் பெயரைத் தமிழுக்குச் சிறப்பு செர்க்கும் வகையில் மாற்றித் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கவும், தமிழ் ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதி பெற்று உலகெங்கும் போற்றி வளர்க்கப்படும் நிலை உருவாகவும் ஆவன செய்து தமிழின் தேவை மதிப்பை உயர்த்தை, இறை வழிபாட்டு மொழி, கல்வி மொழி, வணிக மொழி, அலுவல் மொழி, தொடர்பு மொழி என அனைத்து நிலையிலும் தமிழ் இருக்க வகை செய்தால் தானாகவே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் நிறைவேறும்.அதற்கான வாய்ப்புக்களங்களை உருவாக்க நாம் முனையாததால், விதிவிலக்குகள் பெயராலும், கணினி போன்ற அறிவியல் நலன்கள் பெயராலும், நடுவணரசு திட்டங்கள், உலக அமைப்புத் திட்டங்கள் பெயராலும், தமிழின் பயன்பாடு சுருங்கியதாகவே இருக்கும்.
எனவே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது ஓர் இனிய கனவேயன்றி வேறில்லை.
செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
[பி.கு.: கட்டுரை முடிந்தது. ஆனால், கனவு முடியவில்லை. இன்றைக்கும் நாம் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் நடைபெற்று வருவதாகக் கனவுகாண்கிறோம்.அவ்வப்பொழுது மாவட்ட ஆட்சியர் அல்லது செயலர் அல்லது அமைச்சர், தமிழில் கையொப்பம் இடாதவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பார்கள். அதிலேயே நாம் மனம் நிறைந்து அடுத்த கனவிற்குப் போய்விடுவோம். தமிழ் ஆட்சி மொழி என்பது அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்றில்லாமல், தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் அனைத்து இடங்களிலும் தமிழ் பயன்பாட்டில் இருக்கும் நிலை என்றடைந்தால்தான் உண்மையான செயலாக்கம் எனலாம். மத்திய அரசில் தமிழ் ஆட்சிமொழி யாக வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அதை விட வேகமாக இங்கே உண்மையான தமிழாட்சியும் தமிழ்க்கல்வியும் இருக்கப் பாடுபட வேண்டும். தமிழரல்லாதவர் கைகளில் செல்வாக்கு இருக்கும் வரை இவை யாவும கனவே! இப்படியே போனால், அடுத்த தலைமுறையினருக்கு நம் கனவுகளைத்தான் நாம் ஆவணங்களாக விட்டுச் செல்வோம்! எனவே, தமிழில்லாச் சூழலை அகற்ற அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபடவேண்டும். – அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!]
Leave a Reply