(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)

tha.i.ka.no.po._thalaippu

4

த.இ.க.க.வளர்ச்சிக்காக அமைக்கப்பட வேண்டிய குழுக்கள்:

என்னென்ன குழுக்கள் தேவை எனப் பார்ப்போம்.

  1. செம்மையாக்கக் குழு:

   த.இ.க.கழகத்தின் பாடங்களில் தவறுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு அடிப்படையில் எழுத்து வளர்ச்சி எனக் கூறுவது தவறான விளக்கம். கல்வெட்டில் உள்ளதுபோன்ற எவ்வரிவடிவ மாற்றமும் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றதில்லை. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்களே வரிவடிவ மாற்றமின்மையைக் குறிக்கின்றன. எனவே, இது போன்ற தவறான விளக்கக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது தமிழுக்கு எதிரான கருத்துகளைத் த.இ.க.கழகமே பரப்பும் கொடுமையில் ஈடுபட்டுள்ளது என்ற பழிச்சொல் தருகிறது. ஆதலின் இடம் பெற்றுள்ள பாடங்களையும் இனி இடம்பெறப்போகும் பாடங்களையும் செம்மையாக்குவதற்காகச் செம்மையாக்கக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

  1. மின்னூல் பதிப்புக்குழு:

  தமிழில் உள்ள எல்லா நூல்களும் இணையத்தில் கிடைக்கும் வண்ணம் தமிழ்நூல்கள் தரவு அமையவேண்டும். சமற்கிருதத்தளத்தில் மத்திய அரசு முழுமையான நூற்பதிப்புகளை வழங்குகிறது. நாமும் அவ்வாறு செய்ய வேண்டும்.

. அ.] தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ்நூல்களை வெளியிட்டு வருகின்றன. நாம் அதை மின்னூலாகத் தந்தால் விற்பனைப் பாதிப்பு, காப்புரிமை போன்ற சிக்கல்களால் இயலாமல் போகும். எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் உ.த.நிறுவனம் முதலான நிறுவனங்களும் அனைத்து வெளியீடுகளையும் மின்னூல் வடிவில் அளிக்க அரசாணை பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   அந்நூல்களுக்கான இணைப்பினை நம் தளத்தில் தரவேண்டும்.

ஆ.] பிற தரவுத்தளங்கள் இணைப்பு : தமிழம் வலை, மதுரைத்திட்டம் போன்ற தனியார் தளங்களின் மூலம் பல்வேறு நூல்கள் இணையத் தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை நாம் மறுபடி மின்னூல்வடிவில் வெளியிட முயற்சியையோ பணத்தையோ வீணாக்க வேண்டியதில்லை. இவற்றிற்கான இணைப்புகளைத் தந்தால் போதுமானது.

இ.] மின்னூலாக்கப் பணிகளைப் பொதுமக்களிடத்தில் ஒப்படைத்தல்: இதுவரை மின்னூல் வடிவங்களில் தரா நூல்களை மட்டுமே மின்னூல்வடிவில் தந்தால் போதுமானது. அவற்றை யெல்லாம் கணியச்சிடப் பணியாளர்களை அமர்த்தின் தேவையற்ற பணியமைப்புச் செலவு ஏற்படும். மாறாக மின்னூலாக்கிட வேண்டிய நூற்பட்டியலை அளித்து, அவற்றை யார் வேண்டுமானாலும் தட்டச்சிட்டு வழங்கலாம் எனப் பொதுவில் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இதன் பணிச்சுமை குறையும். இது வழங்கும் நூலறிவு பெருகும். இவர்களுக்கு நடைமுறையில் உள்ள கட்டணமே வழங்க வேண்டும். இதனால் வேலையற்ற இளைஞர்களுக்கும் மகளிருக்கும் பிறருக்கும் வேலைவாய்ப்பும் கிட்டும். அனைத்து நூல்களையும் நாம் படிப்படியாக இணையத்தளத்தில் வழங்க இயலும். இதற்கெனப் பயனர் எண் கொடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும்

ஈ.] அரசு நூலக நூல்களை மின்னாக்கம் செய்தல்: அரசு நூலகங்களில் பழைய நூல்களையும் மலர்களையும் பேண வழியின்றிக் கட்டுக்கட்டாக வெளியேற்றுகிறார்கள். இந்த அழிவை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதைய மலர்கள் எல்லாம் விளம்பர மலர்கள் போல் அமையாமல் சிறப்பான கட்டுரைகள் தாங்கியனவாக உள்ளன.   பழைய ஆராய்ச்சி நூல்கள் போல் இப்போது அமையவில்லை. எனவே, அவற்றையெல்லாம் மின்னூல் வடிவில் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

உ.] மின்னூல் உரிமை அளிப்பவருக்கே நூலக ஆணை: த.இ.க.கழகத்திற்கு மின்னூல் வடிவம் தருபவர்கள் அல்லது மின்னூல் உரிமை தருநருக்கு மட்டுமே நூலக ஆணை வழங்கப் பெற வேண்டும்.

ஊ.] அனைத்துத் தமிழ் அகராதிகளையும் தமிழ்-பிறமொழி அகராதிகளையும் தளத்தில் தரவேண்டும்.

 இவ்வாறு நூல்களை எண்மியமாக்கும் திட்டத்தை (பிறரால் எண்மியமாக்கப்பட்டவற்றை) மீள எண்மியமாக்காமல் பகிர்ந்தும், பொதுமக்கள் ஒத்துழைப்பால் செலவைக் குறைத்தும், தமிழின் எல்லாத்துறை நூல்களும் கிடைக்கும் வண்ணமும் சீராக நிறைவேற்ற வேண்டும்.

  எண்மியமாக்குவதாகக் கூறித் தமிழ்ப்பெயர் தாங்கிய சில அமைப்புகள், மூடநம்பிக்கை நிறைந்த அல்லது தமிழ்நடையில் இல்லாத நூல்களைப் பதிவேற்றி வருகின்றனர். அவ்வாறில்லாமல், கால வரிசைப்படி இலக்கியங்களுக்கு முதன்மை அளித்து எண்மியமாக்க வேண்டும். அல்லது ஒரு பகுதி முற்காலத்திலிருந்தும் மற்றொரு பகுதி இக்காலத்திலிருந்து பின்னோக்கியும் எண்மியமாக்க வேண்டும். அவ்வாறு எண்மியமாக்கும் பொழுது இக்கால கதைகளை இப்போதைக்கு எண்மியமாக்க வேண்டியதில்லை. இவற்றால் கொச்சை வழக்கும் திருந்தா வழக்குமே இடம் பெற்றுத் தீய விளைவையே ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

(இனியும் போகும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar thiruvalluvan2