(தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 தொடர்ச்சி)

 

tha.i.ka.no.po._thalaippu

7

ஙி.) மொழிக்கொலைக்குத் துணை நிற்கக்கூடாது :

  தமிழ் இணையக்கல்விக்கழகம் அரசு சார் நிறுவனம். எனவே, அரசின் கொள்கைக்குமாறான செயல்களில் ஈடுபடவோ அரசின் கொள்கைக்கு மாறான கருத்துகளைப் பரப்பவோ இடம் தரக்கூடாது. தமிழக அரசு, சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச்சிதைவிற்கு எதிரானது. ஆனால், இதன் தளத்தில் முந்தைய தலைவர் வரிவடிவச்சிதைவில் ஈடுபாடுள்ளவர் என்பதால் அதற்குரிய விளக்கத்தைக் காணொளி வாயிலாகப் பரப்பிவந்தனர்.   அதனை அகற்றுமாறு வேண்டியும் அகற்றவில்லை. அதற்கு மாறான உண்மைக் கருத்தை – வரிவடிவச்சிதவைு மொழியையும் கலை இலக்கியத்தையும் இனத்தையும் அளிக்கும் என்பதை – விளக்கும் கருத்துகளைப் பதிய வாய்ப்பு தரவில்லை. எனினும்

அரசின் கொள்கைக்கு மாறாகவும் அரசிற்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வரிவடிவச் சிதைவு குறித்த காணொளி இதன் தளத்தில் உள்ளது. உடன் அதனை அகற்ற வேண்டும்.

என அரசிற்குத் தொடர் வேண்டுகோள் விடுத்தபின்னர் தமிழுக்கு எதிரான அக்காணொளி அகற்றப்பட்டது. எனினும் இனிமேல், இணையக்கல்விக் கழகத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் அரசிற்கு எதிரான தங்கள் கருத்துகளைப் பரப்பும் தளமாக இதன் தளத்தைப் பரப்பப் பயன்படுத்துவதை அடியோடு நிறுத்தும் வகையில் ஆவன செய்ய வேண்டும்.

ஙு.) அயல்மொழியருக்கான தமிழ்க்கல்வி:

  தமிழ் இணையக் கல்விக்கழகம்,   இப்போது மழலைக்கல்வி முதல் பட்டம் வரை ஐந்நிலைக் கல்வித்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இது தவிர ‘பயணியர் தமிழ்’ என்ற இணைப்பின் மூலம் பேச்சுவழக்கையும் கற்பித்து வருகிறது. பொதுவாகத் தமிழ்நாட்டில் தமிழே தெரியாத அயலவர் மிகுதியாகப் பணியாற்றுகின்றனர். தமிழராக இருந்தும் தமிழில் படிக்காமல் தமிழறியாதவராகப் பலர் பணியாற்றுகின்றனர். இதனைப்போக்கத் ...கழகம் அயல்மொழியினருக்கான தமிழ்க்கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

  தமிழ்க்கல்வியாளர் பொள்ளாச்சி நசன், 32 அட்டைகளைக் கொண்டு   உலக மொழிகள் வாயிலாக எளிய முறையில் 1 திங்களில் கற்கும் வகையில் தமிழ் கற்பித்து வருகிறார். பல நாட்டினரும் இணைய வழியாக இதனைப் பயின்று தமிழில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். எனவே. இத்துறையில் பட்டறிவு கொண்ட பொள்ளாச்சி நசன் போன்றோரைக்கொண்டு   கல்வித்திட்டத்தை உருவாக்கலாம்.

 அயல்மொழியினருக்கான

1) அடிப்படைத்தமிழ்

2) தொடக்கநிலைத் தமிழ்

3) பணிநிலைத் தமிழ்

என்ற வகையில் கல்வித்திட்டத்தை அமைத்து மேற்கொண்டு மேற்கொண்டு பயில விரும்புவோர் நடைமுறையில் உள்ள பட்டத்தேர்வை எழுதும் வாய்ப்பை நல்கலாம். பணிநிலைத் தமிழில் ஒரு பகுதி பொதுவானதாகவும் மற்றொரு பகுதி அவரவர் பணிக்கேற்ற தமிழறிவைப் பெறும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.

  இன்றைக்குப் பேச்சுவழக்கில் உள்ள பிறமொழிச் சொற்களையெல்லாம் தமிழ் என்றே படித்த மக்கள்கூடத் தவறாகக் கருதுகின்றனர். எனவே, பாடத்திட்டத்தில் பேச்சு நடைக்கு முதன்மை கொடுக்கும் மொழியியலாளரைச் சேர்ப்பின் தமிழ் வளராது என்பதைக் கருத்தில் கொண்டு படைப்பாளர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

 சரியான தமிழ்மொழி வரலாற்றைக்கூறும் வகையிலும் முறையான தமிழ் இலக்கியப் பொருள்களைத் தரும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும்.

  இதனடிப்படையில் தமிழ்நாட்டில் பணியாற்றும் அயல்மொழியினர் தமிழ்க்கல்வி பெற வேண்டும் எனவும் ...கழகத்தின் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறவேண்டும் எனவும் அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களும் பிற நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களைத் தமிழ்த் தேர்ச்சிக்கு ஊக்கப்படுத்தவும் அதற்கென ஊக்கத்தொகை வழங்கவும் மற்றோர் ஆணை பிறப்பிக்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கல்வித்துறை தமிழ்வழிப்பள்ளிகளை மூடி வரும் சூழலில் அயல்மொழியர் அனைவருக்குமான தமிழ்க்கல்வியாவது நம் நாட்டில் தமிழ் காக்கப்பட வழிவகை செய்யட்டும்!

(இனியும் போகும்)

 – இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar thiruvalluvan+