தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்

சூசையப்பர்  கல்லூரி

திருச்சிராப்பள்ளியில் உள்ள  தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது.

கருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா.

 ‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம். ஆனால், தலைப்புகள் யாவும் வலிந்து குறைகாணும் நோக்கிலேயே உள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்களையும் முந்தைத் தமிழர்களையும் பழிப்பதற்காக வேண்டுமென்றே கருத்தரங்கத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன எனப் பிறர் கருதுவதில் தவறில்லை.

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எடுத்துக்காட்டாக முதல் தலைப்பை எடுத்துக் கொள்ளலாம்.

‘தொல்காப்பியம் வரையறுக்கும் பெண்மீதான கட்டுப்பாடுகள்’ என்பதே அந்தத் தலைப்பு. தொல்காப்பியர் உணர்த்தும் பெண்மையின் சிறப்பு குறித்து ஆராய வேண்டியவர்களைத் தவறான பாதையில் திணிக்க விரும்புகின்றது இக்கல்லூரி.

இது முதலான 19 தலைப்புகள் வேண்டுமென்றே தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்தான் அமைந்துள்ளன. இதழியல் துறைக்கும் இந்த இலக்கியங்களுக்கும் என்ன தொடர்பு?

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.

என்று தொல்காப்பியர் களவியலில் கூறுவதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பெண்களுக்கு எதிரான கருத்தாகக் கூறுவர். சிலர் காதல் சுவைக்காக இவை தேவை எனக் கூறப்படுவதாகவும் சொல்லுவர்.

செறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான.

எனப்பெண்ணின் பெருமையைத் தொல்காப்பியர் கூறுகிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைப் பெருமையாகக் கருதும் தமிழர் பண்புகளை ஆராயாமல்  எதிரான கருத்துகளைக் கற்பிப்பது தவறல்லவா?

செறிவு என்பது செறிந்த அறிவையும் நிறைவு என்பது நிறைவான பண்பையும் செம்மை என்பது செம்மையான ஒழுக்கத்தையும் குறிக்கும். செப்பு என்பதைச் சொல்லுதல் எனப் பிறர் குறிப்பிடப் பேரா.சி.இலக்குவனார் ‘கூறத் தகுவனவற்றைக் கூறல்’ என்று விளக்குகிறார். ஆகப் பெண்கள் தகாதவற்றைச் சொல்லார் எனப் பெருமையாகத்தான் தொல்காப்பியர் கூறுகிறார்.

பிற்காலத்தவர் பெண்களை அறிவற்றவர்களாகக் கருதியதும் உண்டு. பெண்கள் அறிவும் அரிதில் அமையும் -உயர்வு என்றும் பெருமை என்றும் சொல்லப்படும் – அருமை நலனும் உடையவர்கள் என்றும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

இவ்வாறு பெண்களைச் சிறப்பிக்கும் தொல்காப்பியத்தை இழிவு படுத்தும் நோக்கில் கட்டுரை எழுதியவர்கள் ஆசிரியர்களாக இருப்பது தமிழுக்குத் தீதல்லவா?

‘சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்’ என்று ஒரு தலைப்பு. மிகச்சிறந்த இல்லறத்தை வாழ்வியலறத்தைச் சொல்லும் சங்க இலக்கியங்களைத் தவறான கண்ணோட்டத்தில் திரித்துக் கூறவே இத்தலைப்பு.

கதைச்சுவைக்காகக் கூறப்படும் பரத்தையர் பழக்கத்தைதச் ‘சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்’ எனக் காட்ட விரும்புகிறது இக்கல்லூரி. திரைப்படங்களில் தலைவன் எதிரியின் பெண்ணையே பெரும்பாலும் காதலிப்பான். இது கதைச்சுவைக்காகவும் பாத்திர எண்ணிக்கை குறைப்பிற்காகவும் கூறப்படுவது. அப்படி என்றால் எதிரியின் பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று மரபு இருப்பதாகக் கூற முடியுமா?

சிலப்பதிகாரத்தில் கோவலன் கலையார்வத்தாலும் சந்தர்ப்பச் சூழலாலும் மாதவியிடம் சென்றுள்ளான். எனினும் அதனை யாரும் பாராட்டவில்லை. கண்ணகி கோவலனிடம் “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்கிறார். அப்படியானால் கணிகையிடம் அவன் சென்றதை மன்பதை ஏற்கவில்லை, போற்றவில்லை என்றுதானே பொருள்.

கோவலன், கண்ணகி பெற்றோர், பிறர் என யாரும் ஒருவருக்கு மேற்பட்ட துணையை நாடியதாக – கூடா ஒழுக்கத்தில் வாழ்க்கை இணையைத் தேடியதாகக் – குறிப்பு இல்லை. அவ்வாறிருக்க ஒரு செய்தியை ஒட்டு மொத்த பண்பாடாக இழித்துக் கூறுவது தவறலலவா?

‘சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறு வாசிப்பு’ என்னும் தலைப்பே கண்ணகியை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் குறிக்கப்பட்டதாகத்தான் நன்கு தெரிகிறது.

எனவேதான் இக்கருத்தரங்கத்திற்குத் தமிழன்பர்களும் தமிழ்ப்பண்பாட்டை உணர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த்தினசரி மின்னிதழ் < https://dhinasari.com/featured/62188-mass-campaign-against-trichy-saint-joseph-college-atrocitiies-degrading-tamil-literatures.html > ,  தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் இக்கல்லூரி நிருவாகத்தினர் மீது ஆளுநர் நடவடிக்கை  தேவை எனக் குறிப்பிட்டுள்ளது.

பாசகவின் எச்சு.இராசா தன் சுட்டுரைப் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொய்யைத் திரித்து பரபரப்பு ஏற்படுத்த விரும்புபவர் எதிர்ப்பதால்தான் சிலர் சமய நோக்கில் தாக்குதல்  தொடுப்பதாகத் தவறாக எண்ணுகின்றனர். ஆனால், மதக்கலவரங்களை விரும்புவர்களுக்கு இக்கருத்தரங்கம் வாய்ப்பாக அமைகிறது என்பதே உண்மை. இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சூசையப்பர் கல்லூரியின் நோக்கம் ஆராய்ச்சிதான் என்றால் இந்துமக்கள் கட்சி குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வரங்கம் நடத்த முன்வருவார்களா? மாட்டார்கள் அல்லவா?

சூசையப்பர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் கருத்தரங்கு குறித்துக் கேட்டேன். இதுவரை 96 ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன என்றும் தொல்காப்பியம் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளதாகவும் அதுவும் சிற்பபைக் கூறுவதாகவும் பிற கட்டுரைகளும் தமிழின் சிறப்பை உணர்த்துவதாகவும் கூறினார். கட்டுரைகள அனுப்பி வைக்குமாறு வேண்டியதற்கு அவற்றைத் தொகுத்ததும் அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆக கருத்தரங்கத்தாரின் தவறான முயற்சிக்கு ஆய்வாளர்கள் பலியாகவில்லை எனத் தெரிகிறது.

தமிழ் ஆட்சிமொழி-பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன், “பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில் தமிழ்ப்பண்பாடு பெண்களைத் தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக்கருத்தினைப் பதிய விடக் கூடாது.” என்றும் “இத்தகைய இழிவான நிகழ்வுகள் நடைபெறுவதை அரசு அனுமதிக்காது” என்றும் தனது சுட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாகக் கருத்துரிமைக்கு மதிப்பளிப்பவர்கள்தாம் இப்பொழுது இக்கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மார்க்சியத் திறனாய்வாளரான பேரா.மறைமலை இலக்குவனார், மிகவும் கேவலமான நிலைக்குப் பெண், தமிழிலக்கியங்களில் இழிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போல் சித்தரிக்கும் தூய சூசையப்பர் கல்லூரியின் “தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண்வன்கொடுமைகள்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் தமிழுக்குப் பொருந்தாதது; கல்விக்குப் பெருமையளிக்காது. இதனை அறிவுக்குறும்பர்களின் அற்பச்செயல் என வன்மையாகக் கண்டிக்கிறேன்” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவின் குறிப்புரைகளில் சிலரும் வெவ்வேறு தளங்களில் பலரும் எதிர்ப்பான கருத்துக்ள தெரிவித்துள்ளனர்.

இக்கருத்தரங்கம் தடை செய்யப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளன.

பேரா.செ.இரா.செல்வக்குமார் “மிகவும் மகிழ்ச்சி. பொதுவாக எந்தக் கருத்தரங்கத்தையும் தடுக்கும் நடவடிக்கையை நான் வரவேற்பவன் அல்லன். இதனையும் மிகுந்த தயக்கத்துடனேயே என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன். கருத்தரங்க அமைப்பாளர்கள் அறிந்தே தீயவழியில் செல்ல முயன்றனர். இந்தத் தடையால் அவர்கள் அவர்களின் தீயசெயல்களை நிறுத்தப்போவதுமில்லை. இப்படியான தீய போக்குகள் தவறு என்று அவர்கள் உள்ளார உணர்ந்தால்தான் தீர்வு. துணிவான முடிவை எடுத்த அமைச்சர் பாண்டியராசன் அவர்களுக்கு நன்றி” எனக் கருத்தரங்கத்திற்கான அமைச்சரின் தடை முயற்சி குறித்துக் கூறியுள்ளார்.

உண்மையில் தடை விதிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. ஏனெனில் கல்லூரி கசா புயலால் ஒத்திவைக்கப்பட்டதாகத்தான் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டதாகவோ அரசால் தடை விதிக்கப்பட்டடதாகவோ தெரியவில்லை.

ஒளிவண்ணன் கோபாலகிருட்டிணன், “நாம் உடனடியாகச் செய்யவேண்டியது இக்கருத்தரங்கை நடத்தும் துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் உடனடியாக மின்னஞ்சல்கள் வாயிலாக நம்முடைய எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டும்” என முகநூலில் பதிந்துள்ளார்.

முனைவர் முத்துவேலு, “இது போன்ற கருத்துகளை நடந்த முனைபவர்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும்.தமிழ் இலக்கியங்களின் சிறப்பைக் குலைப்பதா அல்லது தமிழ்ப் பகைவர்களுக்குத் துணைபோவதா என்பதைத் துணிவுடன் எடுத்துக் கூறட்டும்”| என முகநூல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தினர்,  “கருத்து உரிமையின் (சுதந்திரத்தின்) மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், திருச்சியில் ஒரு கல்லூரியின் பன்னாட்டுக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியை ஐயப்பட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளனர்.

முற்போக்கு என்ற பெயரில் இன்றைய நிலைப்பாட்டு அடிப்படையில் அச்சூழலுக்குப் பொருந்தாத முந்தையக் கால வரலாற்றைத் திரித்துச் சொல்வதையும் எழுதுவதையுமே சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கருத்து உரிமை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும் இழிவு படுத்தும் நோக்கில் எழுதுவதும் கண்டிக்கத்தக்கனவே!

பல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆசிரியர்களின் தகுதியைத் தரப்படுத்துவதற்காகப் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கல்வியியல், ஆராய்ச்சிப் புலங்களில் பின்வருமாறு மதிப்பெண்கள்வரையறுத்துள்ளது.

ஆய்வுத்தாள்கள் 30% மதிப்பெண்

ஆய்வு வெளியீடு 25% மதிப்பெண்

ஆய்வுத் திட்டம் 20% மதிப்பெண்

ஆய்வு வழிகாட்டி 10% மதிப்பெண்

பயிற்சிகள் கருத்தரங்கங்கள் 15% மதிப்பெண்

இவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் பெறவே பெரும்பான்மையர் கருத்தரங்கங்களில் பங்கேற்கவும் கருத்தரங்கங்கள் நடத்தவும் செய்கின்றனர்.  இவர்களுக்கு ஆய்வு நோக்கம் என்பது அறவே இல்லை. எனவே, பல ஆய்வுகள் தரமாக இருப்பதில்லை. இப்போது திட்டமிட்டுள்ள கருத்தரங்கமும் அப்படிப்பட்டதுதான். அத்துடன் தமிழை இழிவுபடுத்த வேண்டும் என்ற உட்கிடக்கையும் உள்ளது என்பது தலைப்புகளில் இருந்து தெரிகிறது. எனவே, கருத்தரங்கத்தைத் தடை செய்தால் மட்டும் போதாது. இதன் ஏற்பாட்டாளர்களுக்குப் பதவி யிறக்கம், பணிப்பறிப்பு முதலான  தண்டனைகளும் தர வேண்டும்.   

தமிழை இழிவு படுத்துவோரைக் கண்டிப்போம்! தண்டிப்போம்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்