தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது ! – சி.இலக்குவனார்
உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர்.
மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின் தாய் என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும். தமிழே சிதைந்து ஒன்று பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள மொழிகளில் வெளிப்படுகின்றன.
யானை கண்ட குருடர்கள் போன்று இன்று மொழி நூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்கின்றனர். உண்மை நிலை வெளிப்படுவதாக.
பேராசிரியர் சி.இலக்குவனார்
பழந்தமிழ்: பக்கம் 39
Leave a Reply