தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 : மயிலை சீனி.வேங்கடசாமி
(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 1/4 தொடர்ச்சி)
தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன?
2/4
தீயில் எரிந்த ஏடுகள்
வரகுணராம பாண்டியன், அதிவீரராம பாண்டியன் என்பவர்கள் திருநெல்வேலியில் அரசாண்டிருந்த பாண்டிய அரசர்கள். இருவரும் தமையன்தம்பி முறையினர். பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பாண்டி நாடு அயல் நாட்டவர் கையில் சிக்கியபோது, அவர்களின்கீழ்ச் சிற்றரசராக இருந்தவர்கள். இவர்களில் அதிவீரராம பாண்டியன் தமிழில் நைடதம் என்னும் காவியத்தையும், வேறு நூல்களையும் இயற்றிப் புகழ் படைத்தவர். இவர் இயற்றிய நைடதத்தைப் பற்றி ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ (ஒளடதம் – அமிர்தம்) என்னும் பழமொழி வழங்குகிறது. இவருடைய தமையனாரான வரகுணராம பாண்டியனும் கல்வியில் சிறந்த புலவர். வரகுணராமனின் மனைவியும் சிறந்த புலமை வாய்ந்தவர். அதிவீரராமன் நைடதத்தை இயற்றி, அதனைத் தம் தமையனிடம் அனுப்பி, அதைப் படித்துப் பார்த்து அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டாராம். தமையனான வரகுணன் அந்நூலைத் தம் மனைவியிடம் கொடுத்து மதிப்புரை கூறும்படி சொன்னாராம். அரசியார் அதைப் படித்துப் பார்த்து, இதன் நடை, வேட்டை நாயின் ஓட்டம்போல் இருக்கிறது என்று கூறினாராம். வேட்டை நாய் வேகமாக ஓடி வேட்டைப் பொருள் சிக்கியவுடன் ஓட்டத்தின் வேகம் குறைவது போல, இந்நூலில் சுயம்வரகாண்டம் வரையில் இருக்கிற செய்யுள் நடைபோல் மற்றக் காண்டங்களில் இல்லை என்பது கருத்து.
இத்தகைய புலமை வாய்ந்த அரசகுடும்பத்தில் அருமையான ஏட்டுச்சுவடிகள் ஏராளமாக இருந்தன. வரகுணராமன் காலமான பிறகு, அவருக்குச் சந்ததி இல்லாதபடியால், அவருடைய சொத்துகள் திருநெல்வேலியில் கரிவலம்வந்த நல்லூரில் இருக்கும் பால்வண்ண நாதர் கோவிலுக்குச் சொந்தம் ஆயின. அவற்றுடன் அவருடைய நூல் நிலையத்திலிருந்த ஏட்டுச்சுவடிகளும் கோவிலுக்குச் சேர்ந்து விட்டன அவருடைய சொத்துகளைப் பெற்றுக்கொண்ட கோயில் அதிகாரிகள், வரகுணராமனுக்கு ஆண்டுதோறும் படையலிட்டு (சிரார்த்தம் செய்து)வருகின்றனராம்.
கோவிலுக்குக் கிடைத்த வரகுண பாண்டியனுடைய நூல் நிலையத்து ஏட்டுச்சுவடிகள் காலப்போக்கில் கவனிப்பார் அற்றுச் சிதிலமாய்ப் போயின. சில காலத்துக்குப் பிறகு அந்தச் சுவடிகள் கோவில் கணக்கு ஏட்டுச் சுவடிகளுடன் கலந்துவிட்டனவாம். பிற்காலத்தில் அந்த ஏட்டுக் குப்பையை ஓமத்தீயில் எண்ணெயில் தோய்த்துக் கொளுத்திவிட்டார்களாம்.
1889ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதய்யர், பால் வண்ண நாதர் கோயில் ஏட்டுச்சுவடிகளைப் பார்ப்பதற்குக் கரிவலம்வந்த நல்லூருக்குப் போனாராம். போய்க் கோவில் தருமகர்த்தாவைக் கண்டு பேசினாராம். அதற்குத் தருமகர்த்தா சொன்ன விடை இது:
“குப்பைகூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூளங்களையெல்லாம் ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள். பழைய ஏடுகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஓமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.”
இது தெரிந்த செய்தி; தெரியாத செய்திகள் எத்தனையோ!
மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூல்நிலையத்தில் இருந்த ஏட்டுச் சுவடிகளில் பல, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னர் தீப்பிடித்து எரிந்துபோயின. அவற்றில் அச்சில் வராத சிலபல ஏட்டுச்சுவடிகளும், இருந்தனவாம். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பத்து உரைகளும், அதில் இருந்தனவாம்: வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம்.
ஆற்று வெள்ளத்தில் ஏட்டுச்சுவடிகள்
பதினெட்டாம் பெருக்கு ஆற்று வெள்ளத்தில் போடப்பட்ட ஏடுகள் எத்தனை என்று கணக்குச் சொல்லமுடியாது. கவிராயர்கள், புலவர்கள், வித்துவான்களின் வீடுகளில் இருந்த ஏட்டுச்சுவடிகள், அவர்கள் பரம்பரையில் வந்த படிப்பில்லாத முழுமக்களிடம் சிக்கி விடும். கல்வி வாசனையற்ற அவர்கள் அந்த நூல்களின் அருமை பெருமைகளை அறியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும், இடத்தை அடைத்துக்கொண்டு வீணாகக் கிடக்கிறதே என்ற கவலையுடன் அவற்றைக் கொண்டு போய் ஆற்று வெள்ளத்தில் போட்டுவிடுவார்கள். இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1890ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக்கொண்டு அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் திருநெல்வேலிக்குச் சென்றார். சென்று, திரிகூடராசப்பகவிராயரை உடன் அழைத்துக் கொண்டு, கவிராயரின் உறவினரான திருநெல்வேலி தெற்குப் புதுத் தெரு வழக்குரைஞர் சுப்பையாபிள்ளை வீட்டுக்குப் போய் அவரைக் கண்டார். கண்டு, பரம்பரையாக அவர்கள் வீட்டில் இருந்துவந்த ஏட்டுச் சுவடிகளைக் காட்டும்படி கேட்டார். அதற்கு, ஆங்கிலம் படித்த, ஆனால், தமிழ் படிக்காத அந்த வழக்குரைஞர் கூறினாராம்:
“எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து பயனில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பயனில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று எண்ணினேன்.. ஆற்றிலே போட்டுவிடலா மென்றும் ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டி ஆற்றில் விடுவது வழக்காறு என்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் வாய்க்காலில் விட்டுவிட்டேன்.”
இச்செய்தியை வழக்குரைஞர் ஐயா கூறிமுடித்த பிறகு, உடன் வந்திருந்த திரிகூடராசப்பக் கவிராயர் சொன்னாராம்: “நான் வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச்சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டுபோன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து, அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே இழுவறைப்பேழையின்(பீரோவின்)மேல் வைத்தேன்.
அவர் பிடுங்கி இழுவறைப்பேழையின்(பீரோவின்)மேல் வைத்த கட்டிலிருந்துதான் சாமிநாதையருக்குத் திருப்பூவணநாதர் உலாவும், சிலப்பதிகாரத்தைச் சேர்ந்த சில ஏடுகளும் கிடைத்தனவாம்.
இதுபோன்ற பதினெட்டாம் வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் விடப்பட்ட ஏடுகளின் எண்ணிக்கை எத்தனையோ! அவற்றில் என்னென்ன நூல்கள் போயினவோ, யார் அறிவார்?
மயிலை சீனி.வேங்கடசாமி: மறைந்துபோன தமிழ்நூல்கள்
(தொடரும்)
Leave a Reply